இன்றைய வேகமான வாழ்க்கை முறையில், உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்குவது பலருக்கும் கடினமாகிவிட்டது. பெரும்பாலானவர்கள் அலுவலகப் பணிகளில், கணினி முன் அமர்ந்து, அல்லது மொபைல் திரையில் நேரத்தை கழிப்பதால் உடல் இயக்கம் குறைந்துவிட்டது.
இதன் விளைவாக, உடல் எடை அதிகரிப்பு, இதய நோய், சர்க்கரை நோய் போன்ற பிரச்சனைகள் பரவலாக காணப்படுகின்றன. ஆனால் தினமும் வெறும் 30 நிமிடம் நடைப்பயிற்சி மேற்கொண்டால், உடலுக்கும் மனதுக்கும் பல அற்புதமான நன்மைகள் கிடைக்கும்.
30 நிமிட நடைபயிற்சியின் நன்மைகள் இதோ..
எலும்பு மற்றும் மூட்டு ஆரோக்கியம்
காலை நேர நடைப்பயிற்சி மூலம், சூரிய ஒளியில் கிடைக்கும் வைட்டமின் டி, எலும்புகளை வலுவாக்கும். தொடர்ந்து நடைப்பயிற்சி மேற்கொள்வது மூட்டுகளில் வலி, வறட்சி போன்ற பிரச்சனைகளை தடுக்கும். ஆர்த்ரிடிஸ் போன்ற நோய்களின் அபாயமும் குறையும்.
இதய ஆரோக்கியம் மேம்படும்
நடைப்பயிற்சி இரத்த ஓட்டத்தை அதிகரித்து, இதயத் துடிப்பை சீராக்கும். இதனால் இரத்த அழுத்தம் கட்டுப்படும், கெட்ட கொலஸ்ட்ரால் குறையும் மற்றும் நல்ல கொலஸ்ட்ரால் அதிகரிக்கும். இது இதய நோய்களின் அபாயத்தை குறைக்கும் மிக எளிய வழி.
மெட்டபாலிசம் வேகம் பெறும்
தொடர்ந்து நடைப்பயிற்சி மேற்கொண்டால், செரிமான முறைச் செயல்பாடு மேம்படும். உடல் உணவிலிருந்து சத்துக்களை சிறப்பாக உறிஞ்சும். மெட்டபாலிசம் அதிகரிப்பதால், உடல் கூடுதல் கலோரிகளை எரித்து, எடையை கட்டுப்படுத்த உதவும்.
மேலும் படிக்க: வைரலாகி வரும் 6-6-6 நடைபயிற்சி.. நன்மைகள் இங்கே..
நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
தொடர்ந்து நடைப்பயிற்சி மேற்கொண்டால், நோய்களை எதிர்க்கும் வெள்ளையணுக்கள் உற்பத்தி அதிகரிக்கும். இதனால் சளி, காய்ச்சல் போன்ற பொதுவான தொற்றுநோய்கள் குறைவாக ஏற்படும்.
தசைகள் உறுதியானவை
நடைப்பயிற்சி கால்கள், தொடைகள், இடுப்பு மற்றும் மைய தசைகளை வலுப்படுத்தும். தினமும் நடைப்பயிற்சி செய்தால், உடலின் அமைப்பு நன்றாக பராமரிக்கப்படும், உடல் சுறுசுறுப்பு கூடும்.
மூளைச் செயல்பாடு மேம்படும்
நடைப்பயிற்சி மூளைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரித்து, நினைவாற்றலை மேம்படுத்தும். முதுமையில் ஏற்படும் டிமென்ஷியா, அல்சைமர் போன்ற பிரச்சனைகளைத் தடுக்கும் திறன் நடைப்பயிற்சிக்குண்டு.
எடை குறையும்
அமெரிக்க ஆய்வுகளில், தினமும் 30 நிமிடம் வேகமாக நடப்பது உடல் எடையை குறைக்கும் என்பதை உறுதி செய்துள்ளனர். கலோரிகள் எரிப்பதால், உடல் கொழுப்பு குறையும்.
மனநிலை சீராகும்
பூங்காவில், பசுமை சூழலில் நடைப்பயிற்சி மேற்கொண்டால் மனஅழுத்தம் குறைந்து, மனதில் ஓய்வு கிடைக்கும். இது மனஅழுத்தத்தை குறைக்கும் ஹார்மோன்களை உற்பத்தி செய்ய உதவும். அதனால் நல்ல நிம்மதியான தூக்கமும் கிடைக்கும்.
சர்க்கரை நோய் கட்டுப்பாடு
நடைப்பயிற்சி இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்தி, இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். குறிப்பாக டைப்-2 சர்க்கரை நோயாளிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாகும்.
குறிப்பு
உடலுக்கும் மனதுக்கும் ஒரே நேரத்தில் நன்மை செய்யக்கூடிய எளிய பழக்கம் நடைப்பயிற்சி தான். தினமும் குறைந்தது அரைமணி நேரம் வேகமாக நடப்பதன் மூலம், நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் உங்கள் வசம் வரும். எந்தவித உபகரணங்களும், கூடுதல் செலவுகளும் இல்லாமல், இன்று முதல் நடைப்பயிற்சி தொடங்குங்கள். உங்கள் எதிர்கால ஆரோக்கியத்திற்கு அது ஒரு முதலீடு!