சத்துமாவு கஞ்சி
கஞ்சி தயாரிப்பது பற்றி சொல்லும் முன்பு, அதற்கான சத்து மாவு தயாரிப்பது பற்றி பார்த்து விடுவோம்.
தேவையானவை:
புழுங்கலரிசி - 100 கிராம்
புட்டரிசி - 100 கிராம்
பொட்டுக்கடலை - 100 கிராம்
உளுத்தம்பருப்பு - 100 கிராம்
ஜவ்வரிசி - 50 கிராம்
பாசிப்பயறு - 100 கிராம்
கொள்ளு - 50 கிராம்
ராகி - 200 கிராம்
கம்பு - 100 கிராம்
வெள்ளை சோளம் - 100 கிராம்
மக்காச்சோளம் - 100 கிராம்
வெள்ளை சோயா - 100 கிராம்
பார்லி - 100 கிராம்
பாதாம் - 50 கிராம்
முந்திரி - 50 கிராம்
வேர்க்கடலை - 100 கிராம்
சம்பா கோதுமை - 200 கிராம்
பாசிப்பருப்பு - 100 கிராம்
ஏலக்காய் - 25 கிராம்
முக்கிய கட்டுரைகள்
செய்முறை:
- அரிசி, பொட்டுக்கடலை, ஜவ்வரிசி, பாதாம், முந்திரி, பார்லி, வேர்க்கடலை, மக்காச்சோளம், ஏலக்காய் தவிர்த்து, மற்ற பொருள்கள் எல்லாவற்றையும் ஒன்றாக ஊறவையுங்கள். மக்காச்சோளத்தை மட்டும் தனியே ஊறவையுங்கள்.
- இரவு முழுவதும் தானியங்கள் ஊறவேண்டும். மறுநாள் காலையில், தண்ணீரை வடித்துவிட்டு, தானியங்களை ஒரு துணியில் கட்டி வைத்துவிடுங்கள்.
- அன்று முழுதும் தானியங்கள் துணியிலேயே இருக்கட்டும். அவ்வப்போது தண்ணீர் தெளித்துவிடுங்கள். அடுத்த நாள் பிரித்தால், தானியங்களிலிருந்து நன்கு முளை வந்திருக்கும். அன்று முழுவதும் நிழல் காய்ச்சலாக தானியங்களைக் காயவையுங்கள்.
- நன்கு காய்ந்ததும், அவற்றை வெறும் வாணலியில் சிறிது சிறிதாக போட்டு, சிறு தீயில் வாசனை வரும்வரை வறுத்தெடுங்கள். முதலில் ஊறவைக்காமல் தனியாக எடுத்துவைத்த அரிசி, பொட்டுக்கடலை போன்ற பொருள்களையும் வறுத்து வையுங்கள்.
- பார்லியை வறுக்க வேண்டாம். வறுத்த பொருள்களோடு ஏலக்காய் கலந்து, மெஷினில் கொடுத்து நன்கு அரைத்து வைத்துக்கொள்ளுங்கள்.
- சத்துமாவு கஞ்சிக்கு, இந்த மாவிலிருந்து ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து, ஒரு கப் பாலில் கட்டியில்லாமல் நன்கு கரைத்து, சர்க்கரை சேர்த்துக் காய்ச்சுங்கள். இரண்டு நிமிடங்கள் கொதித்துப் பொங்கியதும், ஆற்றிக் குழந்தைகளுக்குக் கொடுங்கள்.
பயன் : குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்குத் தேவையான
அனைத்து சத்துக்களும் நிறைந்த முழுமையான உணவு இது. காலை உணவு சாப்பிட முடியாத அவசரத்தில் இதை ஒரு கப் குடித்தால் போதும்.
தானிய லட்டு :
தேவையானவை:
சத்து மாவு- 1 கப்
பொடித்த சர்க்கரை - 1 கப்
நெய் -தேவைக்கு
செய்முறை:
- பொடித்த சர்க்கரையை கட்டிகள் இல்லாமல், சலித்துக் கொள்ளுங்கள். இதை, சத்துமாவுடன் நன்கு கலந்து கொள்ளுங்கள்.
- நெய்யை சற்று சூடாக்கி, மாவு மற்றும் சர்க்கரைக் கலவையில், சிறிது சிறிதாக ஊற்றி, கலந்துகொண்டே இருங்கள்.
- மாவை உருண்டை பிடித்துப் பார்த்தால், உதிராமல் இருக்க வேண்டும். அதுதான் சரியான பக்குவம்.
- அந்தப் பக்குவம் வந்ததும், நெய் சேர்ப்பதை நிறுத்திவிட்டு, உருண்டைகளாகப் பிடித்து வையுங்கள். இப்போது குழந்தைகளுக்கு பிடிக்கும் தானிய லட்டு தயார்.
பயன்:
சுவையான இந்த தானிய லட்டில் இரும்புச்சத்தும் புரதச்சத்தும் நிரம்பியிருப்பதால், குழந்தைகளின் வளர்ச்சிக்கு உகந்தது.
சிறுதானிய தோசை:
- கம்பு, கேழ்வரகு, சோளம், கொள்ளு, பாசிப் பயறு, குதிரைவாலி, சாமை அரிசி, வரகரிசி ஆகியவற்றை தலா கால் கிலோ எடுத்துக்கொள்ளவும்.
- இதனுடன், தோலுடன்கூடிய முழு கறுப்பு உளுத்தம்பருப்பு, கொண்டைக்கடலை தலா 4 தேக்கரண்டி அளவுக்குச் சேர்க்கவும்.
- இவற்றை காலை முதல் மாலை வரை தண்ணீரில் ஊறவைக்கவும். நன்றாக ஊறியதும், தண்ணீரை வடித்து, இரவு, ஒரு வெள்ளைத் துணியில் கட்டிவைக்கவும். காலையில் முளை கட்டி இருக்கும்.
- இதனுடன், நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
- தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு அடையாகத் தட்டி, அதன் மேல் முருங்கைக் கீரையைத் தூவி, இருபுறமும் சுட்டு எடுத்தால், சுவையான அடை தயார்.
பலன்கள்:
- கேழ்வரகு, கம்பும் ரத்தத்தில் உள்ள இரத்தக் கொழுப்பைக் கட்டுப்படுத்த உதவுகின்றன.
- குதிரைவாலி, இதய நோய் உள்ளவர்களுக்கு நல்ல உணவு.
- கேழ்வரகில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், வெல்லம் / கருப்பட்டியின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.
- சாமை, முதுகெலும்பு வலியைக் குறைக்கும். வரகு, உடல் பருமன், மன அழுத்தத்தைக் குறைக்க உதவும்.
தினை இனிப்புப் பொங்கல்:
தேவையானவை:
தினை அரிசி – 100 கிராம்
பாசிப்பருப்பு – 30 கிராம்
வெல்லம் – 200 கிராம்
நெய், முந்திரி, திராட்சை, ஏலக்காய் – சிறிதளவு
தண்ணீர் – 3 கிண்ணம்
உப்பு – ஒரு சிட்டிகை
செய்முறை:
- தினை அரிசி மற்றும் பாசிப்பருப்பைத் தனித்தனியே வறுத்து, நன்றாக ஊறவைக்கவும்.
- அடி, கனமான பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி, வெல்லத்தைப் போட்டு, பாகு காய்ச்சவும்.
- ஊறவைத்த தினை மற்றும் பருப்பை, தண்ணீரில் நன்றாக வேகவைக்கவும். வெந்தவுடன் அதில் வெல்லப்பாகை ஊற்றவும்.
- பொங்கல் பதம் வந்தவுடன், ஐந்து நிமிடங்கள் மூடிவைக்கவும். பிறகு, நெய்யில் முந்திரி, திராட்சை வறுத்து, ஏலக்காயைப் பொடித்து, பொங்கலில் சேர்த்துப் பரிமாறவும்.
பலன்கள்:
குளிர்ச்சித் தன்மையை அளிக்கும் உணவு இது. புரதச் சத்துக்கள் நிறைந்துள்ளன. சீக்கிரத்தில் செரிமானம் ஆகும். இரும்பு சத்து நிறைந்துள்ளதால் எலும்புகள் வலுப்பெறும்.