தேநீரை விரும்பாத இந்தியர்கள் இல்லை, ஏன் தேநீர் இல்லாமல் பெரும்பாலான இந்தியர்களுக்கு காலைப்பொழுது விடியவே விடியாது. அந்த அளவிற்கு நம்முடன் தேநீர் இரண்டற கலந்துவிட்டது. காலை, மாலை என இரண்டு வேளைகளிலும் தேநீர் கொதிக்காத வீடுகளே கிடையாது. சிலர் கடைகளில் விற்கக்கூடிய டீ தூளை வாங்குவார்கள். சிலர் தேயிலைகளை வாங்கி சுத்தப்படுத்தி பயன்படுத்துவார்கள்.

நாம் பருகும் ஒவ்வொரு கோப்பை தேநீரும் முகம் தெரியாத பலரது உழைப்பு மறைந்துள்ளது. அதேபோல் தேநீர் கோப்பைகளுக்குள் நாம் யாருமே அறிந்திடாத பயங்கரங்களும் மறைந்திருக்கின்றன. ஆம், மார்க்கெட்டில் கிடைக்கக்கூடிய பலவகையான டீ தூளிலும் கலப்படம் செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அவ்வப்போது எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். குறிப்பாக கலப்பட தேயிலை புற்றுநோயை உண்டாக்கும் அளவிற்கு அபாயமானது.
எனவே தான் இன்று தேயிலையில் என்னென்ன மாதிரியான பொருட்கள் கலக்கப்படுகின்றன. அதனை எந்தெந்த மாதிரியான சோதனைகள் மூலம் எளிதில் கண்டறிய முடியும் என பார்க்கப்போகிறோம்.
அல்காடாரா சோதனை:
வடிகட்டி காகிதத்தை (Filter Paper) எடுத்துக் கொள்ளுங்கள். அதன் மீது தேயிலை இலைகளை வைக்கவும். இப்போது சிறிது தண்ணீர் ஊற்றி காகிதத்தை ஈரப்படுத்தவும். இப்போது வடிகட்டி காகிதத்தை தண்ணீரில் கழுவவும். உண்மையான தேயிலை இலைகளாக இருந்தால், காகிதத்தில் கறை இருக்காது. கலப்பட தேயிலையாக இருந்தால் கரும்புள்ளிகள் தோன்றும்.
வடிகட்டி காகித சோதனை (Filter Paper Test) :
ஒரு காகிதத்தில் சிறிது தேயிலை இலைகள் அல்லது டீ தூளை எடுத்துக்கொள்ளவும். இப்போது குவிந்து கிடக்கும் தேயிலை இலைகளில் ஒரு சொட்டு தண்ணீரை விடவும். பல நேரங்களில் தேயிலை இலைகள் சாயம் பூசப்படுகின்றன. தண்ணீர் சேர்த்தால் அதிகப்படியான நிறம் வெளியேறி வடிகட்டி காகிதம் நிறம் மாறும். டீ தூளின் ஒரிஜினல் கலரையும் நீங்கள் கண்கூடாக பார்க்க முடியும். உண்மையான தேயிலை இலைகளாக இருந்தால், நிறம் வெளியே வராது.
சுண்ணாம்பு பரிசோதனை:
ஒரு வெள்ளை பீங்கான் பேசினில் சிறிது சுண்ணாம்பை கரைத்து வைக்கவும். இப்போது சிறிது தேயிலை அல்லது டீ தூளை அதன் மீது தூவவும். சுண்ணாம்பில் சிவப்பு, கருப்பு நிறம் தோன்றினால், தேயிலை இலைகள் சாயமிடப்பட்டவை என்பதை உறுதி செய்து கொள்ளலாம். சுண்ணாம்பு நிறம் மாறவில்லை என்றால், அது உண்மையான டீ தூள் ஆகும்.
மேக்னட் டெஸ்ட்:
இரும்புப் பொடியும் தேயிலை இலைகளில் கலப்படமாக கலக்கப்படுகிறது. இதைப் புரிந்து கொள்ள, முதலில் ஒரு கண்ணாடி கொள்கலனில் சிறிது தேயிலை இலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது அதை ஒரு காந்தத்துடன் நகர்த்தவும். இரும்புத் தூள் இருந்தால், அது காந்தத்தில் ஒட்டிக்கொள்ளும். இல்லையெனில், தேயிலை இலைகள் தூய்மையானவை.
Image Source: Freepik