Mushroom Health Benefits: சைவ உணவு உண்பவர்களுக்கு காளான் புரதம் நிறைந்த சூப்பர்ஃபுட் ஆகும். காளான்கள் பல ஆண்டுகளாக உணவாகவும் மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. காளானை உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் நலத்திற்கு ஏணைய ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. காளான் சாப்பிட்டால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை முழுமையாக அறிந்துக் கொள்வோம்.
காளான் உணவு வகைகள்
அசைவ உணவு உண்பவர்கள் எப்படி வாரத்திற்கு ஒருமுறை இறைச்சியை தேர்ந்தெடுத்து சாப்பிடுவார்களோ, அதேபோல் சைவ உணவு உண்பவர்களுக்கு காளான். வாரம் ஒருமுறை காளானை பிரியாணி செய்தும், 65 செய்தும், மஞ்சூரியன் செய்தும் வெளுத்து வாங்குவார்கள். சைவ பிரியர்களுக்கு மட்டுமலல அசைவ பிரியர்களுக்கும் காளான் சூப்பர் ஃபுட் தான்.
இதையும் படிங்க: கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க 6 குளிர்கால பானங்கள்
நோய் எதிர்ப்பு சக்தி
காளானில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் வைட்டமின்-பி1, பி2, பி9, பி12, வைட்டமின்-சி, வைட்டமின்-டி2 உள்ளது. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இவை புற்றுநோயைத் தடுக்கவும், உடல் உறுப்புகளில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகின்றன.
காளானில் கொழுப்பு இல்லை, சோடியம் குறைவு, கலோரிகள் குறைவு, கொலஸ்ட்ரால் இல்லை மற்றும் நார்ச்சத்து அதிகம். மழைக்காலத்தில் காளானை உணவில் சேர்த்துக் கொண்டால் நோய், தொற்று நோய்கள் வருவது குறையும்.
காளான்களின் ஆரோக்கிய நன்மைகள்
காளான்களை உணவில் சேர்த்துக் கொண்டால் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. இவற்றில் சோடியம் குறைவாகவும் பொட்டாசியம் அதிகமாகவும் உள்ளது. காளான் சாப்பிட்டால், உடலில் சோடியம் அளவு கட்டுக்குள் இருக்கும். உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் காளான்களை சாப்பிட வேண்டும். காளானில் நார்ச்சத்து அதிகம். நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது. காளானில் உள்ள ஒலிகோசாக்கரைடுகள் குடலில் ப்ரீபயாடிக்குகளாக செயல்படுகின்றன. இவை குடல் பாக்டீரியாவை ஊக்குவிக்கின்றன. காளான் சாப்பிட்டால், குடல் அமைப்பு ஆரோக்கியமாக இருக்கும்.
புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள்
காளானில் உள்ள லினோலிக் அமிலம் புற்றுநோய்க்கு எதிரான கலவையாக செயல்படுகிறது. இது மார்பக புற்றுநோயில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.
மனச்சோர்வு குறையும்
காளான்கள் உடல் ஆரோக்கியத்திற்கு உதவுவதோடு மன ஆரோக்கியத்திற்கும் உதவும். காளானில் எர்கோதியோனைன் என்ற ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது. இது நம் உடலில் ஃப்ரீ ரேடிக்கல்களைத் தடுக்கிறது. காளானில் அதிக பொட்டாசியம் உள்ளது, இது பதட்டத்தை குறைக்கிறது.
அழகு மேம்படும்
காளான்கள் அழகு சாதனப் பொருட்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. காளான்களை நம் உணவில் சேர்த்துக் கொண்டால், அவை சருமச் சுருக்கங்களைத் தடுக்கவும், செல்களுக்குப் புத்துணர்ச்சி அளிக்கவும் உதவும். காளானில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்கள் நிறத்தை அதிகரிக்கும். அதனால்தான் காளான் எண்ணெய்கள் வயதான எதிர்ப்பு கிரீம்கள், லோஷன்கள் மற்றும் சீரம்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றன. உணவில் காளானை சேர்த்துக் கொண்டால் சரும வறட்சி பிரச்சனையை குறைக்கலாம்.
இதையும் படிங்க: காய்கறிகளை சமைக்காமல் சாப்பிடுவதால் கிடைக்கும் 5 ஆரோக்கிய நன்மைகள்!
காளானில் இதுபோன்ற பல நன்மைகள் இருந்தாலும் ஏதேனும் ஒவ்வாமை போன்ற பிரச்சனையோ அல்லது வேறு ஏதேனும் விளைவுகளையோ சந்திக்கும்பட்சத்தில் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.
image source: freepik