How to make banana rice and its benefits: அன்றாட உணவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகள், பழங்கள், பானங்கள், நட்ஸ், விதைகள் போன்றவற்றை எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். அவ்வாறு உடலுக்குப் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தரும் உணவுகளில் வாழைக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை நம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ஏராளமான நன்மைகளைப் பெறலாம். வாழைக்காய், வாழைப்பழம், வாழைப்பூ, வாழைத் தண்டு என வாழை சார்ந்த அனைத்துமே உடலுக்கு நன்மைகளைத் தரக்கூடியதாகும்.
இதில் பெரும்பாலும் வாழைக்காயை வைத்து வறுவல் செய்து தான் சுவைத்திருப்போம். ஆனால், வித்தியாசமான வகையில் இதை வைத்து சாதத்தைத் தயார் செய்யலாம். இதன் சுவை வித்தியாசமாக இருப்பதால் குழந்தைகள், பெரியவர்கள் அனைவருமே விரும்பி சாப்பிடுவர். இது சுவையான மற்றும் சூப்பரான மதிய உணவு ரெசிபியாக அமைகிறது. இதற்கு தனியாக தொட்டுக் கொள்ள எதுவும் தேவையில்லை. ஏனெனில், இந்த வாழைக்காய் பொடி மசாலாவை தனித்து உண்ணும் போதே சுவையானதாக இருக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: வாழைக்காய் சாப்பிட்டால் இவ்வளவு நல்லது இருக்கா?
வாழைக்காய் மசாலா சாதம் செய்வது எப்படி?
தேவையான பொருள்கள்
- வாழைக்காய் - 3
- வடித்த சாதம் - ஒரு கப்
- வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
- வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
- கொத்தமல்லித்தலை - கைப்பிடியளவு
- எலுமிச்சை பழச்சாறு - 1
- எள் - தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு
பொடி தயாரிக்க தேவையானவை
- நெய் - 2 டேபிள் ஸ்பூன்
- துவரம் பருப்பு -2 டேபிள் ஸ்பூன்
- கடலை பருப்பு 2 டேபிள் ஸ்பூன்
- மிளகு - ஒரு ஸ்பூன்
- மல்லி விதைகள் - 2 டேபிள் ஸ்பூன்
- தேங்காய்த் துருவல் - ஒரு கப்
தாளிக்க தேவையானவை
- நெய் - 1 ஸ்பூன்
- சோம்பு - கால் ஸ்பூன்
- கடுகு - கால் ஸ்பூன்
- பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
- வெந்தயம் - கால் ஸ்பூன்
- மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
- இஞ்சி - கால் இன்ச் (துருவியது)
- பூண்டு - கால் இன்ச் (துருவியது)
- கறிவேப்பிலை - 1 கொத்து
வாழைக்காய் மசாலா சாதம் செய்முறை
- முதலில் வாழைக்காயை இரண்டாக வெட்டி, அதில் எலுமிச்சை மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் வேக வைத்துக் கொள்ள வேண்டும். ஸ்டீமரில் வேக வைத்தால், இவற்றை மேலே வைத்து வேக வைக்க வேண்டும்.
- இதில் வாழைக்காயை அதிகம் வேகவைக்கக்கூடாது. மிருதுவாகும் வரை வேகவைத்தால் போதுமானது. பிறகு இதை வெளியே எடுத்து ஆற வைத்து, தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளலாம்.
இந்த பதிவும் உதவலாம்: அடேங்கப்பா.! வாழைக்காயில் இவ்வளவு அதிசயங்கள் இருக்கா.?
பொடி தயாரிக்கும் முறை
- கடாய் ஒன்றில் எண்ணெய் ஊற்றி, அது சூடான பிறகு, அதில் தனியாக மல்லி விதைகளை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து, துவரம் பருப்பு மற்றும் கடலைப் பருப்பு போன்றவற்றைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவேண்டும். அதன் பிறகு, வரமிளகாய் சேர்த்து வறுக்கலாம்.
- இந்த பொருள்களை கருகி விடாமல் வறுத்து எடுத்துக் கொண்டு, இவை அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து ஆறவைத்துக் கொள்ள வேண்டும்.
- அதன் பிறகு, அதே கடாயில் கூடுதலாக எண்ணெய் சேர்த்து தேங்காய்த் துருவலை சேர்த்து நன்றாக பொன்னிறமாகும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளலாம். இதையும் எடுத்து ஆறவைத்துக் கொள்ளலாம்.
- இது ஆறிய பிறகு, வறுத்த அனைத்துப் பொருள்களையும் மிக்ஸி ஜாரில் ஒன்றாகச் சேர்த்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
- இப்போது மசாலாப்பொடி தயாராகி விட்டது. மசாலாப் பொடி அதிகமாக இருந்தால், கண்ணாடி பாட்டிலில் சேர்த்து ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளலாம். இதை மற்ற காய்கறிகள் செய்யும் போதும் சேர்த்துக் கொள்ளலாம்.
தாளிக்கும் முறை
- ஒரு கடாயில் எண்ணெயைச் சேர்த்து, அது சூடான பிறகு கடுகு சேர்த்து பொரிய வைக்க வேண்டும். அதன் பிறகு, சோம்பு (சோம்புக்குப் பதில் சீரகமும் சேர்க்கலாம்), பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் போன்றவற்றைச் சேர்க்க வேண்டும்.
- பிறகு இதில் கறிவேப்பிலை, வெங்காயத்தைச் சேர்த்து வதக்கலாம். இது பொன்னிறமான பிறகு, துருவிய இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.
- அதன் பின், வேகவைக்கப்பட்ட வாழைக்காயைச் சேர்த்து கலந்து விட வேண்டும். அடுத்ததாக, உப்பு மற்றும் தயாரித்து வைத்துள்ள மசாலாப் பொடி இரண்டு ஸ்பூன் சேர்க்கலாம்.
- இதை நன்றாக கிளறி சிறிது நேரம் வேக விட்டுக்கொள்ளவேண்டும். கடைசியாக, இதில் கொத்தமல்லி இலைகள் தூவி, எலுமிச்சைச் சாற்றை பிழிந்து விட்டு கிளறி இறக்கி விடலாம். இப்போது வாழைக்காய் பொடிமாஸ் தயாரானது.
வாழைக்காய் மசாலா சாதம்
சாதம் தயார் செய்வதற்கு ஒரு கடாயில் வெண்ணெய் விட்டு, அது சூடான பிறகு, வாழைக்காய் பொடிமாஸ் மற்றும் வடித்த சாதம் போன்றவற்றைச் சேர்த்து நன்கு கிளற வேண்டும். இப்போது சுவையான வாழைக்காய் மசாலா சாதம் தயாராகி விட்டது. இது ஒரு நல்ல லன்ச் பாக்ஸ் ரெசிபியாகும்.
வாழைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
வாழைக்காயில் வைட்டமின்-ஏ, வைட்டமின்-பி6, வைட்டமின்-சி, நார்ச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
- வாழைக்காயில் உள்ள அதிக அளவு நார்ச்சத்துக்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, செரிமானம் தொடர்பான பிரச்சனைகளை நீக்க உதவுகிறது.
- இது செரிமானம் எடையை நேரம் எடுக்கும் என்பதால், நீண்ட நேரம் நிரம்பிய உணர்வை அளிக்கிறது. இது பசியுணர்வைக் கட்டுப்படுத்தி, அதிக கலோரி உட்கொள்ளலைத் தடுக்கிறது.
- வாழைக்காயில் ஏராளமான பொட்டாசியம், வைட்டமின் பி-6, வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, பல்வேறு நோய்த்தொற்றுக்களிலிருந்து விடுபட உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Valakkai Varuval: மீன் சுவையை மிஞ்சும் வாழைக்காய் வறுவல்... இதோ ரெசிபி!
Image Source: Freepik