$
Homemade Sunscreen Preparation: கோடைக்காலத்தில் தொடங்கியதும் பலரும் சரும பிரச்சனைகளைச் சந்திப்பர். இதற்கு சந்தையில் கிடைக்கும் பல வகையான லோஷன்கள், கிரீம்கள் போன்றவற்றை உபயோகிப்பர். ஆனால் இதை நீண்ட நேரம் பயன்படுத்துவது சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். இதற்கு சிறந்த தீர்வாக வீட்டிலேயே உள்ள இயற்கையான பொருள்களைக் கொண்டு சன்ஸ்கிரீனைத் தயார் செய்யலாம்.
வீட்டிலேயே தயாரிக்கப்படும் இயற்கையான சன்ஸ்கிரீன் சரும பிரச்சனைகளைத் தடுப்பதுடன், சருமத்தைப் பராமரிக்கவும் உதவுகிறது. சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதன் நன்மைகள் மற்றும் வீட்டிலேயே சன்ஸ்கிரீன் தயார் செய்யும் முறைகள் குறித்தும் பச்சௌலி வெல்னஸ் கிளினிக்கின் நிறுவனர் மற்றும் அழகு சாதன நிபுணர் ப்ரீத்தி சேத் அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: Rose Flower For Skin: சரும பொலிவுக்கு ரோஜாப்பூவை எப்படி பயன்படுத்தணும் தெரியுமா?
ஏன் சன்ஸ்கிரீன் பயன்பாடு முக்கியம்?
வெயிலில் செல்வதற்கு முன் சக்ஸ்கிரீன் பயன்படுத்துவது அவசியமாகும். இதனைப் பயன்படுத்துவதன் மூலம் சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்களிலிருந்து சருமம் சேதமடையாமல் பாதுகாக்கலாம். இது சருமத்தின் இயற்கையான நிறம் மற்றும் பொலிவை பராமரிக்க உதவுகிறது. குறிப்பாக, கோடைக்காலத்தில் சூரிய ஒளி அதிகம் இருப்பதால் சருமத்தைப் பாதுகாக்க சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது மிகவும் அவசியமாகும்.

வீட்டிலேயே சன்ஸ்கிரீன் பயன்படுத்தும் முறை
இயற்கையான முறையில் வீட்டிலேயே உள்ள பொருள்களைக் கொண்டு சன்ஸ்கிரீனைத் தயார் செய்யலாம்.
எள் மற்றும் பாதாம் எண்ணெய் லோஷன்
தேவையானவை
- எள் எண்ணெய் - 40 மி.லி
- ஆலிவ் எண்ணெய் - 10 மி.லி
- பாதாம் எண்ணெய் - 10 மி.லி
செய்முறை
எள் மற்றும் பாதாம் எண்ணெய் கொண்டு தயார் செய்யப்படும் இந்த லோஷனைத் தயார் செய்ய, மேலே கொடுக்கப்பட்ட அளவுகளில் உள்ள பாதாம் மற்றும் எள் எண்ணெயைக் கலக்கவும். பிறகு 10 மி.லி ஆலிவ் எண்ணெயைச் சேர்க்க வேண்டும். இந்த மூலிகை சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவதன் மூலம் கோடைக்காலத்தில் சருமத்தைப் பாதுகாக்கலாம். மேலும் சருமத்தின் நிறத்தை மேம்படுத்த உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Oats For Skin: சருமத்தைப் பொலிவாக வைக்க ஓட்ஸ் உடன் இந்த பொருளை மட்டும் சேர்த்து பயன்படுத்துங்க
வெள்ளரிக்காய் மற்றும் ரோஸ்வாட்டர் சன்ஸ்கிரீன்
தேவையானவை
- ரோஸ் வாட்டர் - சிறிதளவு
- வெள்ளரி - 1
செய்முறை
இந்த சன்ஸ்கிரீன் தயார் செய்ய முதலில் வெள்ளரியை அரைக்க வேண்டும். பின் அதன் சாற்றை பிழியவும். அதன் பிறகு ரோஸ் வாட்டரைச் சேர்க்க வேண்டும். வெயிலில் செல்வதற்கு 15 நிமிடங்களுக்கு முன்னதாக இந்த லோஷனை முகத்தில் தடவ வேண்டும். இது சருமத்தை சூரிய ஒளியிலிருந்து இரண்டு மணி நேரம் பாதுகாக்கிறது. மேலும் உடல் மற்றும் முகத்தை குளிர்ச்சியாக வைக்க வெள்ளரிக்காய் பெரிதும் உதவுகிறது.

தேங்காய் எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய்
தேவையானவை
- ஆலிவ் எண்ணெய் - 15 சொட்டுகள்
- தேங்காய் எண்ணெய் - அரை கப்
- கேரட் விதை எண்ணெய் - 7 சொட்டுகள்
செய்முறை
இந்த சன்ஸ்கிரீன் தயார் செய்ய, முதலில் அரை கப் அளவு தேங்காய் எண்ணெயில் 15 சொட்டு ஆலிவ் எண்ணெயைச் சேர்க்க வேண்டும். இப்போது அதில் 7 துளிகள் கேரட் விதை எண்ணெய் சேர்த்து நன்கு கலக்க வேன்டும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட சன்ஸ்கிரீனை கண்ணாடி பாட்டிலில் சேர்க்கவும். இதை நீண்ட நேரம் பயன்படுத்தலாம். இந்த எண்ணெய் சார்ந்த சன்ஸ்கிரீன் லோஷனை வெளியில் செல்லும் முன் சருமத்தில் தடவி வர சன் டான் பிரச்சனை வராமல் தடுக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Pedicure Home Remedies: பாதங்களை அழகாக்க மற்றும் பளபளப்பாக வைக்க வீட்டிலேயே பெடிக்யூர் செய்வது எப்படி?
ரோஸ் வாட்டர் மற்றும் ஆரஞ்சு சாறு
தேவையானவை
- ஆரஞ்சு சாறு - 5 சொட்டு
- ரோஸ் வாட்டர் - 10 சொட்டுகள்
செய்முறை
ஆரஞ்சு சாறு உடல் ஆரோக்கியத்துடன், சருமத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். ஆரஞ்சு சாறு மற்றும் ரோஸ் வாட்டர் சன்ஸ்கிரீன் செய்ய, ரோஸ்வாட்டரை ஆரஞ்சு சாற்றுடன் கலக்க வேண்டும். பின் இதை முகத்தில் தடவி, சருமத்தை சூரிய ஒளியின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கலாம்.
கற்றாழை சன்ஸ்கிரீன் லோஷன்
தேவையானவை
- தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டி
- கற்றாழை ஜெல் - 1/4 கப்
- பெப்பர்மின்ட் அத்தியாவசிய எண்ணெய் - 10 சொட்டுகள்
செய்முறை
இந்த சன்ஸ்கிரீன் செய்ய, முதலில் கிண்ணம் ஒன்றில் கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் இதில் தேங்காய் எண்ணெய், பெப்பர்மின்ட் எண்ணெய் போன்றவற்றைச் சேர்க்கவும். இவை அனைத்தும் கிரீமியாக மாறும் வரை தொடர்ந்து கலக்க வேண்டும். பின் இதை காற்று புகாத கொள்கலனில் சேர்த்து சூரிய ஒளியில் செல்வதற்கு முன்பாக முகம், கழுத்து மற்றும் கைகளில் தடவிக் கொள்ளலாம். இது முகத்தில் மென்மையான மற்றும் குளிர்ச்சியான விளைவைத் தருகிறது. இவை தீங்கு விளைவிக்கும் புற ஊதாக் கதிர்களிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது. இது தவிர எண்ணெயில் உள்ள பீட்டா கரோட்டீன், வைட்டமின் ஈ மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை சூரிய ஒளியிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது.

இவ்வாறு வீட்டிலேயே தயார் செய்யப்படும் சன்ஸ்கிரீன் லோஷன் சருமத்திற்கு மிகுந்த நன்மைகளைத் தருகிறது. சந்தையில் கிடைக்கும் சன்ஸ்கிரீனுக்குப் பதிலாக வீட்டில் தயாரிக்கப்படும் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. எனினும், ஏதேனும் ஒவ்வாமை பிரச்சனை இருப்பின், இந்த சன்ஸ்கிரீனைப் பயன்படுத்தும் முன்னதாக அழகுசாதன நிபுணரை அணுகுவது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: Sunscreen Facts: கோடை காலத்தில் சன்ஸ்கிரீனை எவ்வளவு, எப்படி பயன்படுத்த வேண்டும்?
Image Source: Freepik