$
உங்களோட மன ஆரோக்கியத்தை மேம்படுத்த நிபுணர்கள் பரிந்துரைக்கும் 5 முக்கிய விஷயங்கள் குறித்து அறிந்து கொள்ளுங்கள்…
யாருக்கு தாங்க கஷ்டம் இல்ல… எல்லாருக்குமே பணம், குடும்பம், வேலை, படிப்பு, சேமிப்பு, எதிர்காலம் என ஏதாவது ஒன்றைப் பற்றிய பயமும், கவலையும் துரத்திக்கொண்டு தான் இருக்கிறது. வாழ்க்கையே கணினி மயமாகி வருவதால் மக்களுக்கு மன அழுத்தத்திற்கு பஞ்சமில்லை. ஆனால் உடல் ஆரோக்கியத்திற்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை மன ஆரோக்கியத்திற்கும் கொடுக்க வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

வாழ்க்கையில் எந்த வகையான வலியை எதிர்கொண்டாலும் அவர்கள் நேர்மறையாக இருப்பதற்காக நிபுணர்களால் பரிந்துரைக்கப்படும் சில வாழ்க்கை மாற்றங்கள் உள்ளன. அவற்றை பின்பற்றினாலே போதும் உங்கள் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும்.
அப்படி மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் 5 முக்கியமான வழிமுறைகள் குறித்து விரிவாக பார்க்கலாம்…
1.மனம் விட்டு பேசுங்கள்:
தற்போதைய ஆன்லைன் உலகத்தில் யாரும் பிறருக்காக நேரம் ஒதுக்கவோ, மனம் விட்டு பேசவோ விரும்புவதில்லை. மன ஆரோக்கியத்தை மேம்படுத்த பிறருடன் நல்லுறவுடன் இருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், சக ஊழியர்கள் என உங்களுடன் அன்பாக இருப்பவர்களுடன் சேர்ந்து நேரம் ஒதுக்குங்கள். அவர்களுடன் உணவருந்துவது, வெளியே செல்வது, அன்றைய தினம் நடந்த விஷயங்களை விவாதிப்பது போன்றவற்றை செய்யலாம்.

தற்போது யாரும் மற்றவர்களுடன் நல்ல உறவை வைத்துக்கொள்வதில்லை. அப்படி இருப்பது நல்லதல்ல. மற்றவர்களுடன் நல்லுறவு வைத்திருக்க வேண்டும். இவை உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். உங்கள் அனுபவங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உணர்வுபூர்வமாக நெருங்க முயற்சி செய்யுங்கள். நல்ல உறவை உருவாக்குங்கள்.
இதையும் படிங்க: Food for Increase Platelets: பிளேட்லெட் குறைந்துவிட்டதா.. இதையெல்லாம் சாப்பிடுங்கள்!
ஆனால் எக்காரணம் கொண்டு செல்போனில் அழைத்து பேசுவது, வாட்ஸ்அப் செய்வது, சோசியல் மீடியா சாட்டிங் போன்றவற்றை தவிர்த்துவிட்டு, நேரில் சென்று சந்திக்கவும், பேசவும் முயற்சி செய்யுங்கள்.
2.உடற்பயிற்சி:
சுறுசுறுப்பாக இருப்பது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, மனஆரோக்கியத்திற்கும் நல்லது. நாம் ஆரோக்கியமாக இருக்கும்போது நமது மன நிலையும் ஆரோக்கியமாக இருக்கும். ஸ்விம்மிங், சைக்கிளிங், வாக்கிங் ஆகியவற்றை வழக்கமாக செய்யலாம்.

உடற்பயிற்சி செய்வது உடலுக்கு நல்லது தானே என மணிக்கணக்கில் தீவிரமான உடற்பயிற்சிகளை செய்யாதீர்கள்.
3.புது விஷயங்களை கற்றுக்கொள்ளுங்கள்:
புதுப்புது விஷயங்களை கற்றுக்கொள்வது எப்போதுமே மனதிற்கு புத்துணர்ச்சியை தரும். மேலும் உங்களுடைய தன்னம்பிக்கையை அதிகரிக்கவும் உதவும். ஒரு புதிய விஷயத்தை கற்றுக்கொள்ள முயற்சிக்கும் போது, தானாகவே புதிய மனிதர்களின் அறிமுகமும், நட்பும் கிடைக்கும்.

எனவே சமையல், பாட்டு, நடனம், தோட்டக்கலை, அலுவலகத்தில் புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளுதல், இன்டீரியர் டிசைன், வேறு மொழி என ஏதாவது ஒன்றை கற்றுக்கொள்ள முயற்சிக்கலாம். ஆனால் எக்காரணம் கொண்டு பிடிக்காத ஒரு விஷயத்தை வேறு ஒரு ஆதாயத்திற்காக கற்க முயற்சிக்காதீர்கள். குறிப்பாக புதிதாக கற்க விரும்பும் விஷயத்தை உங்கள் தொழில் அல்லது ஆர்வத்துடன் தொடர்புபடுத்திக்கொள்ளுங்கள்.
4.பரிசளிப்பதும் இன்பமே:

யாராவது நமக்கு பரிசு கொடுத்தால் அது எவ்வளவு மகிழ்ச்சியை கொடுக்கிறது. அதேபோல் தான் பிறருக்கு நீங்கள் பரிசளிக்கும் போது அதே அளவு மகிழ்ச்சியை உணர்வீர்கள் என்கின்றனர் நிபுணர்கள். குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் என யாருக்காவது சின்ன, சின்ன பரிசுக்களை கொடுத்து குஷிப்படுத்துவதோடு, போனஸாக மகிழ்ச்சியையும் பெறலாம்.
5.கடந்த காலத்திற்கு குட்பை:
“நடந்து முடிந்த விஷயங்களை எப்போதும் மாற்ற முடியாது… ஆனால் அவற்றை நிச்சயம் கடந்து சொல்ல முடியும்”. எப்போதோ செய்த தவறை எண்ணி இன்று வரை வருந்துவதில் எவ்வித பயனும் இல்லை. அதேபோல் எதிர்காலத்தை நினைத்தும் கவலை அல்லது பயம் கொள்வது தேவையற்றது. எனவே எப்போதும் மனதை நிகழ் காலத்தில் வைத்திருங்கள். அப்போது தான் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.

இருப்பதை வைத்து மகிழ்ச்சியாக இருக்கும் சூட்சமத்தை அறிந்துகொள்வது தான் எப்போதும் மனதிற்கு நிம்மதி தரும் என்பதை மறக்காதீர்கள்.
Image Source: Freepik