First diabetes biobank in india: இன்றைய நவீனகாலகட்டத்தில் மோசமான உணவுமுறை, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக பலரும் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். அதில் ஒன்றாக நீரிழிவு நோயும் அடங்குகிறது. இன்றைய காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்த நாள்பட்ட நீரிழிவு நோய் காரணமாக பலரும் பலதரப்பட்ட பிரச்சனைகளைச் சந்திக்கும் சூழல் ஏற்படுகிறது. இதை நிர்வகிக்க நீரிழிவு நோயாளிகளுக்கென தனிப்பட்ட ஆராய்ச்சி தேவைப்படுகிறது. நீரிழிவு நோயாளிகளின் அதிகரிப்பிற்கு ஏற்ப, நீரிழிவு நோய்க்கான ஆராய்ச்சியும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
அவ்வாறே, நீரிழிவு ஆராய்ச்சிக்கான ஒரு அற்புதமான வளர்ச்சியாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மற்றும் மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை (MDRF) போன்றவற்றின் ஒத்துழைப்பின் மூலம் இந்தியாவின் முதல் நீரிழிவு உயிரி வங்கி (Diabetes Biobank) சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அதிநவீன வசதியானது, மேம்பட்ட ஆராய்ச்சிக்காக உயிரியல் மாதிரிகளைச் சேகரித்து, செயலாக்கி, சேமித்து, விநியோகிப்பதன் மூலம் நீரிழிவு நோய், அதற்கான காரணங்கள், மாறுபாடுகள் மற்றும் நீரிழிவு தொடபுடைய கோளாறுகள் போன்றவற்றை துரிதப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த பதிவும் உதவலாம்: Diabetes Diet: சர்க்கரையை கட்டுக்குள் வைக்கும் குறைந்த கிளைசெமிக் குறியீட்டு உள்ள 10 உணவுகள்!
ஏன் பயோபேங்க் முக்கியமானது?
உலகளவில் பலரும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 10 கோடிக்கும் அதிகமாக நீரிழிவு நோயாளிகள் உள்ளனர். மேலும், 13.6 கோடி ப்ரீடியாபயாட்டீஸ் நோயாளிகள் உள்ளனர். இது உலகிலேயே அதிக எண்ணிக்கையில் இருப்பதைக் குறிக்கிறது. இவ்வாறு அதிகளவிலான நீரிழிவு நோயின் பரவலான தாக்கம் இருப்பினும், இந்த நோயைப் படிக்க உதவக்கூடிய உயிரியல் மாதிரிகளின் பெரிய அளவிலான களஞ்சியங்கள் இந்தியாவில் இல்லை.
இதை மாற்றுவதற்கே, புதிய நீரிழிவு உயிர் வங்கி ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இது இந்தியா முழுவதும் உள்ள உயிரியல் மாதிரிகளை சேமிப்பதன் மூலம், நீரிழிவு நோயின் பின்னணியில் உள்ள மரபணு, வாழ்க்கை முறை மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளை ஆய்வு செய்வதற்கு விஞ்ஞானிகளுக்கு உதவுகிறது. மேலும் இது சிறந்த தடுப்பு உத்திகள், மேம்படுத்தப்பட்ட சிகிச்சைகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக இலக்கு சிகிச்சைகளுக்கு வழிவகுக்கிறது.
நீரிழிவு பயோபேங்கின் முக்கிய அம்சங்கள்
1.விரிவான உயிரியல் மாதிரி களஞ்சியம்
சென்னையின் நிறுவப்பட்ட இந்த நீரிழிவு பயோ பேங்க் ஆனது இரண்டு முக்கிய ICMR-நிதி ஆய்வுகளிலிருந்து சேகரிக்கப்பட்ட இரத்தம் மற்றும் DNA உள்ளிட்ட உயிரியல் மாதிரிகளுக்கான மையமாக செயல்படுகிறது.
ICMR-INDIAB ஆய்வு:
இந்தியாவில் நீரிழிவு குறித்த மிகப்பெரிய ஆய்வு, கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களை உள்ளடக்கியதாகும். இந்த நாடு தழுவிய ஆய்வில் 2008 முதல் 2020 வரையிலான 12 ஆண்டுகளில், 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 1.2 லட்சத்திற்கும் அதிகமான நபர்களை ஆய்வு செய்தது.
இதில் ICMR-INDIAB கண்டுபிடிப்புகளின் படி, 10.1 கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல, 13.6 கோடி நபர்கள் முன் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது தவிர, 31.5 கோடி பேர் உயர் இரத்த அழுத்தம் மற்றும் 21.3 கோடி பேர் ஹைபர்கொலஸ்டிரோலீமியா போன்ற வளர்சிதை மாற்றக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Diabetes Weight Loss: டைப் 1 நீரிழிவு நோயாளிகள் உடல் எடையை குறைப்பது கடினமா?
ICMR-YDR ஆய்வு:
இது இளம் வயதிலேயே தொடங்கும் நீரிழிவு நோயை மையமாகக் கொண்ட முதல் வகை தேசியப் பதிவேட்டைக் குறிக்கிறது. இது இளம் வயதில் கண்டறியப்பட்ட நீரிழிவு நோய்களைக் கண்காணிப்பதில் கவனம் செலுத்துகிறது. இந்த ஆய்வில் இந்தியா முழுவதிலும் இருந்து, 5,546 பங்கேற்பாளர்கள் பதிவு செய்யப்பட்டனர். இளம் வயதிலேயே நீரிழிவு நோய் பதிவேட்டின் முக்கிய அளவீடுகளாக, வகை 1 நீரிழிவு நோய்க்கான சராசரி வயது 12.9 ஆண்டுகளாகவும், வகை 1 நீரிழிவு நோய்க்கான சராசரி வயது 21.7 ஆண்டுகள் எனவும் கூறப்படுகிறது.
2.நீளமான ஆராய்ச்சிக்கான சாத்தியம்
நீரிழிவு நோயின் முன்னேற்றம் மற்றும் காலப்போக்கில் அதன் சிக்கல்களைக் கண்காணிப்பதற்கான நீண்ட கால ஆய்வுகளை உயிரி வங்கி ஆதரிக்கிறது. இந்த அணுகுமுறையானது நோய் முறைகள் பற்றிய முக்கியமான நுண்ணறிவுகளை வழங்கவும், இலக்கு தலையீடுகளை உருவாக்கவும் உதவுகிறது.
இந்தியாவில் முதன்முதலாக நிறுவப்பட்ட நீரிழிவு உயிர் வங்கியானது நீரிழிவு நோய்க்கு எதிரான போராட்டத்தில் ஒரு முக்கிய சாதனையாகக் கருதப்படுகிறது. இதில் மேம்பட்ட ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத்தின் சக்தியைப் பயன்படுத்துவது, இந்தியாவில் நீரிழிவு சிகிச்சையை மாற்றுவதையும், உலகளாவிய சுகாதார ஆராய்ச்சிக்கு பங்களிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முன்முயற்சி சிறந்த நீரிழிவு மேலாண்மைக்கான அவசரத் தேவையை நிவர்த்தி செய்கிறது. அது மட்டுமல்லாமல், தரவு சார்ந்த, துல்லியமான சுகாதாரப் பாதுகாப்பு மூலம் ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்குகிறது.
இந்த பதிவும் உதவலாம்: வின்டரில் எகிறும் சர்க்கரையைக் குறைக்க இந்த குறைந்த GI உள்ள உணவுகளை சாப்பிடுங்க
Image Source: Freepik