$
How To Care Premature Baby: கர்ப்ப காலத்தில் குழந்தை பராமரிப்பு என்பது மிக முக்கியமான ஒன்றாகும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் சில ஊட்டச்சத்து குறைபாடுகள், சர்க்கரை நோய், தைராய்டு பிரச்சனை மற்றும் இன்னும் சில காரணங்களால் குழந்தை பிறப்பதில் பிரச்சனைகள் ஏற்படலாம். அதாவது இவை அனைத்தும் குறைப்பிரசவம் ஏற்படுவதற்கான காரணிகளாக அமைகின்றன. இந்த நேரத்தில் குழந்தையின் வளர்ச்சி மற்றும் பராமரிப்பிற்கு தாயின் பங்களிப்பு முக்கிய காரணியாக அமையும்.
குறைப்பிரசவம்
பொதுவாக கர்ப்ப காலத்தில் 37 வாரங்கள் முழுமையடைந்த பின்னரே குழந்தைகள் பிறக்கும். ஆனால், கர்ப்ப காலம் முழுமையடையாமல் 37 வாரங்களுக்கு முன்னரே குழந்தைகள் பிறப்பதை குறைமாத குழந்தை அல்லது குறைப்பிரசவம் என்பர். குழந்தைகள் குறைமாதத்தில் பிறந்த பிறகு சில பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடலாம். எனவே, குறைமாத குழந்தைகளை சரிவர பராமரிப்பது அவசியமானதாகும்.
இந்த பதிவும் உதவலாம்: குறை மாத குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை!!!
குறைமாத குழந்தைகளுக்கு அதிக கவனிப்பு தேவைப்படுகிறது. முன் கூட்டியே பிறக்கும் குழந்தைகளின் உடல்கள், சரியான நேரத்தில் பிரசவம் செய்யும் குழந்தைகளைப் போல வளராமல் வளர்ச்சியைப் பாதிக்கலாம். பெரும்பாலான நேரங்களில் குறைமாத குழந்தைகளை NICU-ல் வாரங்கள் அல்லது சில நேரங்களில், குழந்தையின் ஆரோக்கியத்தைப் பொறுத்து வாரங்கள் முதல் மாதங்கள் வரை வைக்கப்படுகின்றன. முன்கூட்டியே பிறந்த குழந்தைகளின் நோய் எதிர்ப்புச் சக்தி பலவீனமாக இருக்கும். இதனால் அவர்கள் விரைவில் நோய்த்தொற்றுகளுக்கு ஆளாகின்றனர். இவர்களை உரிய முறையில் பாதுகாப்பது மற்றும் பராமரிக்க சில குறிப்புகளை பெற்றோர்கள் பின்பற்ற வேண்டும்.

குறைமாத குழந்தை பராமரிப்பு முறைகள்
குறைமாத குழந்தைகளுக்கு சரியான பராமரிப்பை எப்படி வழங்குவது என்பது குறித்து சென்னை மதர்ஹூட் மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவர் மற்றும் நியோனாட்டாலஜிஸ்ட் டாக்டர் மாதுரி பிரபு அவர்கள் விளக்கியுள்ளார்.
குழந்தையின் வளர்ச்சியை கண்காணித்தல்
சாதாரண குழந்தைகளின் வளர்ச்சியானது குறைமாத குழந்தைகளின் வளர்ச்சியில் இருந்து சற்று வேறுபட்டதாகும். எனவே, குறைமாத குழந்தையின் வளர்ச்சியினை அடிக்கடி பரிசோதித்து அதற்கேற்ப கண்காணிப்பது அவசியம்.
இந்த பதிவும் உதவலாம்: Newborn Hair Growth: பிறந்த குழந்தைக்கு முடி அதிகமாக வளர இத செய்யுங்க
தாய்ப்பால் ஆதாரம் மட்டும்
புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் அல்லது சில நேரங்களில் புட்டிப்பால் கொடுப்பது வழக்கம். தாய்ப்பால் செரிமானம் அடையாமல் இருப்பவர்களுக்கு அல்லது மறுப்பவர்களுக்கு ஃபார்முலா பால் வழங்கப்படுகிறது. ஆனால், குறைமாத குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்கப்பட வேண்டும். ஏனெனில் தாய்ப்பாலில் குழந்தைகளுக்குத் தேவையான நோயெதிர்ப்பு சக்திகள் மற்றும் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் உள்ளன. மேலும் தாய்ப்பால் குழந்தைகளுக்கு ஏற்படும் ஒவ்வாமை அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.

குறிப்பிட்ட நேரத்தில் உணவு
பொதுவாக குழந்தைகளின் தேவைக்கேற்பவே உணவளிக்கப்படுகிறது. குழந்தைக்கு பசி எடுக்கும் போது தாய் உணவளிக்க வேண்டும். ஆனால் இவை குறைமாத குழந்தைக்கு செய்யக்கூடாது. குறைமாத குழந்தை அல்லது முன்கூட்டியே பிறந்த குழந்தைகளின் வயிறு முழுமையடையாமல் போகலாம். இதனால் அவர்கள் பாலை சரியாக ஜீரணிக்க முடியாமல் போகலாம். இது அவர்களுக்கு செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும். எனவே குழந்தைகளுக்கு அவர்களின் செரிமான அமைப்பை அதிகரிக்க திட்டமிடப்பட்ட உணவுகளை அளிக்கலாம். மேலும், சாதாரண குழந்தைகளை விட குறைமாத குழந்தைகள் அதிகமாக தூங்குவர். எனவே குறைமாத குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து தவறவிடாமல் பாதுகாக்க இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை அவர்களுக்கு உணவளிப்பது அவசியம் ஆகும். உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டால், இரத்த சர்க்கரை குறைவு பிரச்சனைகள் ஏற்படலாம்.
இந்த பதிவும் உதவலாம்: High Birth Weight: அதிக உடல் எடையுடன் குழந்தை பிறப்பதற்கான காரணம் என்ன தெரியுமா?
கங்காரு பராமரிப்பு
குறைமாத குழந்தைகளுக்கு கங்காரு பராமரிப்பு மிக அவசியம் ஆகும். இதில் குழந்தையை தாய் தனது மார்புக்கு அருகில் வைத்திருக்க வேண்டும். குறைமாத குழந்தை உடல் வெப்பத்தை விரைவாக இழக்கச் செய்யும். எனவே, குழந்தையின் உடலில் வெப்பத்தை சீராக வைத்திருக்க தாய் அல்லது தந்தை உடலின் வெப்பத்தை வழங்க குழந்தையை மார்புக்கு அருகில் வைத்திருக்கலாம். இதனுடன் குழந்தைகளை குளிர்ச்சியான சூழலில் இருந்து விலகி வைக்க வேண்டும்.

தேவையான ஊட்டச்சத்து வழங்குதல்
குறைமாத குழந்தைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை வழங்குவதில் கவனமாக இருக்க வேண்டும். பொதுவாக முன்கூட்டியே பிறக்கும் குழந்தைகளுக்கு இரும்புச் சத்தை சேமித்து வைக்கும் திறன் குறைவாக இருக்கும். இதனால், இரத்த சோகை ஏற்பட வாய்ப்புண்டு. எனவே, குறைமாத குழந்தைகள் பிறந்த 2 முதல் 3 வாரங்களுக்குப் பிறகு இரும்புச்சத்து மாத்திரைகளை வழங்குவது அவசியமாகும். மேலும், எலும்பு தாது அடர்த்தி இழப்பு அபாயம் ஏற்பட்டிருப்பின் அதற்கு கால்சியம், வைட்டமின் டி உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் கொண்ட உணவை எடுத்துக் கொள்ளலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Stop Baby Hiccups: பிறந்த குழந்தைக்கு வரும் விக்கலை நிறுத்த இப்படி முயற்சி செஞ்சி பாருங்க!
Image Source: Freepik