அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கக் கூடிய பல்வேறு உடல் உபாதைகளில் தலைவலியும் ஒன்று. இது பல காரணங்களால் உருவாகலாம். இது மூளையில் திடீரென ஏற்படக்கூடிய நிகழ்வின் தாக்கமே ஆகும். அதே சமயம், தலைவலி எதனால் வருகிறது என்பது குறித்த விஷயங்களைத் தெரிந்து கொள்வது அவசியமாகும்.
தலைவலியால் குறிப்பிட்ட வயதான 15 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். அதிலும், ஆண்களைக் காட்டிலும் பெண்களே அதிகமாக தலைவலியால் பாதிக்கப்படுகின்றனர். வழக்கமான செயல்களைச் செய்ய முடியாத அளவிற்கு, தலைவலியால் அதிகம் பாதிக்கப்படுவர். இதில், தலைவலியை உண்டாக்கக் கூடிய சில பொதுவான காரணங்களைக் காணலாம்.
தலைவலி வருவதற்கான காரணங்கள்
தூக்கமின்மை

சரியான நேரத்தில் தூக்கமில்லாத நபர்கள், தலைவலியால் மிகவும் அவதிப்படுகிறார்கள். வயதுக்கு ஏற்றவாறு, தூங்கும் நேரமும் மாறுபடும். சரியான நேரத்தில் தூங்காமல், வேலைப்பளு காரணமாக மன அழுத்தம் உருவாகுவதுடன், தலைவலியும் பண்மடங்கு பெருகிறது. நேரத்தை சரியாகத் திட்டமிட்டு, உறங்குதல் மற்றும் விழிக்கும் நேரத்தை சரியாக நிர்ணயித்தல் மூலம் தலைவலியைக் குணப்படுத்தலாம்.
பல் நோய்கள்

பல்லில் அடிபடுதல், நோய்த் தொற்று ஏற்படுதல் போன்ற பல்வேறு காரணங்களால் தலைவலி உண்டாகலாம். மிக குளிர்ந்த மற்றும் சூடான பானங்களை எடுத்துக் கொள்வதால் பல்லில் வலி ஏற்படுவது தீவிரமாக மாறி விடும். பற்களில் ஏற்படும் சிறு பிரச்சனைகளும் அதிக வலியை ஏற்படுத்தும். இது நரம்பின் வழியாக அதிக தலைவலியை ஏற்படுத்துவதாக அமைகிறது.
கண் நோய்கள்

கண்களில் ஏற்படக்கூடிய சில நோய்களும் தலைவலி உண்டாவதற்கான வழிகளாக அமைகின்றன. அதாவது, கிட்டப்பார்வை, தூரப்பார்வை போன்ற பார்வை குறைபாடு நோய்கள் மற்றும் கண்ணில் காயம் ஏற்படுதல் போன்ற காரணங்களால் கண்களில் மட்டுமின்றி தலைவலியையும் ஏற்படுத்தலாம்.
மூளை பிரச்சனைகள்

மூளைக் காய்ச்சல், தலையில் அடிபடுதல், மூளைக்கட்டி, மூளையில் கேன்சர், மூளையில் இரத்த குழாய் வெடிப்பது உள்ளிட்ட காரணங்களால் அதிக அளவில் தலைவலி ஏற்படும். தலையில் உள்ள நரம்புகள் மூளையுடன் நெருங்கிய தொடர்புடையதால் வலி அதிகமாக உணரப்படும். சில சமயங்களில், மூளையில் உள்ள பிரச்சனைகளின் அறிகுறியாகவும் தலைவலி ஏற்படும். எனவே, அடிக்கடி தலைவலி ஏற்படுவதை உணர்பவர்கள் உடனடியாக மருத்துவ ஆலோசனைப் பெறுவது அவசியமாகிறது.
இவை அனைத்தும் தலைவலி ஏற்படுவதற்கான பொதுவான காரணங்களாகும். மேலும், பக்கவாதம், கை, கால்களில் வலி, கை கால் மரத்துப் போவது, காய்ச்சல் ஏற்படும் சமயங்களில் தலைவலியை உணரலாம். எனவே, இம்மாதிரியான நேரங்களில் தாமதிக்காமல் உடனே மருத்துவ ஆலோசனை பெற்று சிகிச்சைகள் மேற்கொள்வது நல்லது.
Image Source: Freepik