அலுவலகம் மற்றும் வீடு இரண்டையும் நிர்வகிப்பது எந்த ஒரு பெண்ணுக்கும் மிகவும் கடினமாக இருக்கும். குறிப்பாக ஒரு பெண் கர்ப்பமாக இருந்தால், அதிக பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அனைத்து அலுவலகங்களிலும், கர்ப்பிணிப் பெண்களுக்கு 6 மாத மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது, பெரும்பாலான பெண்கள் குழந்தை பெற்ற பிறகு எடுத்துக்கொள்கிறார்கள்.
இந்த 9 மாத கர்ப்ப பயணத்தில், அவர் தினமும் அலுவலகத்திற்கு வருகிறார், மேலும் தனது வேலை மற்றும் தொழிலில் கவனம் செலுத்துகிறார். ஆனால், கர்ப்ப காலத்தில் பெண்கள் சுறுசுறுப்பாக இருப்பது மிகவும் அவசியம். அலுவலகத்தில் ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து உடல் உழைப்பு இல்லாதது கர்ப்பத்தை மிகவும் ஆபத்தாக ஆக்கிவிடும். இதுகுறித்து மருத்துவர்கள் பகிர்ந்துள்ள தகவலை விரிவாக பார்க்கலாம்.
கர்ப்பிணி பெண்கள் ஆரோக்கியமாக இருக்க அலுவலகத்தில் என்ன செய்ய வேண்டும்?

நீண்ட நேரம் தொடர்ந்து உட்கார வேண்டாம்
கர்ப்பக் காலத்தில் வேலை செய்யும் பெண்கள் அலுவலகத்தில் பணிபுரியும் போது அதிக நேரம் ஒரே இடத்தில் உட்காரக் கூடாது. ஒவ்வொரு மணி நேரமும் எழுந்து, நடக்கவும், சற்று ஸ்ட்ரெட்ச் செய்யவும். இது உங்கள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, வீக்கத்தைக் குறைக்கிறது மற்றும் உடல் விறைப்பைத் தடுக்கிறது.
லாபி வழியாக நடக்கவும்
அலுவலகத்தில் பணிபுரியும் போது, உங்கள் அலுவலகத்தின் லாபியில் உலா வருவதற்கு அவ்வப்போது நேரம் ஒதுக்குங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் முதுகுவலியில் இருந்து நிவாரணம் பெறுவீர்கள், உடலில் இரத்தக் கட்டிகள் உருவாகும் அபாயத்தைக் குறைத்து உங்கள் ஆற்றல் மட்டத்தை அதிகரிக்கிறது.
படிக்கட்டுகளைப் பயன்படுத்தவும்
உங்கள் அலுவலகம் 1வது அல்லது 2வது தளத்தில் இருந்தால், முடிந்தவரை லிப்ட் பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு படிக்கட்டுகளை பயன்படுத்த வேண்டும். படிக்கட்டுகளில் ஏறுவது உங்களுக்கு ஒரு லேசான உடற்பயிற்சியாகும், இது உங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உங்கள் தசைகளை வலுப்படுத்தவும் உதவும்.
உங்கள் தோரணையை சரியாக வைத்திருங்கள்
பொதுவாக, அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் தவறான உட்காரும் தோரணையால் மோசமான விளைவை சந்திப்பார்கள். எனவே, நீங்கள் கர்ப்பமாக இருந்தால், உங்கள் நாற்காலி மற்றும் மேசை சரியான தோரணை அமைக்கவும். உங்கள் முதுகை நேராக வைத்திருங்கள், தோள்களை தளர்வாக வைத்திருங்கள் மற்றும் உங்கள் கால்களை தொங்கவிடாமல் தரையில் வைக்கவும். தேவைப்பட்டால், நீங்கள் குஷன் பயன்படுத்தலாம்.
பணிபுரியும் பெண்கள், இந்தப் பழக்கங்களைத் தங்கள் வழக்கத்தில் சேர்த்துக்கொள்வதன் மூலம் தங்கள் கர்ப்பத்தை எளிதாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளலாம்.
Image Source: FreePik