இன்றைய மோசமான வாழ்க்கை முறையும், உணவுப் பழக்கமும், மக்களிடையே மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை அதிகரித்து வருகிறது.
அச்சுறுத்தும் மாரடைப்பு.!
முன்பெல்லாம் நம் நாட்டில் மாரடைப்பு என்பது வயது மூப்பினர் இடையே தான் அதிகம் காணப்படும். ஆனால் இன்றோ இளைஞர்களிடையே இது ஏற்படுகிறது. சமீப காலமாக இளைஞர்கள் மாரடைப்பால் பலி என்ற செய்திகள் அதிகம் வெளிவருகிறது.

விளையாடிக்கொண்டிருக்கும் போது இளைஞர் உயிரிழப்பு, மேடையில் ஆடிக்கொண்டிருந்தபோது இளைஞர் உயிரிழப்பு, கல்லூரி மாணவர் மாரடைப்பால் உயிரிழப்பு என்ற செய்திகள் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
கர்நாடகத்தில் சோகம்..
இதற்கான காரணங்கள் என்னவென்று இன்னும் வெளிவராத நிலையில், கர்நாடகாவில் ஒரு சோகம் அரங்கேறியுள்ளது. கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவில், நேற்று (DEC 21, 2023) பள்ளிக்குச் சென்ற 13 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்தார்.
இதையும் படிங்க: மாரடைப்பில் இருந்து மீண்ட பின் வாழ்க்கை முறையில் செய்ய வேண்டிய மாற்றங்கள்!
7ஆம் வகுப்பு படிக்கும் சிருஷ்டி என்ற மாணவி தரடஹள்ளி கிராமத்தில் உள்ள பள்ளி முன்பு காலை மயங்கி விழுந்தார். சம்பவம் நடந்த உடனேயே, பள்ளிக்கு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். டாக்டர் இல்லாததால், மாணவி, முடிகெரே அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி மாரடைப்பால் உயிரிழந்ததாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோன்ற சோகம் கர்நாடகாவின் சிக்கத்தோட்லுகெரேவில் நடந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் பீமாசங்கர் என்ற 15 வயது மாணவர் மாரடைப்பால் இறந்தார். இறந்தவர் மாவட்ட அளவிலான விளையாட்டு நிகழ்வில் பங்கேற்று இரண்டாவது இடத்தைப் பிடித்ததாகக் கூறப்படுகிறது.
முன் எச்சரிக்கை
இன்றைய வாழ்க்கைமுறையில் மாரடைப்பு பொதுவான நோயாக கருதப்படுகிறது. இதற்கு காரணம் செயலற்ற வாழ்க்கை முறையும், குப்பை உணவு மீது உள்ள மோகமும் தான். இவற்றில் சில மாற்றங்களை செய்வதன் மூகம் நாம் மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கலாம்.
தினமும் குறைந்தது 40 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்யவும். ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த மீன்கள், நார்ச்சத்து நிறைந்த பழம் மற்றும் காய்கறிகள், ஊட்டச்சத்துகள் நிறைந்த நட்ஸ் மற்றும் விதைகளை உங்கள் உணவில் இணைத்துக்கொள்ளுங்கள். முடிந்த அளவு பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்கவும். சுய உடல் பரிசோதனை, மற்றும் மருத்துவ பரிசோதனையில் ஈடுபடவும்.
Image Source: Freepik