Can peppermint tea help sore throat: பருவகால மாற்றங்கள் மற்றும் வானிலை மாற்றத்தின் காரணமாக, பலரும் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். அதிலும் குறிப்பாக, தொண்டை புண், இருமல் மற்றும் சளி போன்றவை வானிலை மாற்றத்தின் காரணமாக ஏற்படக்கூடிய பொதுவான பிரச்சனைகளாகும். இருமல், சளி, தொண்டைப் புண்களால் பாதிக்கப்படுபவர்கள் அசௌகரியத்தை அனுபவிக்கின்றனர். இதனால், அவர்களின் அன்றாட வாழ்க்கையும் பாதிக்கப்படலாம். இந்நிலையில், இந்தப் பிரச்சனைகளிலிருந்து விடுபட மருத்துவ ஆலோசனை பெறுவதற்கு முன், வீட்டிலேயே சில ஆரோக்கியமான வீட்டு வைத்தியங்களைக் கையாளலாம்.
அதன் படி, தொண்டை எரிச்சலைத் தணிக்க சிறந்த வீட்டு வைத்தியமாக அமைவது சூடான தேநீர் ஆகும். சூடான தேநீர் அருந்துவது ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் நோயைக் குணப்படுத்துவதற்கும் பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்படுகிறது. எனினும், ஸ்ட்ரெப் நோய்த்தொற்றுக்கான இயற்கையான ஆன்டிபயாடிக் பண்புகள் கொண்ட காஃபின் இல்லாத தேநீரை அருந்தலாம். அவ்வாறு, தொண்டைப் புண்களைத் தணிக்க உதவும் காஃபின் இல்லாத சிறந்த தேநீர் வகைகளில் ஒன்றாக நறுமணமுள்ள பெப்பர்மின்ட் டீ உதவுகிறது. இது இயற்கையாகவே சுவையில் இனிமையாகவும், புத்துணர்ச்சியைத் தருவதாகவும் அமைகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Bedtime Drinks: நிம்மதியாக தூங்கனுமா?… நைட் இதுல ஏதாவது ஒண்ண குடிச்சிட்டு படுங்க!
ஏன் புதினா டீ
புதினா இலைகளில் மென்தோன், லிமோனீன் மற்றும் மெந்தோல் போன்ற பல்வேறு அத்தியாவசிய எண்ணெய்கள் நிறைந்துள்ளது. எனவே, இந்த எண்ணெய்கள் நிறைந்த புதினா இலைகளைக் கொண்டு தயார் செய்யப்படும் தேநீர் தசைகளை தளர்த்தவும், வலி நிவாரணியாகவும் செயல்படுகிறது. மேலும், இது தொண்டைப்புண் மற்றும் மூக்கடைப்பு போன்றவற்றுடன் வரக்கூடிய தலைவலி ஒற்றைத் தலைவலியைக் குறைக்கவும் உதவுகிறது. இது தவிர, புதினாவில் உள்ள மெந்தோல் ஆனது உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, குளிர்ச்சியான உணர்வைத் தந்து வலியைக் குறைப்பதாகக் கூறப்படுகிறது.
நாசி நெரிசலைக் குணமாக்கும் புதினா டீ
புதினாவில் வைரஸ் எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்து காணப்படுகிறது. இவை அனைத்துமே ஜலதோஷம், நோய்த்தொற்றுக்கள், ஒவ்வாமை காரணமாக ஏற்படும் சைனஸ் போன்றவற்றைக் குறைக்க உதவுகிறது. இது தவிர, மிளகுக்கீரையின் மிகச்சிறந்த சேர்மங்களில் ஒன்றாக மெந்தோல் உள்ளது. புதினா டீ மெந்தோல், நாசி குழியில் காற்றோட்டத்தை மேம்படுத்துவதாக ஆய்வுகளில் கூறப்படுகிறது. எனவே, சூடான பெப்பர்மின்ட் டீயின் உதவியுடன் சுவாசத்தை எளிதாக்குவதுடன், நாசி நெரிசலிலிருந்து விடுபடலாம்.
தொண்டை வலிக்கு புதினா டீ எவ்வாறு உதவுகிறது?
புதினாவில் மற்றொரு சிறப்பம்சமாக ரோஸ்மரினிக் அமிலம் நிறைந்து காணப்படுகிறது. இது ரோஸ்மேரி மற்றும் புதினா குடும்பத்தில் உள்ள பிற தாவரங்களில் காணப்படும் ஒரு தாவர கலவை ஆகும். இந்த ரோஸ்மரினிக் அமிலம் ஆனது மூக்கு ஒழுகுதல் மற்றும் தொண்டை புண் போன்ற ஒவ்வாமை அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது.
அதே போல, புதினாவில் உள்ள மெந்தோல் ஆனது தொண்டை வலியைக் குறைக்கக் கூடிய இயற்கையான வலி நிவாரணியாக செயல்படுகிறது. மேலும், இதில் நிறைந்துள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் தொண்டை திசுக்களில் ஏற்படும் அழற்சி மற்றும் எரிச்சலைக் குறைப்பதாகக் கூறப்படுகிறது. இது தவிர, இவை மிகவும் தேவையான குளிர்ச்சி உணர்வையும் வழங்குகிறது. மேலும், இதில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளும் நிறைந்துள்ளது. எனவே இது ஸ்ட்ரெப் போன்ற பாக்டீரியா நோய்த்தொற்றுக்களால் ஏற்படும் தொண்டைப் புண் பிரச்சனைகளைக் குறைக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: Peppermint for period cramps: மாதவிடாய் வலியை நொடியில் குணமாக்கும் பெப்பர்மின்ட்! எப்படி யூஸ் பண்ணலாம்
பெப்பர்மின்ட் டீ தயாரிக்கும் முறை
புதினா டீ சுவையானது மட்டுமல்லாமல், உணவில் சேர்க்க எளிதானதாகவும் அமைகிறது. இதை தேநீர் பைகளில் தளர்வான இலை தேநீராக வாங்கி அனுபவிக்கலாம் அல்லது இயற்கையாகவே கிடைக்கும் புதினா இலைகளைக் கொண்டு சொந்தமாக தயார் செய்யலாம்.
செய்முறை
- முதலில் ஒரு கப் அளவிலான தண்ணீரைக் கொதிக்க வைத்துக் கொள்ள வேண்டும்.
- பிறகு அடுப்பை அணைத்து, அந்த சூட்டிலேயே ஒரு கைப்பிடி கிழிந்த புதினா இலைகளை தண்ணீரில் சேர்க்க வேண்டும்.
- பின், இதை குறைந்தது 3-4 நிமிடங்களுக்கு மூடி வைக்க வேண்டும்.
- அதன் பின், தேநீரை வடிகட்டி குடிக்க வேண்டும்.
- இது இயற்கையாகவே இனிப்பைக் கொண்டிருப்பினும், விரும்பினால் ஒரு துளி தேன் சேர்த்து அருந்தலாம்.
புதினா டீ இயற்கையாகவே காஃபின் இல்லாத தேநீராக இருப்பதால், இது எந்த நேரத்திலும் அருந்தக்கூடிய தேநீராக அமைகிறது. எனினும், புதினா டீயை உணவுக்குப் பின் அருந்துவது செரிமானத்தை மேம்படுத்துகிறது. மேலும், ஆற்றல் அளவை அதிகரிக்கிறது. படுக்கைக்கு முன்னதாக இந்த டீ அருந்துவது நல்ல தூக்கத்திற்கு உதவுகிறது. இருப்பினும், வேறு சில உடல்நலப் பிரச்சனைகள் உள்ளவர்கள் புதினா டீயை அருந்தும் முன்னதாக மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: Mint Tea Benefits: பருவமழை காலத்தில் புதினா டீ குடிப்பது இவ்வளவு நல்லதா? நன்மைகள் இங்கே!!
Image Source: Freepik