World Liver Day 2024: உலக கல்லீரல் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 19ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நாளில் கல்லீரில் செயல்பாடு, கல்லீரல் பாதிப்பு அறிகுறிகள், கல்லீரல் ஆரோக்கிய வழிகள் குறித்து அறிந்துக் கொள்வோம்.
உடலில் கல்லீரல் எவ்வளவு முக்கியம்?
உடலில் கல்லீரல் செயல்பாடு சீராக இருக்க வேண்டியது மிக முக்கியம். உடலின் மொத்த ஆரோக்கியத்திலும் கல்லீரல் பங்கு என்பது பிரதானமான ஒன்று. உடலில் உள்ள கழிவுகள், நச்சுக்கள் போன்றவற்றை வெளியேற்றும் மிக முக்கிய வேலையை கல்லீரல் தான் செய்கிறது.
உடலின் அனைத்து உறுப்புகளும் சீராக செயல்படுவதற்கு கல்லீரல் மிக முக்கியம். காரணம் உடலில் கழிவுகள் தேங்கிவிட்டால் மொத்த உடலும் பாதிப்படையும், இது நடக்காமல் தடுக்க கல்லீரல் தான் பிரதானம். சரி, கல்லீரல் பணி இதுதானா என்றால் அதுதான் இல்லை. இன்னும் பல பணிகளை கல்லீரல் செய்கிறது.
உடலில் கல்லீரல் செயல்பாடுகள்
உடலின் புரதம், கொழுப்பு உள்ளிட்டவைகளின் உற்பத்தியை சீரமைத்து கட்டுப்படுத்துவது பணியை கல்லீரல் செய்கிறது. இதைவிட முக்கியம் என்னவென்றால் உடலின் இரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு, புரதத்தையும் உருவாக்கிறது. இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த கல்லீரலை நாம் பாதுகாப்பாக வைக்க வேண்டியது அவசியம்.
கல்லீரல் பாதிப்பு அறிகுறிகள்
கல்லீரலின் மற்றொரு தனித்துவத் தன்மை என்னவென்றால், உடலின் பிற பாகங்கள் ஏதேனும் பாதிப்படைந்தால் அதன் ஆரம்பக் கட்டத்திலேயே தெரியவரும். ஆனால் கல்லீரல் அப்படியல்ல. கல்லீரல் பாதிக்கப்படும் பட்சத்தில் அது 70 சதவீதம் பாதிக்கப்பட்ட பின்னரே அறிகுறிகள் தென்படும்.
கல்லீரல் பாதிக்கப்படுகிறது என்றால் அது முறையாக செயல்படாமல் கழிவுகள் தேங்குகிறது என்று அர்த்தம். இதனால் குடல், செரிமானம் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும். கல்லீரலில் கழிவுகள் அதிகம் தேங்கிவிட்டது என்றால் சோர்வு நிலை அதிகமாகவும். பாதிக்கப்பட்ட நபருக்கு மந்தநிலை ஏற்படும். அதேபோல் மயக்கம், வாந்தி, குமட்டும் தன்மை, இரத்தத்துடன் கலந்த மலம், பாதங்கள் மற்றும் கணுக்கால்களில் வீக்கம் போன்றவை ஏற்படலாம்.
கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் வழிகள்
கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் முதலில் குடிப்பழக்கத்தை நிறுத்த வேண்டும். அதேபோல் எண்ணெயில் பொரித்த உணவுகள், சிவப்பு இறைச்சி, சாலையோர கடை உணவுகள் உள்ளிட்டவையை சாப்பிடாமல் இருக்க வேண்டும். பொதுவாகவே இதை தவிர்ப்பது உடலின் மொத்த ஆரோக்கியத்திற்கும் நல்லது.
கல்லீரலை பாதுகாக்க என்ன சாப்பிடலாம்?
கல்லீரலை பாதுகாக்க விரும்பினால் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை கடைபிடிப்பது அவசியம். கல்லீரல் ஆரோக்கிய உணவுகள் என்று பார்க்கையில் மஞ்சள் சாப்பிடலாம். மஞ்சளில் இருக்கும் குர்குமின் கல்லீரலின் ஆரோக்கியத்தை பல வழிகளில் பாதுகாக்க உதவுகிறது.
அதேபோல் உடலில் உள்ள நச்சுக்களை அகற்ற உதவும் என்சைம்கள் நிறைந்துள்ள பூண்டு கல்லீரலை பாதுகாக்க உதவுகிறது. மேலும், முழு தானியம், பழங்கள், உலர் பழங்கள், சிட்ரஸ் நிறைந்த பழங்கள் ஆகியவை கல்லீரலுக்கு மிகுந்த நன்மை பயக்கும்.
கல்லீரல் பாதிக்கப்பட்டால் ஏற்படும் அறிகுறிகள்
கல்லீரல் பாதிக்கப்பட்டால் உடலில் இருந்து நச்சுக்கள் சரியாக வெளியேறவில்லை என்று அர்த்தம். இப்படி இருக்கும்பட்சத்தில் வயிறு பெருத்து உப்பி காணப்படும், அதேபோல் வயிற்று பகுதியில் வீக்கமும் ஏற்படும். அதேபோல் கால்களின் பாதத்தில் கூச்ச உணர்வு ஏற்படுவதோடு வலியும் ஏற்படும்.
மேலும் செரிமானம் சீராக இல்லாமல் வயிற்றுப்போக்கு பிரச்சனையும் ஏற்படும். பசியின்மையால் எடை இழப்பு, வயிற்றில் அசௌகரிய உணர்வு, தோல் அரிப்பு போன்றவையும் ஏற்படக் கூடும்.
Pic Courtesy: FreePik