Tomato For Face: தோல் பராமரிப்புக்கு பலரும் அதீத செலவுகளை செய்கிறார்கள். சிலருக்கு இதன்மூலம் பலன் கிடைக்கும், பலருக்கு பலன் கிடைப்பதில்லை. வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்தே முகத்தை பொலிவு பெறச் செய்யலாம். இதில் தக்காளி பெரும்பங்கு வகிக்கிறது.
சிலர் ஒரு விஷயத்தை செய்ததும் உடனடியாக பலனை எதிர்பார்க்கிறார்கள். இது முகப் பொலிவு, உடல் எடை குறைவதற்கு மட்டுமல்ல எந்தவொரு விஷயத்துக்கும் சாத்தியமில்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
சரி விஷயத்துக்கு வருவோம், எண்ணெய் பசை சருமம், முகப் பருக்கள், முக நிறம் பொலிவோடு இருக்க ஃபேஸ் பேக்குகளோ, க்ரீம்களோ தேவையில்லை. தோலுக்கு தக்காளி அதீத நன்மைகளை வழங்கும்.
முகத்திற்கு தக்காளியை பயன்படுத்துவது எப்படி?

தக்காளியை குழம்பு உள்ளிட்ட உணவிலும் சட்னியாகவும் சாலட்டில் பச்சையாகவும் சேர்த்து பலரும் சாப்பிடுவது உண்டு. தக்காளி சாப்பிடுவதற்கு மட்டுமல்ல, உங்கள் முகத்தை பொலிவாக்குவதற்கும் அழகு சாதனப் பொருளாக பயன்படுத்தலாம்.
தக்காளி பல சரும பிரச்சனைகளை குணப்படுத்தும். தக்காளியை ஃபேஸ் பேக்கில் பயன்படுத்தலாம் அல்லது அதன் சாற்றை நேரடியாக முகத்தில் தடவலாம். இதை எப்படி பயன்படுத்தலாம், இதனால் கிடைக்கும் பலன் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
முக நன்மைக்கு தக்காளி
தக்காளியில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. சருமத்தை மேம்படுத்துவதற்கு இது மிக முக்கியம். இதனை பயன்படுத்தினால் முகத்தில் உள்ள புள்ளிகள், பருக்கள் போன்ற அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்.
தக்காளி ஹனி பேக்
முதலில் இரண்டு ஸ்பூன் தக்காளி சாறு எடுத்து, அதில் சிறிது தேன் சேர்த்து இந்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் தடவவும். இந்த பேக் காய்ந்த பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும். இப்படி செய்வதன் மூலம் சருமத்திற்கு போதுமான ஈரப்பதம் கிடைக்கும்.
தக்காளி கடலை மாவு ஃபேஸ் பேக்
சிறிது கடலை மாவு எடுத்து அதை தக்காளி சாறில் சேர்க்கவும். இதை மென்மையான பேஸ்ட் ஆக உருவாக்கவும். இந்த பேக்கை முகத்தில் தடவவும். இது காய்ந்ததும் தண்ணீர் தெளித்து ஸ்க்ரப் செய்து சுத்தம் செய்யவும். இப்படி செய்தால் முகம் புத்துணர்ச்சி பெறும். இந்த பேக் நிறத்தை மேம்படுத்த மிகவும் பலனுள்ளதாக இருக்கும்.
முகத்தில் உள்ள துளை பிரச்சனை
ஓபன் போர்ஸ் பிரச்சனை உள்ளவர்கள் முல்தானி மட்டி சேர்த்துக் கொள்ளலாம். முல்தானி மட்டி சிறிது எடுத்து தக்காளி சாறுடன் நன்கு கலக்கவும். இந்த பேக்கை முகத்தில் தடவி, குளிர்ந்த நீரில் கழுவவும். இப்படி செய்தால் முகத்தில் உள்ள துளை பிரச்சனை எளிதில் நீங்கும்.
எண்ணெய் பசை நீங்கும்
பெரும்பாலானவர்களின் முகம் கழுவிய சிறிது நேரத்திலேயே மீண்டும் எண்ணெய் வடியும். தக்காளி முகத்தில் உள்ள எண்ணெயை நீக்க உதவுகிறது. சிறிது எலுமிச்சை சாறு அல்லது வெள்ளரி சாறுடன் சிறிது தக்காளி சாறு கலந்து முகத்தில் தடவவும். 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் சுத்தமாகும்.
இதையும் படிங்க: இனி காசு கொடுத்து வாங்க தேவையில்லை. உங்கள் முகப்பொலிவிற்கான சிறந்த நைட் கிரீமை வீட்டிலேயே செய்யலாம்
தக்காளி முகத்திற்கு இதுபோன்ற பல நன்மைகளை வழங்கினாலும், உங்களுக்கு தோல் தொடர்பான ஏதேனும் பிரச்சனை இருந்தால் முதலில் மருத்துவர் பரிந்துரையை பெற்று பின் இதை முகத்தில் அப்ளை செய்வது நல்லது.
Image Source: FreePik