“கண்ணுக்கு மை அழகு” என்பார்கள்... ஆனால் அப்படி மை வைத்த கண்களையும் நீண்டு வளர்ந்த அடர்த்தியான கண் இமைகளே
வசீகரமானதாக மாற்றுகிறது. இந்த கட்டுரையில் கண் இமைகளை இயற்கையான முறையில் அடர்த்தியாக வளர வைப்பது எப்படி என பார்க்கலாம்...
பிரகாசமான, வசீகரிக்கும், படபட கண்களுக்கு நீண்டு வளர்ந்த கண் இமைகள் கூடுதல் சிறப்பு சேர்க்கிறது. இதனால் தான்
தற்போதைய பேஷன் யுகத்தில் பலரும் செயற்கையான ஐ லாஷ்களை பயன்படுத்துகின்றனர். அவை என்ன தான் கண்களுக்கு
கவர்ச்சியான லுக்கை கொடுத்தாலும், அது போலியானது என்பது சில சமயங்களில் அப்பட்டமாக தெரியக்கூடும்.
எனவே இயற்கையான வழியில் கண் இமைகள் வளர என்னென்ன வழிமுறைகள் உள்ளன என்பதை விளக்கியுள்ளோம்.
1. ஆமணக்கு எண்ணெய்:
ஆமணக்கு எண்ணெய் கண் இமைகள் இயற்கையான முறையில் அடர்த்தியாக வளர உதவக்கூடியது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள ரிசினோலிக் அமிலம், அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.
இது மயிர்க்கால்களுக்கு ஊட்டமளித்து வலுவூட்டுகிறது. மேலும் ஆமணக்கு எண்ணெயில் வைட்டமின் ஈ, ஒமேகா -6 ஆகியவற்றிற்கு இயற்கையாகவே முடி வளர்ச்சியைத் தூண்டும் சக்தி உள்ளது.
2. தேங்காய் எண்ணெய்:
தேங்காய் எண்ணெய் முடி வளர்ச்சிக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். தேங்காய்
எண்ணெயில் உள்ள லாரிக் அமிலம், முடியின் தண்டுகளுக்குள் ஊடுருவி, அவை அடர்த்தியாக வளர தூண்டுகிறது. மேலும் தேங்காய் எண்ணெயில் உள்ள மாய்ஸ்சரைசிங் பண்புகள், முடி உடைவதை தடுத்து, அவை ஆரோக்கியமாக வளர்வதை ஊக்குவிக்கிறது.
நன்கு சுத்தம் செய்யப்பட்ட மஸ்காரா பிரஷை தேங்காய் எண்ணெயில் முக்கி மஸ்காரா அப்ளை செய்வது போல் கண்களுக்கு மேல் மற்றும் கீழ் இமைகள் இரண்டிலும் தடவவும். இரவு முழுவதும் எண்ணெயை விட்டு, காலையில் பஞ்சு அல்லது காட்டன் துணியைக் கொண்டு சுத்தப்படுத்தலாம்.
விருப்பமுள்ளவர்கள் தேங்காய் எண்ணெய் உடன் சில துளிகள் லாவெண்டர் ஆயிலையும் கலந்து பயன்படுத்தலாம். இது கண் இமைகள் அடர்த்தியாக வளரவும், முடி உதிர்வை குறைக்கவும் உதவும்.
3. கிரீன் டீ:
கிரீன் டீ வெயிட்டை குறைக்க உதவும் என கேள்விப்பட்டிருப்பீர்கள்... கண் இமைகளில் முடி வளர உதவுமா? என ஆச்சர்யமாக இருக்கிறதா?. ஆம், கிரீன் டீ-யில் உள்ள ஆக்ஸினேற்ற பண்புகள் கண் இமை முடிகளின் வளர்ச்சியை தூண்டும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. இதில் எபிகல்லோகேடசின் கேலேட் (EGCG) உள்ளது, இது மயிர்க்கால்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, முடி உதிர்வையும் தடுக்கிறது.
நன்கு காய்ச்சி ஆர வைக்கப்பட்ட கிரீன் டீயை காட்டன் துணியில் நனைத்து கண்கள் மீது 15 முதல் 20 நிமிடங்கள் வைத்திருந்து, பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
4. கற்றாழை ஜெல்:
கற்றாழை ஜெல், கண் இமைகளின் வளர்ச்சியை அதிகரிக்கவும், வலுப்படுத்தவும் உதவுகிறது. இதிலுள்ள என்சைம்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் முடி வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, முடி உதிர்வை குறைக்கிறது. மேலும் கற்றாழையில் உள்ள
மாய்ஸ்சரைசிங் பண்புகள் கண் இமைகள் உடைவதை தடுத்து, அவை நீண்ட அளவில் வளர உதவுகிறது.
கற்றாழை செடியில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்ட ஜெல்லை, நன்கு சுத்தம் செய்யப்பட்ட மஸ்காரா பிரஷ் அல்லது காட்டன் துணியில் நனைத்து கண் இமைகள் மீது தடவவும். 30 நிமிடங்களுக்குப் பிறகு கண்களை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். கற்றாழை ஜெல்லுடன் வைட்டமின் ஈ எண்ணெய்யை கலப்பது கூடுதல் பலனளிக்கும்.
5.ஊட்டச்சத்து:
கண் இமைகள் ஆரோக்கியமாகவும், அடர்த்தியாகவும் வளர வைட்டமின்கள், தாதுக்கள், புரதம் நிறைந்த சமச்சீர் உணவு மிக அவசியமானது.
முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் உணவு வகைகளில் முட்டை, சால்மன் மீன் முக்கிய பங்காற்றுகிறது. முட்டையில் உள்ள பயோட்டினும், சால்மனில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களும் மயிர்கால்களுக்கு ஊட்டமளித்து, செழித்து வளர ஊக்குவிக்கிறது.