பண்டிகைக் காலங்களில் பலர் தீபாவளி விருந்து, இனிப்பு வகைகள், பலகாரங்களை அதிகமாக உட்கொண்டு அசிடிட்டி, வயிற்று உப்புசம் மற்றும் பிற உடல்நலப் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
ஆயுர்வேதம் அளவுக்கதிகமாக சாப்பிடுவதைப் பரிந்துரைக்கவில்லை என்றாலும், அது தவிர்க்க முடியாததாக இருந்தால், அதை எப்படி சரி செய்ய வேண்டும் என்பதற்கான மருத்துவ முறைகளை நமக்கு கொடுத்துள்ளது. அதன்படி சில ஆயுர்வேத நிபுணர்கள் பரிந்துரைத்துள்ள வீட்டு வைத்திய முறைகளை இன்று உங்களுடன் பகிர்ந்து கொள்ள உள்ளோம்.
முக்கிய கட்டுரைகள்
தேன், எலுமிச்சை மற்றும் லவங்க பட்டை:
வாழை இலையில் விதவிதமான உணவு வகைகள், பலகாரங்களுடன் தீபாவளி விருந்தை முடித்துவிட்டீர்கள். இப்போது வயிறு சற்றே கடினமாக இருப்பது போல் உணருகிறீர்கள் என்றால்… கவலை வேண்டாம். உடனே எலுமிச்சை சாறு கலந்த தண்ணீரில், லவங்க பட்டை பவுடர் மற்றும் தேன் கலந்து குடித்தால், உணவில் உள்ள கொழுப்பு கரைந்து செரிமானத்தை விரைவாக்கும்.
செரிமானத்தை அதிகரிக்க திரிகடுகு, நெய் கைகொடுக்கும்:
ஒருவேளை தீபாவளி அன்று நீங்கள் தடபுடலான விருந்து ஒன்றிற்கு செல்ல திட்டமிட்டுள்ளீர்கள் என்றால், அதற்கு முன்கூட்டியே வயிற்றை தயார்படுத்துவது நல்லது.
“என்னங்க சாப்பிட போறதுக்கு முன்னாடியே வயிற்றை காலியாக வைச்சிக்க வேண்டுமா? என நினைக்காதீர்கள்”. நாங்கள் சொல்வது உங்களுடைய செரிமான அமைப்பை சீர்படுத்துவது பற்றியது.
உணவிற்கு முன்னதாக நெய்யுடன் திரிகடுகம் (திப்பிலி, சுக்கு, மிளகு) ஆகியவை கலந்த கலவையை உட்கொள்ளுங்கள் இது உங்கள் செரிமானத்தை விரைவுபடுத்த உதவும்.
சர்க்கரை நோயாளிகளுக்கும், குளிர் காலத்தில் இனிப்பை ருசி பார்க்க காத்திருப்பவர்களுக்கும் கூட இது நல்ல பலன் கொடுக்கும் என ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகின்றனர்.
நெய்க்கு ஹாய்; டீப் ப்ரைக்கு பாய்:
நெய்யால் செய்யப்பட்ட இனிப்புகள் வயிற்றை சமன் செய்வதால் அவை சிறப்பானது. ஆனால் இனிப்புகளை நெய்யில் டீப்ரை செய்தால் அது எதிர்வினைகளை ஏற்படுத்தக்கூடும். எனவே உங்கள் தீபாவளி இனிப்பு மற்றும் பலகாரங்கள் நெய்யால் வறுக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
உதாரணமாக, ஆரோக்கியத்தையும், வயிற்றின் செரிமானத்தையும் பாதுகாக்க விரும்புவோர் குலாப் ஜாமூனுக்குப் பதிலாக கடலை மாவு லட்டை சாப்பிடலாம்.
சர்க்கரையை கட்டுப்படுத்த கற்றாழை, மஞ்சள் மற்றும் நெல்லிக்காய்:
ஆயுர்வேத நிபுணர்கள் உயர் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த கற்றாழை, ஹல்டி மற்றும் நெல்லிக்காயின் கலவையை பரிந்துரைக்கின்றனர்.
தீபாவளி விருந்தை முடித்த கையோடு படுக்கைக்குச் செல்லும் முன்பு 2 அங்குலம் சுத்தப்படுத்தப்பட்ட கற்றாழை, வீட்டிலேயே அரைத்த நெல்லிக்காய் சாறு மற்றும் மஞ்சள் கலந்த கலவையை அரைத்து குடிக்கலாம். இது செரிமானத்தை சீர்படுத்துவதோடு, சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்த உதவும்.
இந்த ஆயுர்வேத முறையை பின்பற்ற விரும்புவோர் கடையில் வாங்கிய கற்றாழை சாறு அல்லது நெல்லிக்காய் சாற்றை பயன்படுத்தக்கூடாது.
Image Source: Freepik