$
அஸ்ட்ராஜெனெகா கோவிட்-19 தடுப்பூசியை பரிசோதிக்க பயன்படுத்திய அதே தொழில்நுட்பத்தை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் பயன்படுத்துகிறது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் நிபா வைரஸுக்கு ( Nipah virus) எதிரான தடுப்பூசியை மனிதர்களிடம் பரிசோதிக்கத் தொடங்கியுள்ளது. கொடிய வைரஸுக்கு இன்னும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது தடுப்பூசி பரிசோதனை தொடங்கியுள்ளது மக்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது.

சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு மலேசியாவில் நிபா முதன்முதலில் கண்டறியப்பட்டது. இது பங்களாதேஷ், இந்தியா மற்றும் சிங்கப்பூரில் பெருந்தொற்றுக்கு வழிவகுத்தது. இந்நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கடந்த வாரம் வைரஸ் தடுப்பூசியின் முதல் சோதனையை தொடங்கியுள்ளது.
கோவிட்-19 தடுப்பூசியை பரிசோதிக்க அஸ்ட்ராஜெனெகாவை (AstraZeneca) பயன்படுத்தும் அதே தொழில்நுட்பத்தை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் பயன்படுத்துகிறது.
தற்போது இந்த தடுப்பூசி 51 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. 18 முதல் 55 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி சோதனை நடைபெற்று வருவதாகவும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தற்போது முதற்கட்ட சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும், நிபாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் அடுத்தகட்ட சோதனைகள் நடத்தப்படும் என்றும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பரில் கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. 6 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் இரண்டு பேர் உயிரிழந்ததை அடுத்து மக்களிடையே அச்சம் நிலவி வந்தது. நிபாவின் முக்கிய அறிகுறிகள் காய்ச்சல், தலைவலி, இருமல் மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவையாகும்.
வளர்ந்து வரும் தொற்று நோய்களுக்கு எதிரான தடுப்பூசிகளின் வளர்ச்சியை ஆதரிக்கும் உலகளாவிய கூட்டமைப்பான CEPI மூலம் நிபா வைரஸ் பரிசோதனைக்கான நிதியுதவி வழங்கப்படுகிறது. 2022 ஆம் ஆண்டில், மாடர்னா (MRNA.O) மற்றும் அமெரிக்க தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் நிறுவனம் ஆகியவை நிபா வைரஸ் தடுப்பூசியின் ஆரம்ப கட்ட மருத்துவ பரிசோதனையைத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.