Causes of kidney stones and prevention tips: உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உடலின் ஒவ்வொரு உறுப்புகளையும் பாதுகாப்பாக இருக்க வைப்பது அவசியமாகும். இந்த வரிசையில் சிறுநீரக ஆரோக்கியமும் அடங்கும். இன்றைய காலத்தில் மோசமான வாழ்க்கைமுறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக சிறுநீரகம் தொடர்பான பல்வேறு உடல்நலப் பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. சிறுநீரகங்களின் முக்கிய செயல்பாடு மனித உடலிலிருந்து நச்சுக் கழிவுகளை சிறுநீர் மூலம் வெளியேற்றுவதாகும்.
இவ்வாறு உடலிலிருந்து நச்சுக்களை வெளியேற்றி உடலின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவுகிறது. ஆனால், சில நேரங்களில் பல்வேறு காரணங்களால் சிறுநீரகங்களில் பிரச்சனைகள் எழக்கூடும். இதன் காரணமாக, சிறுநீரகங்களின் செயல்பாட்டிலும் பிரச்சனைகள் தோன்றக்கூடும். இதற்கு முக்கிய காரணமாக அமைவது சிறுநீரகம் வழியாக சிறுநீர் வெளியேறும் இடத்தில் கற்கள் உருவாவதே ஆகும். இவை சிறுநீரகக் கற்கள் என்று அழைக்கப்படுகிறது.
உடலில் சிறுநீரகக் கற்கள் தோன்றுவதற்கு அவர்கள் பின்பற்றக்கூடிய வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையே காரணமாகும். சிலருக்கு, இவை சில மருத்துவ காரணங்களால் தோன்றலாம். இது குறித்து இதில் விரிவாகக் காண்போம்.
இந்த பதிவும் உதவலாம்: இந்த அறிகுறிகளை லேசுல விடாதீங்க.. கிட்னி கேன்சரா இருக்கலாம்! மருத்துவர் தரும் தடுப்பு முறைகள் இதோ
சிறுநீரக கற்கள்
சிறுநீரில் உள்ள தாதுக்கள் மற்றும் அமில உப்புகள் போன்றவை ஒன்றுடன் ஒன்று இணைந்து சிறிய துகள்கள் அல்லது படிகங்களை உருவாக்குகிறது. இந்த படிகங்கள் அல்லது துகள்கள், படிப்படியாக வளர்ந்து கற்களின் வடிவத்தை எடுக்கின்றன. இதுவே சிறுநீரகக் கல் பிரச்சனை என்று அழைக்கப்படுகிறது.
சில நேரங்களில் இந்த சிறுநீரகக் கற்கள் சிறுநீர் வழியாகத் தாமாகவே வெளியேறக்கூடும். ஆனால், சில சமயங்களில் இவை சிறுநீர்க் குழாயைத் தடுத்து கடுமையான வலி, சிறுநீரில் இரத்தம் மற்றும் வாந்தி போன்ற பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
முக்கிய கட்டுரைகள்
சிறுநீரக கற்கள் உருவாவதற்கான முக்கிய காரணங்கள்
அதிக உப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்வது
இன்று பெரும்பாலானோர் தங்களது அன்றாட சமையலில் அதிக உப்பைப் பயன்படுத்துவதும், அதிக உப்பு உள்ள உணவுகளை உட்கொள்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஒருவர் ஒரு நாளைக்கு 5 கிராமுக்கு மேல் உப்பை சாப்பிடக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் மனித உடலின் ஆரோக்கியத்திற்கு சிறிதளவிலான உப்பு போதுமானதாகும் என நிபுணர்களும் பரிந்துரைக்கின்றனர். எனினும் ஜங்க் ஃபுட், பதப்படுத்தப்பட்ட உணவுகள், பேக் செய்யப்பட்ட சிற்றுண்டிகள் போன்றவற்றை உட்கொள்வது உடலில் உப்பின் அளவை அதிகரிக்கிறது. இவை சிறுநீரகங்களில் அழுத்தத்தை ஏற்படுத்தி, சிறுநீரகக் கல் பிரச்சனையை ஏற்படுத்தும்.
அதிக ஆக்சலேட் நிறைந்த உணவுகளை உட்கொள்வது
பொதுவாக, ஆக்சலேட் நிறைந்த உணவுகள் கால்சியம் ஊட்டச்சத்துடன் இணைந்து சிறுநீரகக் கற்கள் அபாயத்தை உருவாக்கக்கூடும். எனவே கீரை, தேநீர், சாக்லேட், பீட்ரூட் போன்ற ஆக்சலேட் நிறைந்த உணவுகளை அதிகளவு உட்கொள்வது சிறுநீரகக் கற்களை ஏற்படுத்தலாம். சிறுநீரகக் கல் பிரச்சனை உள்ளவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: கிட்னி பாதிப்பு உள்ளவர்கள் பீட்ரூட் சாப்பிடலாமா? நிபுணர் சொன்ன நன்மைகள், தீமைகளைத் தெரிஞ்சிக்கோங்க
அதிக புரதச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணுவது
புரதச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது குறிப்பாக முட்டை, சிவப்பு இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் உட்கொள்வது உடலில் யூரிக் அமில அளவை அதிகரிக்கலாம். அது மட்டுமல்லாமல், இவை சிறுநீரை அதிக அமிலத்தன்மை கொண்டதாகவும் மாற்றுகிறது. இதன் காரணமாக, சிறுநீரகக் கல் உருவாக்கும் வாய்ப்பை அதிகரிக்கிறது.
போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது
தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்காத போது, அது வரும் நாள்களில் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். பொதுவாக, உடலில் நீர்ச்சத்து குறைவதால் சிறுநீரின் நிறம் அடர் மஞ்சள் நிறமாக மாறுகிறது. இது சிறுநீரகங்களிலும் பிரச்சினைகளைத் தோன்றத் தொடங்குகிறது. முக்கியமாக, உடலில் நீரின் அளவு குறையும் போது, சிறுநீர் கெட்டியாகி, அதில் உள்ள தாதுக்கள் ஒன்றாக ஒட்டத் தொடங்கும். இது சிறுநீரகக் கல் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கிறது. எனவே, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு, உடலின் தேவைகளுக்கு ஏற்ப தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
சிறுநீரைத் தக்கவைப்பது
சிறுநீர் தக்கவைப்பு இன்று பலரும் செய்யக்கூடிய பழக்கமாகும். இதனால், அவர்கள் அடிக்கடி சிறுநீர் கழிப்பதில்லை அல்லது நீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைக்கின்றனர். இதனால், சிறுநீர் பாதையில் தாதுக்கள் குவியத் தொடங்கலாம். இவை சிறுநீரக கல் உருவாவதை துரிதப்படுத்துகிறது.
சிறுநீரக கற்களைத் தடுக்க செய்ய வேண்டியவை
சிறுநீரகக் கற்கள் திடீரென ஏற்படும் நோய் அல்ல. மாறாக, இவை நம் அன்றாட வாழ்வில் செய்யக்கூடிய சிறிய செயல்களின் விளைவுகளாகும். இந்நிலையில், போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, சீரான உணவு உட்கொள்ளல் மற்றும் ஆக்சலேட் நிறைந்த உணவுகளைக் கட்டுப்படுத்துவது போன்ற வழக்கங்களை மேற்கொள்வதன் மூலம் சிறுநீரகக் கற்களைத் தடுக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: உங்க கிட்னில கல் இருக்கா.? இந்த உணவு கலவையை தவிர்க்கவும்..
Image Source: Freepik