ஃபுட் பாய்சன் எதனால் ஏற்படுகிறது? - இதனை சரி செய்வது எப்படி?

உணவை உணவாகச் சாப்பிட்டாலும் சரி, மருந்தாகப் பயன்படுத்தினாலும் சரி... முதலில் நாம் கவனிக்க வேண்டியது அளவு. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.அளவு கூடினால் எப்படி உணவு நஞ்சாகிப்போகும்?
  • SHARE
  • FOLLOW
ஃபுட் பாய்சன் எதனால் ஏற்படுகிறது? - இதனை சரி செய்வது எப்படி?

அளவு அதிகமாகும் போது, நல்ல உணவு கூட நஞ்சாகிப் போகும் என்பதைத்தான் பழமொழி விளக்குகிறது. தினசரி சாப்பிடும் சாதாரண உணவுகளையும் நாம் அளவோடுதான் சாப்பிட வேண்டும். அளவு என்பதை யார் நிர்ணயிப்பது?உணவின் அளவு குறித்து நவீன அறிவியல் வேறு மாதிரியாகச் சொல்கிறது. ஒவ்வொரு நாளிற்கும் ஒரு சராசரி உடலிற்கு என்னென்ன சத்துக்கள் தேவைப்படுகின்றன என்பதையும், எந்த அளவு அந்த சத்துக்கள் தேவை என்பதையும் சராசரி கணக்கு மூலம் அறிவிக்கிறது நவீன உணவுப்பட்டியல். இங்கே நாம் பேசுகிற அளவு என்பது பட்டியல் அடிப்படையிலான அளவு அல்ல.

உடலின் அகச்சூழல், நாம் வாழ்கிற தட்ப வெப்பம், உழைப்பின் அளவு, உடலிற்குத் தேவையான சத்துக்கள்- இப்படி பல காரணிகளின் அடிப்படையில் ஒவ்வொரு மனிதனின் உடலும் உணவைக் கோருகிறது; பசியின் அளவைத் தீர்மானிக்கிறது.
தமிழ்நாட்டில் வாழும் நமக்கும், குளிர்ச்சியான கேரளாவில் வாழும் மக்களுக்கும் ஒரேவிதமான பசி இருக்காது. மேலே சொன்ன காரணிகள் மாற மாற நம்முடைய தேவைகளும் மாறும்.

எப்படித்தான் தேவையான உணவு அளவுகளைக் கண்டுபிடிப்பது?

பசி மூலம்தான். உதாரணமாக, இன்று காலையில் நீங்கள் சாப்பிட்ட அளவும், மதியம் சாப்பிடுகிற அளவும் ஒன்றாக இருக்குமா? அதே போல, இன்று காலை இரண்டு இட்லி சாப்பிட்டால், நாளை காலையும் அதே அளவுதான் சாப்பிடுவீர்கள் என்று சொல்ல முடியுமா? உணவின் அளவை நிர்ணயித்துக்கொள்ள ஒரே வழிதான் இருக்கிறது. அது உங்கள் வயிற்றிடம் கேட்பதுதான். பசித்துச் சாப்பிடும் போது, பசியின் அளவையும் கவனிக்க வேண்டும்.

சாப்பிடும் உணவு ‘போதும்’ என்பதைப் புரிந்துகொள்ள பல வழிகள் இருக்கின்றன. ஒன்று பசி அடங்கி விடுவது. இன்னொன்று ருசி மறைந்து விடுவது. நாம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே பசி மறைந்து போகும். நாக்கில் உணவின் ருசியும் மறைந்து போகும். இந்த அடையாளங்கள் தோன்றினால் வயிறு நிறைந்து விட்டது என்பது அர்த்தம்.ருசியும், பசியும் மறைந்து விட்ட பிறகு நாம் சாப்பிடும் ஒவ்வொரு கவளமும் நம் உடலின் தேவைக்கு அதிகமானது. தேவைக்கு அதிகமான உணவே நஞ்சாகிறது.

நம் உடல் தன்னுடைய தேவையையும், செரிக்கும் தன்மையையும் பொறுத்துத்தான் நம்முடைய பசியையும், அதன் அளவையும் தீர்மானிக்கிறது. அந்த அளவைப் பின்பற்றினால் வயிறு கனமான உணர்வு ஏற்படாது. சாப்பிட்டபின் களைப்பு ஏற்படாது. முன்னிலும் சுறுசுறுப்பாக நம் வேலைகளைத் தொடர முடியும்.

ஃபுட் பாய்சன் எதனால் ஏற்படுகிறது?

நவீனயுகத்தில் எதையும் அவசரம் அவசரமாக விழுங்கிவிட்டு ஓடுவது, நேரமின்மையைக் காரணம் காட்டி, அன்று சமைத்ததை ஆறு நாட்களுக்குக்கூட பதப்படுத்தி வைத்து சாப்பிடுவது, இவை எல்லாமும்தான் ஃபுட் பாய்சன் ஏற்படக் காரணங்கள்.ஃபுட் பாய்சனை நாம் சாதாரணமாக விட்டால் அது உயிருக்கே ஆபத்தாகிவிடும். சிலருக்கு மூளை, பக்கவாத பாதிப்புகள் கூட வரக்கூடும்.

சமைக்கும் காய்கறிகள் சரியாகக் கழுவப்படாமல் இருத்தல்; சமைத்த உணவை முறையாகப் பதப்படுத்தாமல் இருத்தல்; சாப்பிடும் தட்டை சரியாக கழுவாமல் இருத்தல் போன்ற காரணங்களால் ஃபுட் பாய்சன் ஏற்படும். குறிப்பாக, வெளியிடங்களில் சுகாதாரமற்ற உணவைச் சாப்பிடுவதால் அதிக அளவில் ஃபுட் பாய்சன் ஏற்படுகிறது. பெரும்பாலான ஹோட்டல்களில் சுத்தமான உணவு, சுத்தமான தண்ணீர் கிடைப்பது கேள்விக்குறிதான்.

 

 

ஃபுட் பாய்சனின் அறிகுறிகள்: 

ஃபுட் பாய்சனின் முதல் நிலை வயிற்றுவலி, வயிறு மந்தம் ஆகியவை. அடுத்த நிலை, குமட்டல். அத்துடன், தலைவலி, ஜுரம் வருவது போல இருக்கும். கடைசி நிலை தீவிரமான வயிற்றுப்போக்கு, வாந்தி. வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், எக்காரணத்தைக் கொண்டும் உடனே நிறுத்தக்கூடாது. படிப்படியாகத்தான் நிறுத்த வேண்டும். வாந்தி, வயிற்றுப்போக்கால், நமது உடலில் தேவையில்லாத உணவுப் பொருட்கள் வெளியேற்றப்படுகிறது; அது நல்ல விஷயம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நமது உடலில் இன்ஃபெக்ஷன் ஏற்பட்டு அதனை வெளியேற்றத்தான் இப்படி நடக்கிறது; இதனை உள்ளேயே தடுத்து நிறுத்திவிட்டால் பெரிய பிரச்னைகளை ஏற்படுத்தும். ஃபுட் பாய்சன் முதல்நிலையில் இருந்தால், உணவைக் குறைத்துக் கொண்டாலே சரியாகிவிடும். இரண்டாம் நிலை, கடைசி நிலை ஏற்பட்டால் மருத்துவரிடம் தகுந்த சிகிச்சைகளைப் பெற வேண்டும்.

ஃபுட்பாய்சன் பற்றி பாரம்பரிய மருத்துவம் சொல்வது என்ன?

“ஃபுட் பாய்சனில் நிறைய விதங்கள் இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் ஒரே மாதிரியான வீட்டு வைத்தியத்தை நாம் கொடுக்கக்கூடாது. பாதிப்பைப் பொருத்து வைத்தியம் செய்ய வேண்டும். வெயில் காலங்களில் ஐஸ் போட்ட ஜூஸ்களைக் குடிப்போம். சுத்தமில்லாத தண்ணீரில் தயாரிக்கும் ஐஸ், குல்பி போன்றவற்றால் கூட ஃபுட் பாய்சன் ஏற்படும். எந்த மருத்துவ முறையாக இருந்தாலும் வாந்தி, வயிற்றுப்போக்கை உடனடியாக நிறுத்தக் கூடாது. அப்படிச் செய்தால், கெட்ட கழிவுகள் உள்ளேயே தங்கி, உடலுக்குப் பெரிய பிரச்னையை ஏற்படுத்தும்.

ஃபுட்பாய்சனுக்கு அடிப்படைக் காரணம்:

  • புரதச் சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்கள் கெடும் தன்மை கொண்டவை. அதனால் அவற்றைப் பயன்படுத்தும் முறையை வைத்து ஃபுட் பாய்சனைத் தடுக்கலாம்.
  • வேர்க்கடலை, பால், மட்டன், சிக்கன், மீன் இவையெல்லாம் சீக்கிரம் கெட்டுவிடும். அதனால் அவற்றை ஃப்ரெஷ்ஷாக பயன்படுத்த வேண்டும்.
  • எண்ணெயில் பொரித்த உணவுகள் எதுவாக இருந்தாலும் கெட்டுப் போயிருந்தால் அவற்றை தூக்கி எறிந்து விடுங்கள். மீறி சாப்பிட்டால் ஃபுட் பாய்சன் கண்டிப்பாக வரும்.
  • ரொட்டிகளில் பூஞ்சை இருப்பது தெரிந்தால், அந்த ரொட்டியை முழுவதுமாக பயன்படுத்தக்கூடாது. பூஞ்சை உள்ள பகுதியை மட்டும் பிச்சிப் போட்டுவிட்டு, மற்றவற்றை குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுத்தால் கண்டிப்பாக ஃபுட்பாய்சன் ஆகும்.
  • ஃபுட் பாய்சனுக்கு ஃபிரிட்ஜ் தான் முக்கிய காரணம். ஒரு பொருளில் உள்ள பூஞ்சை இன்னொரு பொருளுடன் சேர்ந்து அந்தப் பொருளையும் கெடுக்கும். அவை நம் கண்ணுக்குத் தெரியாது. அதை பயன்படுத்தும்போது உணவு கெட்டுப் போக வாய்ப்புகள் அதிகம். அதனால் ஃபிரிட்ஜில் வைக்கும் உணவுப் பொருட்கள், காய்கறிகள், பழங்களை தனித்தனி கவர்களில் போட்டு வைக்க வேண்டும். எதிலாவது பூஞ்சை பிடித்திருந்தால் அதைக் கொட்டிவிடுங்கள்.
  • உணவுகளை அதிகளவு சமைத்து, ஃபிரிட்ஜில் அடைத்து வைத்து சாப்பிடுவதை குறைத்துக் கொள்ளுங்கள்.
  • ர்ஃப்ப்ஹ்சில சமையல் பொருட்களை காலாவதியான பின்னரும், தூக்கிப் போடாமல சமையலில் உபயோகிப்பது எல்லோர் வீட்டிலும் நடைபெறுகிறது. அது உணவைக் கெடுக்க நாமே அனுமதிப்பதற்கு சமமாகும்.

ஃபுட்பாய்சனை தடுக்கும் வழிமுறைகள்:

  • சமைப்பவர் சாப்பிடுபவர் கை சுத்தமாக இருக்க வேண்டும். சமையலறையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
  • சமைக்கப் பயன்படுத்தும், கத்தி, பலகை ஆகியவற்றை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பழங்கள், கீரைகள், காய்கறிகள் உபயோகிக்கும் முன் நன்கு கழுவிவிட்டுப் பயன்படுத்துங்கள்.
  • ஃபிரிட்ஜில் வைத்த உணவை எடுத்துப் பயன்படுத்தும்போது, அதன் ஜில்லிப்புத் தன்மை முற்றிலும் தீரும்வரை வெளியில் வைக்கவும்.
  • இரண்டு மூன்று நாட்களுக்குப் பயன்படுத்த விரும்புபவர்கள், தனித்தனி பாத்திரங்களில் உணவு பொருளை ஃபிரிட்ஜில் வைப்பது நல்லது.
  • உணவில் துர்நாற்றம் அடித்தாலோ பூஞ்சை இருப்பது தெரிந்தாலோ அதை எந்தக் காரணம் கொண்டும் பயன்படுத்தக் கூடாது.
  • செல்லப் பிராணிகளிடமிருந்து உணவுப் பொருட்களை தள்ளியே வைத்திருங்கள்.

Image Source: Freepik

Read Next

அனைத்து போதைப்பழக்கத்தில் இருந்தும் விடுபட்டு ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டுமா?

Disclaimer

குறிச்சொற்கள்