Fast Foods Side Effects In Children: பெற்றோரின் நடை, உடை, பாவனை பார்த்து, அப்படியே பிரதிபலிக்க முயற்சி செய்யும் குழந்தைகளைப் பார்த்திருப்போம். வீட்டில் உள்ள பெரியோர்களே குழந்தைகளின் முன்னோடிகள்.
மாறிவரும் இன்றைய பரபரப்பான வாழ்க்கை சூழலில், நேரமின்மையால் பல சமயங்களில் துரித உணவுகளை (Fast Foods) உட்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்லில், இதைப் பார்த்து வளரும் குழந்தைகள் துரித உணவுகள் சாப்பிடுவதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். காலப்போக்கில் இது வழக்கமாகவே மாறிவிடுகிறது.

இந்த துரித உணவுகள், குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு அதிக தீங்குகளை விளைவிக்கும். உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கும் இந்தத் துரித உணவுகளால் ஏற்படும் விளைவுகள் ஏராளம். இதைத் தொடர்ந்து உட்கொள்வது, உடல் பருமன் உட்பட பல உடல் நல பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும்.
உங்கள் குழந்தைக்குத் துரித உணவுகள் சாப்பிடும் பழக்கம் இருந்தால், கட்டாயமாக இந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள விளைவுகளைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்.
சர்க்கரை நோயின் ஆபத்து
துரித உணவுகளால், குழந்தைகள் பெரிதும் பாதிப்படைகின்றனர். பெரும்பாலான குழந்தைகள் வீட்டு உணவுகளைச் சாப்பிடுவதில்லை. வெளியிலிருந்து வாங்கப்படும் இந்த துரித உணவுகளையே அவர்கள் விரும்புகிறார்கள்.
துரித உணவுகளில் அதிக அளவு சர்க்கரை உள்ளது. இதன் காரணமாக, சிறு வயதிலேயே சர்க்கரை நோய் வருவதற்கான ஆபத்தும் கணிசமாக அதிகரிக்கிறது.
பல் சிதைவு
துரித உணவுகளை உண்பது, குழந்தைகளுக்கு பல் சொத்தையை உண்டாக்கும். ஏனெனில் பெரும்பாலான துரித உணவுகள் பற்களில் ஒட்டிக்கொள்ளும் தன்மை உடையவை. இதனால் பற்கள் படிப்படியாகச் சேதமடையத் தொடங்குகின்றன. அதிக அளவு சர்க்கரை உள்ள சாக்லேட், மிட்டாய் மற்றும் பிஸ்கட் போன்ற உணவுப் பொருட்களால் பல் சிதைவு ஏற்படலாம்.
உடல் பருமன்
துரித உணவுகள் சாப்பிடும் பழக்கமுள்ள குழந்தைகள், உடல் பருமனால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஏனெனில், துரித உணவுகளில் உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய அதிக கொழுப்புகள் நிறைந்துள்ளன. இந்தக் கெட்ட கொழுப்புகள், உடல் பருமன் மற்றும் பல நோய்களுக்கு வழிவகுக்கின்றன.
ஊட்டச்சத்துக் குறைபாடு
துரித உணவுகளின் தயாரிப்பில், குழந்தைகளின் உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய பொருட்கள் கலக்கப்படுகின்றன. மேலும், இதைத் தொடர்ந்து சாப்பிடுவதால், உடலில் ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படுகிறது. இதனால் குழந்தைகளின் உடல் பலவீனமாகிறது. பலவீனமான உடல் காரணமாக, குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியும் பலவீனமாகிறது.
தலைவலி பிரச்சனை
துரித உணவுகள் சாப்பிடுவதால் குழந்தைகளுக்குத் தலைவலி பிரச்சனையும் அதிகரிக்கலாம். துரித உணவுகளில் அஜினோமோட்டோ அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இது தலைவலியை அதிகரிப்பதோடு, குழந்தைகளின் மன ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது.
பல நேரங்களில், அதிக துரித உணவுகளைச் சாப்பிடும் குழந்தைகள் எளிதில் எரிச்சலடைந்து, தலைவலி போன்ற பாதிப்புகளுக்கு உள்ளாகிறார்கள்.
ஆரோக்கியமான மாற்று
துரித உணவுகள் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த கீரைகள், உலர் பழங்கள், பருப்பு வகைகள், பசுமையான காய்கறிகள் மற்றும் பழங்களை அவர்களின் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
ஆரோக்கியமான உணவை உட்கொள்வதன் மூலம் குழந்தைகளின் நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்தலாம்.மேலும் நோய் தாக்கத்திலிருந்தும் அவர்களைப் பாதுகாக்கலாம்.