சருமம் ஆரோக்கியமாகவும், இயற்கையான பிரகாசத்துடன் இருக்கவும் அனைவரும் விரும்புகின்றனர். ஆனால், இன்றைய காலத்தில் மாசுபாடு, தவறான உணவு பழக்கம், தூக்கமின்மை, மன அழுத்தம் போன்ற காரணங்களால் சருமம் பாதிக்கப்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. முகப்பரு, உலர்ந்த சருமம், முன்கூட்டிய முதுமை, கருவளையம் போன்ற பிரச்சனைகள் அதிகரித்து வரும் நிலையில், இயற்கை உணவுப் பழக்கங்கள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முக்கிய பங்காற்றுகின்றன.
இந்த நிலையில், பல விதைகள் (Seeds) உங்கள் சருமத்திற்கும், முடிக்கும் தேவையான சத்துக்களை வழங்கும் "இயற்கையான சப்பிளிமெண்ட்" போல செயல்படுகின்றன என்கிறார் தோல் நிபுணர் டாக்டர் ஜோதி. ஆனால், இந்த விதைகளை எப்படிச் சாப்பிடுவது என்பது மிக முக்கியமான விஷயம். சரியான முறையில் எடுத்துக்கொண்டால் மட்டுமே, அதிலுள்ள சத்துக்கள் உடலில் நன்றாகச் செயல்பட்டு சருமத்தில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும்.
சரும ஆரோக்கியத்திற்கு எந்த விதையை எப்படி எடுக்க வேண்டும்?
1. ஆளி விதை (Flax Seeds)
ஆளி விதைகள் ஒமேகா-3 கொழுப்புச் சத்து நிறைந்தவை. இது Anti-inflammatory பண்புகளை உடையதால், முகப்பருவை குறைக்கும். மேலும், முதுமை அறிகுறிகள் – சுருக்கம், கருவளையம் போன்றவற்றை தாமதப்படுத்த உதவுகிறது.
எப்படி சாப்பிட வேண்டும்?
* விதைகளை நேரடியாக சாப்பிடக் கூடாது, ஏனெனில் அது நன்றாக ஜீரணமாகாது.
* சிறந்த வழி, விதைகளை அரைத்து பொடியாக்கி, தினமும் 1–2 டீஸ்பூன் அளவில் சாப்பிடலாம்.
* ஸ்மூத்தி, தயிர், சாலட் அல்லது பரோட்டா மாவில் கலந்து எடுத்துக் கொள்ளலாம்.
2. பூசணி விதை (Pumpkin Seeds)
பூசணி விதைகள் Zinc நிறைந்தவை. Zinc என்பது முடி உதிர்வைத் தடுக்கும் முக்கிய சத்து. குறிப்பாக, பூசணி விதை இயற்கையான DHT Blocker என்பதால், ஹார்மோன் காரணமாக ஏற்படும் முடி உதிர்வைத் தடுக்க உதவுகிறது. மேலும், சருமத்தில் உள்ள எண்ணெய் சுரப்பை சமநிலைப்படுத்தி முகப்பருவை குறைக்கிறது.
எப்படி சாப்பிட வேண்டும்?
* இரவில் ஊறவைத்து சாப்பிடலாம்.
* சிறிதளவு வறுத்து சாப்பிடலாம்.
* நேரடியாக சாப்பிடலாம்.
* தினமும் 1–2 டீஸ்பூன் போதுமானது.
3. சியா விதை (Chia Seeds)
சியா விதைகள் ஒமேகா-3, புரதம், நார்ச்சத்து நிறைந்தவை. இது சருமத்திற்கு ஈரப்பதம் அளித்து, Skin Barrier-ஐ பாதுகாக்கிறது. நீர் தட்டுப்பாடு காரணமாக உலர்ந்து காணப்படும் சருமத்திற்கு இது சிறந்த நிவாரணமாகும்.
எப்படி சாப்பிட வேண்டும்?
* பால் அல்லது தண்ணீரில் குறைந்தது 30 நிமிடம் ஊறவைத்து சாப்பிட வேண்டும்.
* உலர்ந்த நிலையில் சாப்பிடக் கூடாது, அது மூச்சுத்திணறலை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
* ஸ்மூத்தி, புட்டிங் அல்லது ஜூஸில் சேர்த்துக் கொள்ளலாம்.
* தினமும் 1–2 டீஸ்பூன் போதுமானது.
4. சூரியகாந்தி விதை (Sunflower Seeds)
சூரியகாந்தி விதைகள் Vitamin E நிறைந்தவை. இது சருமத்தை UV கதிர்களிலிருந்து பாதுகாக்கும். இது Collagen Production-ஐ தூண்டி சருமத்தை இறுக்கமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் முடி முறிவு மற்றும் முடி பலவீனத்தையும் குறைக்கிறது.
எப்படி சாப்பிட வேண்டும்?
* இரவில் ஊறவைத்து சாப்பிடலாம்.
* சிறிதளவு வறுத்தும் சாப்பிடலாம்.
* அப்படியே சாப்பிடலாம்.
* தினமும் 1 டீஸ்பூன் போதுமானது.
விதைகளை சாப்பிடும் போது கவனிக்க வேண்டியவை
* விதைகளை ஊறவைத்தால் அதிலுள்ள Phytic Acid குறையும். இதனால் சத்துகள் உடலில் நன்றாக உறிஞ்சப்படும்.
* விதைகளை வறுக்கும் போது, அதிகமாக வறுக்கக் கூடாது. மிதமாக வறுப்பது போதுமானது.
* விதைகளை எப்போதும் காற்று புகாத பாத்திரத்தில், ஃபிரிட்ஜில் வைத்துச் சேமிக்க வேண்டும்.
* விதைகளை அதிகமாக சாப்பிடக் கூடாது. ஏனெனில் அவை கலோரி அதிகம் கொண்டவை. தினமும் 1–2 டீஸ்பூன் அளவு போதுமானது.
View this post on Instagram
கூடுதல் நன்மைகள்
* விதைகள் உடலில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் (Antioxidants) அளவைக் கூடுதலாக வழங்கும்.
* ஹார்மோன் சமநிலையின்மையால் ஏற்படும் பிரச்சனைகளை கட்டுப்படுத்தும்.
* உடல் எடையைக் கட்டுப்படுத்தவும், செரிமானத்தையும் மேம்படுத்தவும் உதவும்.
* இதய ஆரோக்கியத்திற்கும், மூளை செயல்பாட்டிற்கும் நல்ல பலன் அளிக்கும்.
இறுதியாக..
தோல் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு, அழகு சாதன பொருட்களையே நம்புவது போதுமானது அல்ல. தினசரி உணவில் சிறிய அளவு விதைகளைச் சேர்ப்பது, சருமத்தை உள்ளிருந்து ஆரோக்கியமாக்கும். Flax Seeds, Pumpkin Seeds, Chia Seeds, Sunflower Seeds – இவை அனைத்தும் சரியான முறையில் எடுத்துக் கொண்டால், சருமம் பிரகாசமாகவும், இளமையாகவும் இருக்கும்.
{Disclaimer: இந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ள தகவல்கள், பொதுவான ஆரோக்கிய வழிகாட்டுதல்களாகும். இது மருத்துவ ஆலோசனையை மாற்றாது. ஒவ்வொருவரின் உடல் தன்மை மாறுபடும்; எனவே, புதிய உணவுப் பழக்கங்களைத் தொடங்குவதற்கு முன் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது அவசியம்.}