மோட்டார் சைக்கிள் ஓட்டும்போது ஹெல்மெட் அணிவது சட்ட ரீதியாகவும், உயிர் காக்கும் கவசமாகவும் கருதப்படுகிறது. ஆனாலும், “ஹெல்மெட் போடுறதால தலையில முடி கொட்டுது” என்று பலர் குற்றம் சாட்டுவதை நாம் அடிக்கடி கேட்கிறோம். இதனால் சிலர் ஹெல்மெட் அணிவதைத் தவிர்க்கின்றனர். உண்மையில் ஹெல்மெட் தலைமுடி உதிர்வுக்கு காரணமா? அதை எப்படி தடுக்கலாம்? என்பதற்கு, மருத்துவர் சந்தோஷ் ஜேக்கப் விளக்கமளித்துள்ளார்.
விபத்து புள்ளிவிவரங்கள் – ஹெல்மெட் ஏன் அவசியம்?
2021-ஆம் ஆண்டு இந்தியாவில் மட்டும் மோட்டார் சைக்கிள் விபத்துகளில் சுமார் 70,000 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் தமிழ்நாட்டில் மட்டும் 8,259 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் மோட்டார் சைக்கிள் விபத்துகளில் அதிக உயிரிழப்புகள் நிகழ்ந்த மாநிலம் தமிழ்நாடு என்பது கவலைக்குரியது.
இதற்கு முக்கிய காரணம் ஹெல்மெட் அணியாதது. அதனால், “ஹெல்மெட் அணிந்தால் முடி கொட்டும்” என்ற காரணத்தால் ஹெல்மெட் அணியாமல் இருப்பது உயிருக்கு ஆபத்து என்றே கூறலாம் என்று மருத்துவர் தெரிவித்தார்.
ஹெல்மெட் அணிவதால் முடி கொட்டுமா?
பல ஆண்கள் மற்றும் இளைஞர்கள் “ஹெல்மெட் தான் முடி உதிர்வுக்குக் காரணம்” என்று குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் ஆய்வுகள் மற்றும் மருத்துவர்கள் கூறுவது வேறுபட்டதாக இருக்கிறது.
முடி கொட்டும் பிரச்சினை ஏற்கனவே இல்லாதவர்களுக்கு, ஹெல்மெட் அணிவதால் முடி கொட்டாது. ஆனால் ஏற்கனவே முடி உதிர்வு, பொடுகு போன்ற பிரச்சினைகள் இருந்தால், சுத்தமில்லாத ஹெல்மெட் அணிவதால் முடி கொட்டும் என்கிறார் மருத்துவர். மேலும் “ஹெல்மெட் அணிவது பிரச்சினை அல்ல, ஹெல்மெட்டை பயன்படுத்தும் முறையே முக்கியம்” என்று அவர் வலியுறுத்துகிறார்.
ஹெல்மெட்டை சரியாகப் பயன்படுத்தும் வழிகள்
* ஹெல்மெட்டின் உள்பகுதி சுத்தமாக இருக்க வேண்டும் – அடிக்கடி ஹெல்மெட்டை சுத்தம் செய்து, உள்ளே உள்ள ஸ்பாஞ்சை துவைக்க வேண்டும்.
* சரியான அளவிலான ஹெல்மெட் – தலைக்கு மிகவும் இறுக்கமாகவோ அல்லது தளர்வாகவோ இருக்கக்கூடாது.
* காட்டன் துணி கட்டிக்கொள்ளுங்கள் – ஹெல்மெட் போடும் முன் ஒரு சுத்தமான காட்டன் துணியை தலைக்கு கட்டினால் வியர்வை நேரடியாகத் தலைமுடிக்கு சேராது.
* ஈரமான தலைமுடியில் ஹெல்மெட் போட வேண்டாம் – முடியை நன்கு உலர்த்தி விட்டு ஹெல்மெட் அணிய வேண்டும்.
* தனிப்பட்ட ஹெல்மெட் பயன்படுத்துங்கள் – பிறர் ஹெல்மெட்டை பயன்படுத்தினால் தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
முடி உதிர்வை தடுக்க தேவையான வாழ்க்கை முறைகள்
* தலைமுடியை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள் – வாரத்திற்கு குறைந்தது இரண்டு முறை நல்ல ஷாம்பூ பயன்படுத்தவும்.
* சரியான உணவுப் பழக்கம் – முடிக்குத் தேவையான புரதம், இரும்புச் சத்து, வைட்டமின் பி-காம்ப்ளெக்ஸ், சிங்க், ஓமேகா-3 போன்ற சத்துகள் நிறைந்த உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* சப்ளிமெண்ட்ஸ் – மருத்துவரின் ஆலோசனையின் பேரில் முடிக்கான சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்ளலாம்.
* முடி வேர்களை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள் – பொடுகு மற்றும் எண்ணெய் அதிகமாக தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இந்த நடைமுறைகளை பின்பற்றினால், ஹெல்மெட் அணிந்தாலும் முடி கொட்டாது என்கிறார் மருத்துவர் சந்தோஷ் ஜேக்கப்.
View this post on Instagram
நிபுணர் பரிந்துரை
டாக்டர் சந்தோஷ் ஜேக்கப் கூறுகையில், “முடி உதிர்வுக்கு ஹெல்மெட் காரணம் என்று நினைத்து அதை அணியாமல் இருக்கக்கூடாது. ஹெல்மெட் என்பது உயிரைக் காக்கும் கவசம். தலைமுடி பராமரிப்பைச் சரியாகச் செய்தால் முடி உதிர்வை குறைக்கலாம். ஆனால் உயிரை காப்பாற்ற ஹெல்மெட் மட்டும் தான் உதவும்” என அவர் வலியுறுத்துகிறார்.
இறுதியாக..
ஹெல்மெட் அணிவதால் முடி கொட்டுகிறது என்ற எண்ணம் தவறானது. சுத்தமாக பராமரிக்கப்படும் ஹெல்மெட், சரியான வாழ்க்கை முறை, ஊட்டச்சத்து நிறைந்த உணவு, தலைமுடி பராமரிப்பு ஆகியவற்றைச் செய்தால் முடி உதிர்வைத் தடுக்கும் வாய்ப்பு அதிகம். “போன முடி திரும்ப வரும்.. ஆனால் உயிர்.?” எனவே, ஆரோக்கியத்துடனும், விழிப்புடனும் இருக்க வேண்டும்.