$
Chennai Rain: தமிழ்நாட்டில் ஆங்கேங்க கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மிதந்து கொண்டிருக்கிறது. டிசம்பர் 4 மிக்ஜம் புயல் (Michaung cyclone) கரையை கடக்க உள்ள நிலையில், இன்னும் இரண்டு தினங்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என்றும், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னையில் மழைநீரில் மிதக்கும் மக்கள், இதனால் பல நோய்களுக்கு உள்ளாகின்றனர். அதுவும் மழைநீரில் நடப்பதால் சேற்றுப்புண்ணால் மக்கள் அவதிப்படுகின்றனர். மழைக்காலங்களில் மக்கள் பொதுவாக சந்திக்கும் ஒரு நிலை சேற்றுப்புண். இது ஏற்படுவதால், நடப்பதற்கு சிரமம் ஏற்படும். அதுவும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். இல்லையெனில் காலையே எடுக்கும் நிறை உருவாகலாம். சேற்றுப்புண்ணில் இருந்து தப்பிக்க நாங்கள் உங்களுக்கு சில வழிகளை கூறுகிறோம். இதனை படித்து பயன் பெறவும்.
மஞ்சள் பூசவும்
நீங்கள் சேற்றுப்புண்ணால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா? அப்போ கட்டாயம் மஞ்சளை தடவவும். சேற்றுப்புண் உள்ள இடத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவிய பின், மஞ்சளை அரைத்து பூசவும். இது சேற்றுப்புண்ணுக்கு சிறந்த மருத்துவமாக திகழ்கிறது. இதில் உள்ள பூஞ்சை எதிப்பு பண்புகளே இதற்கு காரணம்.
இதையும் படிங்க: விடிய விடிய கொட்டித் தீர்க்கும் கனமழை.! இந்த நோயெல்லாம் வரலாம்..
மருதாணி இடவும்
மருதாணி இலையை நன்கு கழுவி, அதனுடன் கொஞ்சம் மஞ்சள் வைத்து அரைத்துக்கொள்ளவும். இதனை சேற்றுப்புண் உள்ள இடத்தில் இடவும். இது சேற்றுப்புண்ணை குணப்படுத்த சிறந்த தேர்வாக இருக்கும். ஆனால் அதிக குளிர்ச்சி உடையவர்கள், இதனை பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் மருதாணி இலையும் குளிர்ச்சியானது.
தேங்காய் எண்ணெய் தடவவும்
நீங்கள் மழைக்காலங்களில் வெளியே செல்லும் போது பாதம் மற்றும் கால் விரல் இடுக்குகளில் தேங்காய் எண்ணெயை தடவிக்கொள்ளவும். மேலும் இதனுடன் மஞ்சளையும் சேர்த்து தடவிக்கொள்ளவும். இது சேற்றுப்புண்ணில் இருந்து உங்களை காக்க உதவும்.
உப்பு நீரில் ஊறவைக்கவும்
மழைக்காலங்களில் நீங்கள் வெளியே சென்று வரும் போது, அகலமான பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரில் உப்பு சேர்த்து உங்கள் பாதங்களை ஊற வைக்கவும். 5 நிமிடம் கழித்து பாதங்களை பருத்தி துணி கொண்டு துடைக்கவும். இவ்வாறு செய்து வந்தால், சேற்றுப்புண் ஏற்படும் அபாயம் குறையும்.
வேப்ப எண்ணெய் உபயோகிக்கவும்
நீங்கள் மழைக்காலங்களில் வெளியே செல்லும் போது பாதம் மற்றும் கால் விரல் இடுக்குகளில் வேப்ப எண்ணெய் தடவிக்கொள்ளவும். மேலும் இதனுடன் மஞ்சளையும் சேர்த்து தடவிக்கொள்ளவும். இது சேற்றுப்புண் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.
இந்த பதிவில் கூறப்பட்டுள்ள குறிப்புகளை கொண்டு சேற்றுப்புண்ணை சரி செய்யவும். இவற்றை செய்தும் உங்களது சேற்றுப்புண் குணமடையவில்லை என்றால், உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. அவர்கள் உங்களுக்கு சரியான தீர்வை சொல்ல முடியும்.
Image Source: Freepik