"வரும் முன் காப்பதே சிறந்தது” என்பது போல், கோடை வெப்பம் ஆரம்பிக்கும் முன்பே உடலை தயாராக வைத்துக்கொள்வது நல்லது. ஏனெனில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே சூரிய வெப்பம் சுட்டெரிக்கத் தொடங்கிவிட்டது. இதில் கோடை காலம் ஆரம்பித்துவிட்டால், என்னென்ன மாதிரியான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி வருமோ என மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

எனவே கோடை காலத்திற்கு உடலை தயார்படுத்தக்கூடிய வகையிலும், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய வகையிலும் உள்ள உணவுகள் மற்றும் பழங்கள் குறித்து தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இன்று ஏழைகளின் கனியான எலுமிச்சை பழம், கோடை காலத்தில் எவ்வாறு உதவுகிறது என்பது குறித்து பார்க்கலாம்…
தொண்டை வலி:
கோடை காலத்தில் சிலருக்கு அதிக நீர்ச்சத்து இழப்பு ஏற்பட்டு, தொண்டை வறட்சி ஏற்படக்கூடும். இதனை தவிர்க்க எலுமிச்சை சாறு மிகச்சிறந்த அருமருந்தாகும்.

இதிலுள்ள வைட்டமின் சி, சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. இது தொண்டையை சுத்தப்படுத்துகிறது மற்றும் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. தொண்டை வலியால் அவதிப்பட்டால். ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து குடித்து வந்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கும்:
கோடை கால வெப்பத்தால் உடலில் அதிக அளவிலான நீரிழப்பு ஏற்படுகிறது. இது சிறுநீர் வெளியேற்றத்தை குறைப்பதோடு, சிறுநீரக கற்கள் உருவாகவும் காரணமாகிறது.
எலுமிச்சை சாறு சிறுநீரில் உள்ள சிட்ரேட்டின் அளவை அதிகரித்து சிறுநீரக கற்களை தடுக்கிறது. சிட்ரேட் கால்சியத்துடன் பிணைக்கிறது, இது சிறுநீரக கற்களைத் தடுக்க உதவுகிறது.
கோடையில் மலச்சிக்கல்:
கோடையில் அதிகப்படியான வெயிலால் உடலில் உள்ள நீர்ச்சத்து வியர்வையின் வழியே வெளியேறி, உடல் வறட்சியடையும். இப்படி உடலில் போதுமான நீர் இல்லாத போது, ஒருவரால் கழிவுகளை வெளியேற்ற முடியாமல் கழிவுகள் இறுக்கமடைந்து, மலச்சிக்கல் பிரச்சனையால் பாதிக்கப்படக்கூடும்.
எனவே அஜீரணம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை எதிர்கொண்டால், எலுமிச்சை ஜூஸ் உங்களுக்கு நல்ல நிவாரணமாக அமையும். ஏனெனில் எலுமிச்சை சாறு மற்றும் அதன் தோலில் உள்ள பெக்டின் எனப்படும் கரையக்கூடிய நார்ச்சத்து கல்லீரலில் செரிமான நொதிகளின் உருவாக்கத்தை ஊக்குவிக்கிறது. இது உங்கள் செரிமானத்தை மேம்படுத்துகிறது.
நோயெதிர்ப்பு சக்தி:
பருவ காலம் மாறும் போது உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும். எலுமிச்சையில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வைட்டமின் சி நம் உடலில் உள்ள வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இது நோய்த்தொற்றுகள் மற்றும் நோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது.
வைட்டமின் சி வீக்கத்தைக் குறைக்கிறது, கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கிறது மற்றும் காயங்களை விரைவாக குணப்படுத்த உதவுகிறது. எலுமிச்சை சாறு ஆக்ஸிஜனேற்றத்தின் சிறந்த மூலமாகும். இது ஃப்ரீ ரேடிக்கல்களால் உங்கள் செல்களை சேதப்படுத்தாமல் பாதுகாக்கிறது மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது.
கோடையில் வெயிட் லாஸ்:
கோடை காலத்தில் கொளுத்தும் வெப்பம் காரணமாகவும், அதிகப்படியான வியர்வையாலும் மக்கள் வெளியே செல்வதை தவிர்க்கிறார்கள். வாக்கிங், உடற்பயிற்சி, ஜிம் செல்வது போன்ற அன்றாட ஆக்டிவிட்டிகளை தவிர்ப்பவர்கள் கூட உண்டு. இதனால் உடல் எடை கிடுகிடுவென அதிகரிக்கக்கூடும்.
குறிப்பாக நீங்கள் வெயிட் லாஸ் செய்ய முயற்சித்து வருகிறீர்கள் என்றால், தினமும் எலுமிச்சை சாறு குடிப்பதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். இதிலுள்ள பெக்டின் உள்ளது. எலுமிச்சை சாறு நிரம்பிய உணர்வை உண்டாக்கும். எலுமிச்சை சாற்றில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.. இதில் உள்ள குறைந்த அடர்த்தி நார்ச்சத்து உடலில் தேங்கியுள்ள கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.
சரும பராமரிப்பில் எலுமிச்சை:
எலுமிச்சை சாறு குடிப்பது உடலில் உள்ள நச்சுக்களை நீக்க தவுகிறது. அதாவது உடலில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சுக்களை வெளியேற்றும். இதனால் உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, சருமம் கறைகள் இன்றி பிரகாசமாக மாறும். எனவே உங்கள் சருமம் பளபளப்பாக இருக்க தினமும் எலுமிச்சை சாறு குடிப்பதை வழக்கமாக்குங்கள்.
தினமும் எலுமிச்சை பழச்சாறு குடிப்பவர்கள் தங்கள் PH அளவை சீராக வைத்துக் கொள்கிறார்கள். சமநிலையான PH அளவுகள் ஒளிரும் சருமத்தை உறுதி செய்கின்றன. ஒரு சீரான pH சமநிலை முகப்பரு மற்றும் பிற தோல் பிரச்சனைகளைத் தடுக்கிறது. அதனால் நீங்கள் இன்னும் அழகாக இருப்பீர்கள்.
Image Source: Freepik