Benefits Of Orange During Pregnancy: கர்ப்ப காலத்தில் பெண்கள் உணவு முறையில் அதிக கவனம் செலுத்துவது அவசியமாகும். ஏனெனில், உணவு மாற்றத்தினால் கர்ப்பிணி பெண்களும், வயிற்றில் உள்ள குழந்தையும் பாதிக்கப்படும் சூழல் ஏற்படலாம். எனவே, கர்ப்பிணி பெண்கள் ஊட்டச்சத்து நிறைந்த பழங்களை உட்கொள்வது அறிவுறுத்தப்படுகிறது.
இவை தாய் மற்றும் குழந்தை இருவரின் ஆரோக்கியத்திற்கும் மிகுந்த நன்மை பயக்கும். அந்த வகையில், கர்ப்ப காலத்தில் ஆரஞ்சு சாப்பிடலாமா என்பது பலரின் கேள்வியாகும். கர்ப்ப காலத்தில் ஆரஞ்சு பழம் சாப்பிடுவது முற்றிலும் பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. இதில் கர்ப்ப காலத்தில் ஆரஞ்சு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் சிலவற்றைக் காண்போம்.
ஆரஞ்சு பழத்தின் ஊட்டச்சத்துக்கள்
ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இவை குழந்தை மற்றும் தாய் இருவரின் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். குறிப்பாக கர்ப்பிணி பெண்களின் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க ஆரஞ்சு பழத்தை எடுத்துக் கொள்ளலாம். இதில் ஆரஞ்சு பழம் தரும் மற்ற நன்மைகளையும், ஆரஞ்சு சாப்பிடுவதற்கான சரியான நேரம் குறித்தும் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Fennel Water During Pregnancy: கர்ப்பிணி பெண்கள் சீரகத் தண்ணீர் குடிக்கலாமா? மருத்துவர் தரும் விளக்கம்
கர்ப்ப காலத்தில் ஆரஞ்சு பழம் சாப்பிடுவதன் நன்மைகள்
கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் ஆரஞ்சு பழத்தை எடுத்துக் கொள்வது நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதுடன், இன்னும் பல்வேறு நன்மைகளைத் தருகிறது.
குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு
கர்ப்ப காலத்தில் பெண்கள் ஆரஞ்சு சாப்பிடுவது குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. ஆரஞ்சு பழத்தில் அதிகளவு வைட்டமின் பி6 மற்றும் ஃபோலிக் அமிலம் நிறைந்துள்ளதால், இவை மூளை வளர்ச்சிக்கு உதவுகின்றன. மேலும் இது நரம்பு குழாய் கோளாறுகளைத் தடுக்க உதவுகிறது. இந்த பழத்தில் உள்ள ஃபோலேட் குழந்தையின் இரத்த சிவப்பணுக்களை உருவாக்க உதவுகிறது.
நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்க
கர்ப்ப காலத்தில் பெண்கள் நோயெத்தொற்றினால் எளிதில் பாதிக்கப்படலாம். ஆரஞ்சு பழத்தில் உள்ள அதிகளவிலான வைட்டமின் சி சத்துக்கள் கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தையின் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இவை நோய்த்தொற்றுக்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. மேலும் இது குழந்தையின் இரத்த நாளங்கள், திசுக்கள், மூளை மற்றும் எலும்பு போன்றவற்றை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த
கர்ப்பிணி பெண்கள் பலரும் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். இந்த சூழ்நிலையில் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் கொண்டு வர ஆரஞ்சு பழத்தை எடுத்துக் கொள்ளலாம். இதில் நிறைந்துள்ள பொட்டாசியம் சத்துக்கள் கர்ப்ப காலத்தில் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Jaggery Benefits: கர்ப்பிணி பெண்கள் குளிர்காலத்தில் வெல்லம் சாப்பிடுவதில் இத்தனை நன்மைகள் இருக்கா.?
மலச்சிக்கல் நீங்க
கர்ப்பிணி பெண்கள் பலரும் மலச்சிக்கல் பிரச்சனையை சந்திப்பர். இதற்கு ஆரஞ்சு பழம் சிறந்த தீர்வாக அமைகிறது. இதில் அதிகளவு நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை மலம் கழிப்பதை எளிதாக்கி, மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபட உதவுகிறது.
நீரிழப்பைத் தடுக்க
கர்ப்ப காலத்தில் உடல் நீரேற்றமாக இருப்பது மிகவும் அவசியமாகும். எனவே தான் கர்ப்பிணி பெண்கள் அதிக தண்ணீர் குடிக்க அறிவுறுத்தப்படுகிறது. கர்ப்ப காலத்தில் ஆரஞ்சு பழத்தை எடுத்துக் கொள்வதை நீரிழப்பைத் தடுக்க உதவுகிறது. இதனால், உடல் நீர் பற்றாக்குறை இல்லாமல் காணப்படும். கர்ப்ப கால நீரிழப்பைத் தடுக்க ஆரஞ்சு பழம் சாப்பிடலாம் அல்லது சாறாக அருந்தலாம்.
எப்போது சாப்பிடலாம்?
கர்ப்பிணி பெண்கள் தினந்தோறும் 80 முதல் 85 மி.கி அளவு வைட்டமின் சி அளவு உட்கொள்ள வேண்டும் எனக் கூறப்படுகிறது. எனினும், ஒவ்வொரு பெண்ணின் கர்ப்ப நிலையும் வேறுபட்டதாகும். இந்த சூழ்நிலையில் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது. மருத்துவரின் பரிந்துரையின் பேரில், காலை உணவாக ஆரஞ்சு சாப்பிடலாம் அல்லது மதியம் சாறாக அருந்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Sapota During Pregnancy: கர்ப்ப காலத்தில் சப்போட்டா சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா?
Image Source: Freepik