வயது வித்தியாசமின்றி அனைவரும் சந்திக்கக் கூடிய பிரச்சனைகளில் ஒன்று அல்சர். உணவானது தொண்டையில் தொடங்கி இரைப்பை வரை செல்ல உதவக்கூடிய உணவுக்குழாய், இரைப்பை, முன்சிறுகுடல் போன்றவற்றில் உருவாகும் புண்களை “பெப்டிக் அல்சர்” எனக் கூறுவர். இதில் இரைப்பையில் புண் ஏற்படுவதற்கு “கேஸ்ட்ரிக் அல்சர்” எனவும், முன்சிறுகுடலில் புண் ஏற்படுவதற்கு “டியோடினல் அல்சர்” எனக் கூறுவர். குறிப்பாக காலை நேரத்தில் சாப்பிடாமல் இருப்பது, விரைவு உணவுகளை எடுத்துக் கொள்வது உள்ளிட்டவை அல்சரைத் தரக்கூடியவையாக அமையும். அல்சர் ஆனது, வயிற்றில் வலியை ஏற்படுத்தக்கூடிய புண்கள் ஆகும். சில வலி நிவாரணிகளை அதிகமாகப் பயன்படுத்துவதன் மூலம் அல்சர் வருவதற்கானா வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதில் அல்சர் ஏற்படுவதற்கான மற்ற காரணங்களையும் மற்றும் அறிகுறிகளையும் காணலாம்.

அல்சர் ஏற்படுவதற்கான காரணங்கள்
இதில், அல்சர் ஏற்படுவதற்கான சில அடிப்படை காரணங்களைக் காணலாம்.
- பொதுவாக வயிறு அல்லது சிறுகுடலின் உட்புறத்தில் அல்சர் காரணமாக புண்கள் ஏற்படலாம்.
- மசாலா கலந்த உணவு, புளிப்பு மற்றும் காரம் நிறைந்த உணவு வகைகளை சாப்பிடுவதால் அல்சர் ஏற்படுகிறது.
- ஸ்டீராய்டு மாத்திரைகள், ஆஸ்பிரின் உள்ளிட்ட வலி நிவாரணி மாத்திரைகளை அடிக்கடி எடுத்துக் கொள்வதன் மூலமாகவும் அல்சர் ஏற்படலாம்.
- உணவு சாப்பிடுவதைத் தவிர்ப்பது, பட்டினியாக இருப்பது போன்ற உணவுப் பழக்கவழக்கங்களும் இரைப்பைப் புண்ணுக்கு காரணமாக அமைகின்றன.
- கலப்பட உணவு, சுகாதாரமற்ற குடிநீர் போன்றவற்றால் ஹெலிக்கோபாக்டர் பைலோரி பாக்டீரியா வயிற்றில் உள் அடுக்கில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால், அல்சர் ஏற்படலாம்.

அல்சர் நோயின் அறிகுறிகள்
இதில், அல்சர் நோய்க்கான அறிகுறிகள் சிலவற்றைக் காணலாம்.
- அல்சர் நோயின் முக்கிய அறிகுறியானது,அடி வயிற்றில் ஏற்படக்கூடிய கடுமையான வலி ஆகும்.
- வயிற்றுப் புண் இருப்பதற்கான அறிகுறிகளில் குமட்டல் ஏற்படுவதும் ஒன்று.
- வயிற்றுப் புண் இருப்பதால் குமட்டல் அதிகமாகி, வாந்தி உணர்வு ஏற்படுகிறது.
- அல்சரின் அறிகுறியாக, இரைப்பைக் குழாயில் இருந்து இரத்தம் வருதல் முக்கிய பிரச்சனையாகக் கருதப்படுகிறது.
- மார்பு வலி உண்டாகுதலும் அல்சர் நோயின் அறிகுறியாகும். அதாவது இந்த வகை அறிகுறியானது இதய நோயால் ஏற்படாமல், புண்களால் உண்டாகும் வலியைக் குறிக்கிறது.
- குறைவான பசியை உணர்தலுடன் வயிறு சார்ந்த பிரச்சனையை ஏற்படுத்துகிறது. இதனால் உடல் எடை இழப்பு ஏற்படுகிறது.

Image Source: Freepik