இன்றைய காலத்தில் ஆண்கள், பெண்கள் என அனைவரிடமும் அதிகம் காணப்படும் பிரச்சனைகளில் ஒன்றாக முடி உதிர்தல் மற்றும் பொடுகு பிரச்சனை உள்ளது. இதனை சமாளிக்க பலர் விலை உயர்ந்த ஹேர் ஆயில்கள், கெமிக்கல் பொருட்களை பயன்படுத்துகிறார்கள். அவை பல நேரங்களில் எதிர்பார்த்த பலனை தருவதில்லை. ஆனால், இயற்கையாகவே வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய எண்ணெய் உங்கள் கூந்தலுக்கு அற்புத நன்மைகளை அளிக்கும் என்று உங்களுக்கு தெரியுமா.?
ஆம், கொய்யா இலையை கொண்டு வீட்டிலேயே தயாரிக்கப்படும் எண்ணெய், முடி பிரச்னைக்கு தீர்வாக இருக்கும் என்கிறார், ஜெய்ப்பூர் பாபு நகரில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனையின் ஊட்டச்சத்து மற்றும் ஆயுர்வேத நிபுணரான டாக்டர் கிரண் குப்தா. மேலும் இதன் நன்மைகள் மற்றும் செய்முறைகளை விளக்கியுள்ளார். இது குறித்து அறிய பதிவை முழுமையாக படிக்கவும்.
ஏன் கொய்யா இலை எண்ணெய்?
கொய்யா இலைகளில் வைட்டமின் B, C, ஃபிளாவனாய்டுகள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. இவை கூந்தல் வேர்களை வலுப்படுத்தி, உச்சந்தலையை சுத்தமாக வைத்துக்கொண்டு, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று கிரண் குப்தா கூறினார்.
கொய்யா இலை எண்ணெயின் நன்மைகள்
* இந்த எண்ணெய், வேர்களுக்கு ஊட்டம் வழங்கி, முடியை வலுவாக்கும்.
* இது உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, வேகமான வளர்ச்சிக்கு உதவும்.
* இதில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு தன்மை, பொடுகு பிரச்சனையை குறைக்கும்.
* கொய்யா இலை எண்ணெய், உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இது தொற்றுநோய்களைத் தடுக்கும்.
* இந்த எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தினால், கூந்தல் மென்மையாகவும் பளபளப்பாகவும் மாறும்.
தயாரிக்கும் முறை
தேவையான பொருட்கள்
* கொய்யா இலைகள் – 10 முதல் 15
* தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் – 1 கப்
* கறிவேப்பிலை / நெல்லிக்காய் – விருப்பப்பட்டால்
செய்முறை
* கொய்யா இலைகளை நன்றாகக் கழுவி, சிறிய துண்டுகளாக வெட்டவும்.
* ஒரு பாத்திரத்தில் தேங்காய் அல்லது ஆலிவ் எண்ணெயை சூடாக்கி, கொய்யா இலைகளைச் சேர்க்கவும்.
* குறைந்த தீயில் 10 நிமிடங்கள் வைத்து, இலைகள் கருகாமல் பார்த்துக் கொள்ளவும்.
* குளிர்ந்த பிறகு வடிகட்டி காற்று புகாத பாட்டிலில் சேமிக்கவும்.
பயன்படுத்தும் முறை
* வாரத்தில் 2 முறை தலையில் தடவி, 1 மணி நேரம் விட்டு குளிக்கவும்.
* தொடர்ச்சியாக பயன்படுத்தினால், 3 வாரங்களுக்குள் கூந்தல் மாற்றத்தை உணரலாம்.
இறுதியாக..
வீட்டிலேயே எளிதாக தயாரிக்கக்கூடிய கொய்யா இலை எண்ணெய், கூந்தலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, முடி உதிர்தல், பொடுகு போன்ற பிரச்சனைகளுக்கு இயற்கையான தீர்வாக அமையும். ஆயினும், முதன்முதலில் பயன்படுத்தும் முன் பேட்ச் டெஸ்ட் செய்வது சிறந்தது என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.