உலக சுகாதார தினம் 2025 (World Health Day) ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7 அன்று கொண்டாடப்படுகிறது. உலக சுகாதார அமைப்பு (WHO) இந்த நாளை உலகளாவிய சுகாதார பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சுகாதார சேவைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும், ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை ஊக்குவிக்கவும் அமைத்துள்ளது.
இந்த சிறப்பு நாளில், வெளிப்புற உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் முக்கியமான 5 வகையான நோய்கள் மற்றும் அவற்றைத் தவிர்க்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள் குறித்து அறிந்துகொள்வோம்.
வெளி உணவுகளைச் சாப்பிடுவதால் ஏற்படும் 5 முக்கிய நோய்கள்:
உணவு விஷத்தன்மை (Food Poisoning):
கடைகளில் கிடைக்கும் உணவுகள் பெரும்பாலும் தூய்மையற்றதாக இருக்கலாம். சுத்தமின்மை காரணமாக, இந்த உணவுகளில் பாக்டீரியாக்கள் அதிகமாக இருக்கலாம். இவற்றை உட்கொள்வதால் ஈ.கோலை (E.coli), சால்மொனெல்லா (Salmonella) போன்ற பாக்டீரியாக்கள் மூலம் உணவு விஷத்தன்மை ஏற்படலாம். இதன் விளைவாக வயிற்று வலி, வாந்தி, பேதி போன்ற அறிகுறிகள் தோன்றலாம்.
வயிற்று தொற்றுகள் (Stomach Infections):
சுகாதாரமற்ற சூழ்நிலையில் தயாரிக்கப்படும் உணவுகளை உட்கொள்வதால் காலரா (Cholera), டைபாய்டு (Typhoid), ஹெபடைட்டிஸ் (Hepatitis) போன்ற நோய்களின் அபாயம் அதிகரிக்கிறது. வெளியூரில் உணவருந்தும் போது சுத்தத்தைக் கவனத்தில் கொள்ளுதல் அவசியம்.
அலர்ஜி (Allergies):
வெளிப்புற உணவுகளை விற்பனை செய்பவர்கள் சில நேரங்களில் காலாவதியான பொருட்களைப் பயன்படுத்தலாம், மீண்டும் மீண்டும் எண்ணெயை பயன்படுத்தலாம். இதனால், இந்த உணவுகளை உட்கொள்வதால் தோலில் அரிப்பு, சுவாச பிரச்சினைகள் போன்ற அலர்ஜிகள் ஏற்படக்கூடும். எனவே, நம்பகமான இடங்களில் மட்டுமே உணவருந்த வேண்டும். வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவுகளை விரும்ப கற்றுக்கொள்ளுங்கள்.
எடை அதிகரிப்பு மற்றும் இதய நோய்கள் (Weight Gain and Heart Diseases):
டீப் ப்ரை செய்த மற்றும் அதிக எண்ணெய் கொண்ட உணவுகளை உட்கொள்வதால் உடலில் கொலஸ்ட்ரோல் அளவு அதிகரிக்கலாம். இது உடல் எடையை அதிகரித்து, இதய நோய்களின் அபாயத்தை உயர்த்துகிறது. இந்த உணவுகளில் டிரான்ஸ் கொழுப்பு மற்றும் செறிவூட்டப்பட்ட கொழுப்புகள் அதிகமாக இருக்கலாம், இது உடல் ஆரோக்கியத்திற்கு பாதகமாகும்.
ஜீரண பிரச்சினைகள் (Digestive Problems):
காரமான, மசாலா நிறைந்த, சுத்தமின்மை நிலையில் தயாரிக்கப்பட்ட உணவுகளை உட்கொள்வதால் அஜீரணம், வாயு, அமிலத்தன்மை போன்ற ஜீரண பிரச்சினைகள் ஏற்படலாம். காரமான உணவுகளில் உள்ள கேப்சைசின் (Capsaicin) போன்ற ரசாயனங்கள் ஜீரண முறையில் எரிச்சலை ஏற்படுத்தி, அஜீரணத்தை உருவாக்குகின்றன.
வெளி உணவுகளைச் சாப்பிடும் போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள்:
சுத்தத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவும்:
வெளியே உணவருந்தும் முன், அந்த இடத்தின் சுத்தத்தை சரிபார்க்கவும். உணவு பரிமாறும் நபரின் கைகள், பாத்திரங்கள், நீரின் தரம் போன்றவற்றை கவனிக்கவும். நம்பிக்கை உள்ள இடங்களில் மட்டுமே உணவருந்தவும்.
புதிய உணவுகளை மட்டுமே உட்கொள்ளவும்:
ஆரோக்கியமாக இருக்க, எப்போதும் வீட்டில் தயாரிக்கப்பட்ட புதிய உணவுகளை உட்கொள்ள முயற்சிக்கவும். பழைய அல்லது காலாவதியான உணவுகளைத் தவிர்க்கவும். வெளியே செல்லும் போது, வீட்டில் இருந்து நீர் மற்றும் எளிய ஆரோக்கியமான உணவுகளை எடுத்துச் செல்லவும். சாலையோரத்தில் விற்கப்படும் ஜூஸ், ஐஸ் கிரீம் அல்லது குளிர்பானங்களைத் தவிர்க்கவும்.
தூய்மையான நீரைப் பயன்படுத்தவும்:
வெளியூரில் உணவருந்தும் போது பாட்டிலில் மூடப்பட்ட நீர் அல்லது கொதிக்கவைத்த தூய்மையான நீரை மட்டுமே பருகவும். திறந்த நிலையில் இருக்கும் நீரைப் பருகுவதைக் தவிர்க்கவும்.
Image Spurce: Freepik