குழந்தைகள் என்றாலே துறுதுறுவாகவே இருப்பார்கள். எனவே ஒரு குறிப்பிட்ட வயது எட்டும் வரை அவர்களைக் கவனமாகப் பார்த்துக் கொள்வது அவசியம். பொதுவாக குழந்தைகள் தங்களைச் சுற்றியுள்ள சிறிய உலகில் உள்ள அனைத்தையும் ஆராய்வதற்கான புதிய வழிகளைக் கொண்டுள்ளனர். அதிலும் அவர்களுக்கு எல்லாம் புதிதாக இருக்கும். புதிய பெற்றோருக்கும் இந்த அனுபவம் புதிதாகவே இருக்கும். இந்நிலையில், குழந்தைகள் ஏற்படும் சில ஆபத்துகள், சில நேரங்களில் பெற்றோருக்கு முற்றிலும் கற்பனை செய்ய முடியாதவையாக இருக்கும். எனவே, விளையாடுவது, நடப்பது, உணவு உண்பது போன்ற எளிய செயல்களைச் செய்யும்போது, அவர்கள் பாதிப்படக் ஊடிய அபாயங்களைப் புரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும்.
அதிலும் குழந்தைகள் உட்கார்ந்து ஊர்ந்து செல்லத் தொடங்கும் போது, சுற்றிச் செல்லும் திறன் மற்றும் அவர்கள் கண்ணுக்குத் தெரியக்கூடிய எந்த பொருள்களையும் அணுகலாம் அல்லது எடுக்கலாம். குறிப்பாக, ஊசிகள், நாணயங்கள், பொத்தான்கள், திருகுகள், பேட்டரிகள், எந்த வகையான பொம்மை மற்றும் பொம்மை பாகங்கள் போன்ற பொருள்களின் வடிவம் குழந்தைகளின் கண்களில் தென்படலாம். குழந்தைகள் எடுத்த உடனேயே பெரும்பாலும் அதை உட்செலுத்துவதையே ஆர்வமாகக் கொண்டிருப்பர். இந்நிலையில் இந்த பொருள்கள் உடலின் உணவு அல்லது சுவாசப் பாதையில் நுழைந்து கடுமையான சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Child Health: குழந்தைகள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க எளிய வழிகள்!
குழந்தையின் நுரையீரலில் இரும்பு பொருள்
அவ்வாறே, சமீபத்தில் திண்டுக்கல் மாவட்டம் குட்டத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இன்பராஜ் என்பவரின் 8 மாத பெண் குழந்தை இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறலுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் குழந்தைக்கு மூச்சுத்திணறல் அதிகமாக இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தபோது குழந்தையின் நுரையீரலில் சிறிய கொண்டை ஊசி போன்ற பொருள் சிக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. அதன் பின், மேல்சிகிச்சைக்காக, மதுரையில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின், மருத்துவர்கள் ஸ்கேனை பரிசோதனை செய்ததில் குழந்தையின் இடது நுரையீரலில் மூச்சுக் குழாயில் இரும்பு ஊசி போன்ற பொருள் சிக்கி உள்ளதாக கண்டறியப்பட்டது.
அகற்றப்பட்ட LED லைட் ஸ்டிக்
அதனைத் தொடர்ந்து, நுரையீரல் சிறப்பு மருத்துவர்கள் குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படாத வகையிலும், நுரையீரல் மேலும் பாதிப்பு ஏற்படாத வகையிலும் அந்தப் பொருளை அகற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். இதற்கு அறுவை சிகிச்சை மருத்துவர்கள் மற்றும் மயக்க மருந்து நிபுணர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு சிறிய அளவிலான பிராங்கோஸ்கோப்பி என்றழைக்கப்படும் நுரையீரல் அகநோக்கி சிகிச்சையின் மூலம் குழந்தையின் இடது பக்க நுரையீரலில் சிக்கி இருந்த பொருள் அகற்றப்பட்டது. அதன் பிறகே, அந்த இரும்பு பொருளானது குழந்தைகள் விளையாடும் ரிமோட் கண்ட்ரோல் காரின் எல்இடி லைட் என உறுதி செய்யப்பட்டது.
இந்த பதிவும் உதவலாம்: Healthy Food For Kids: உங்க குழந்தையோட சீரான வளர்ச்சிக்கு இந்த 5 உணவுகள் கட்டாயம்!
பாதுகாப்பாகவும், பெரிய ஆபத்துகள் ஏற்படாத வகையில் குழந்தையின் நுரையீரலில் இருந்த பொருளை அகற்றியதற்கு மருத்துவக் குழுவைச் சேர்ந்த நுரையீரல் சிறப்பு மருத்துவர், அறுவை சிகிச்சை மருத்துவர்கள், மயக்க மருந்து நிபுணர்கள் போன்றோர்களுக்கு பாராட்டு கிடைக்கப்பெற்றது.
இது குறித்து மதுரை மருத்துவமனை முதல்வர் கூறியதாவது, “சிறு குழந்தைகள் கையில் கிடைக்கும் பொருள்களை வாயில் வைத்து விளையாடும் போது அவற்றை விழுங்கவோ அல்லது சாப்பிடவோ முயற்சிக்கலாம். இது அவர்களின் நுரையீரல் மூச்சுக்குழாயில் சிக்கிக் கொள்ள வாய்ப்பு உள்ளது. எனவே பெற்றோர்கள், தங்கள் குழந்தைகள் விழுங்க வாய்ப்புள்ள எந்த சிறு பொருள்களைக் கொண்டும் விளையாட அனுமதிக்க கூடாது. மேலும், குழந்தைகளுக்கு இருமல் மற்றும் மூச்சு திணறல் தொடர்ந்து இருந்தால், உரிய மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது நல்லது. இந்த சமயத்தில் குழந்தைகள் ஏதேனும் பொருள்களை விழுங்கி இருக்கலாம் என சந்தேகப்பட்டால், உடனே மருத்துவமனை அணுகி மருத்துவரிடம் தெரிவித்து சிகிச்சை எடுக்க வேண்டும். இதன் மூலம் உயிருக்கு எந்தவித பாதிப்பு ஏற்படாமல் தடுக்கலாம்” என்று கூறியுள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: Heart Attack In Kids: இந்தக் காரணத்தால் சிறு குழந்தைக்கும் மாரடைப்பு வரலாம் - அதைத் தவிர்ப்பது எப்படி?
Image Source: Freepik