$
Period Back Pain Causes And Prevention: மாதந்தோறும் பெண்களின் உடல்நிலையில் ஏற்படும் மாற்றத்தின் காரணமாக மாதவிடாய் ஏற்படுகிறது. இந்த நேரத்தில், பெண்கள் பல்வேறு விதமான பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். முதுகு வலி, மார்பு வலி, வயிறு வலி, கால் வலி என அனைத்து விதமான பிரச்சனைகளையும் சந்திக்கின்றனர். இப்போது மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் முதுவலிக்கான காரணங்களையும், அதனைத் தடுக்கும் முறைகளையும் காணலாம்.
மாதவிடாய் முதுகுவலி
பெண்கள் சந்திக்கும் பிரச்சனையான மாதவிடாய் முதுகுவலி ஒரு பொதுவான பிரச்சனை என்றாலும் பெண்ணின் அன்றாட வாழ்க்கையை கணிசமாக பாதிக்கிறது. எனவே மாதவிடாய் முதுகு வலியின் சாத்தியமான காரணங்களைக் கண்டறிவதுடன், அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துவதும் அவசியமாகும். இதன் மூலம் மாதவிடாய் காலத்தில் முதுகுவலியால் ஏற்படும் அசௌகரியங்களைக் குறைக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Food For Early Periods: மாதவிடாய் சீக்கிரம் வர சாப்பிட வேண்டிய உணவுகள்!
மாதவிடாய் முதுகு வலிக்கான காரணங்கள்
மாதவிடாய் காலத்தில் ஏற்படும் முதுகுவலிக்கான சாத்தியமான காரணங்களையும், அதனைத் தடுக்க உதவும் சில குறிப்புகளையும் இங்கு காண்போம்.
புரோஸ்டாக்லாண்டின்கள்
மாதவிடாய் காலத்தில் புரோஸ்டாக்லாண்டின்கள் என்ற ஹார்மோன் சுரக்கிறது. இந்த ஹார்மோன் பெண்ணின் கருப்பையை சுருங்கச் செய்து முதுகு வலியை ஏற்படுத்துகிறது.
இடுப்பு நெரிசல்
மாதவிடாயின் போது, பெண்களின் இடுப்புப் பகுதியில் இரத்த ஓட்டம் அதிகரித்து வீக்கம் மற்றும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இது முதுகுவலிக்கு வழிவகுக்கிறது.
எண்டோமெட்ரியோசிஸ்
என்டோமெட்ரியோசிஸ் நிலை என்பது கருப்பையின் புறணி திசுக்கள் அதற்கு வெளியே வரும் போது ஏற்படுவதாகும். இது மாதவிடாய் காலத்தில் கடுமையான முதுகு வலியை ஏற்படுத்தும்.
ஹார்மோன் மாற்றங்கள்
மாதவிடாய் சுழற்சி காலத்தில் ஹார்மோன் மாற்றங்கள் நிகழும். இவை கீழ் முதுகில் உள்ள தசை நார்கள் மற்றும் தசைகள் சுருங்குவதற்கு காரணமாக அமைகிறது. இதன் விளைவாக முதுகில் வலி ஏற்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Postpone Periods Naturally: இயற்கையான முறையில் மாதவிடாய் தள்ளி போக என்ன செய்ய வேண்டும்?
மாதவிடாய் முதுகு வலி தடுப்பு நடவடிக்கைகள்
பெண்கள் அன்றாட வாழ்க்கையில் செயல்படுத்தும் சில நடவடிக்கைகள் மூலம் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் முதுகுவலியைக் குறைக்க முடியும்.
வெப்ப சிகிச்சை
வெதுவெதுப்பான குளியல் அல்லது ஹீட்டிங் பேடைப் பயன்படுத்துவதன் மூலமாக, மாதவிடாய் காலத்தில் ஏற்படும் முதுகு வலியிலிருந்து தற்காலிக நிவாரணம் பெறலாம். இவை முதுகில் தசைகளை தளர்த்த உதவுகிறது.
ஆரோக்கியமான உணவு
காய்கறிகள், பழங்கள், தானியங்கள், மெலிந்த புரதங்கள் கொண்ட உணவு போன்ற சீரான உணவுகள் வீக்கத்தைக் குறைத்து, மாதவிடாய் தொடர்பான அசௌகரியத்தைக் குறைக்கிறது.
வலி நிவாரணிகள்
ஸ்டீராய்டல் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகளை வலி நிவாரணிகளாகப் பயன்படுத்தலாம். இது முதுகு வலிக்கு தற்காலிக நிவாரணம் ஆகும். எனினும் எந்தவொரு மருந்தையும் எடுத்துக் கொள்ளும் முன் சுகாதார நிபுணரை அணுகுவது அவசியம் ஆகும்.
நல்ல தோரணைப் பயிற்சி
உடலைச் சரியான தோரணையில் பராமரிப்பது, மாதவிடாயின் போது ஏற்படும் முதுகின் அழுத்தத்தைக் குறைப்பதுடன் வலியைப் போக்க உதவுகிறது.
உடற்பயிற்சி மேற்கொள்ளுதல்
யோகா, நடைபயிற்சி, நீச்சல் உள்ளிட்ட மிதமான உடற்பயிற்சி செயல்பாடுகளில் ஈடுபடுவது முதுகு தசைகளை வலுப்படுத்துகிறது.

இதில் கூறப்பட்ட சாத்தியமான காரணங்களைப் புரிந்து கொள்வதன் மூலம் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் பெண்கள் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் முதுகுவலியைக் குறைக்க முடியும். மேலும், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் முதுகுவலி கடுமையாகவோ, தொடர்ந்து இருந்து வந்தாலோ மருத்துவ ஆலோசனையைப் பெறுவது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: Menstrual Cup: மென்சஸ் கப்பின் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி தெரியுமா? தெரிஞ்சிகிட்டு பயன்படுத்தலாமே!
Image Source: Freepik