அமெரிக்க யூடியூபர் ஒருவர் வெறும் 46 நாட்களில் 11 கிலோ எடையைக் குறைத்துள்ள சம்பவம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. கோடி க்ரோனின் என்ற யூடியூபர் இந்த செயல் வைரலாக முக்கிய காரணம் என்னவென்றால், அவர் தன் உடல் எடையை குறைக்க ஃபேஷன் டயட்கள், தனிப்பட்ட பயிற்சியாளர்கள் என யாருமே இல்லாமல் முறையாக உடல் எடையை குறைத்திருக்கிறார்.
அது எப்படி யாருமே இல்லாமல், எந்த உதவியும் இல்லாமல் உடல் எடை குறைத்தார் என்ற கேள்வி உங்களுக்கு வரலாம். இவர் நவீன காலத்திற்கு ஏற்ப AI உதவியுடன் மட்டுமே தனது உடல் எடையை 11 கிலோ வரை வெறும் 46 நாட்களில் குறைத்திருக்கிறார். AI பரிந்துரைத்த உணவு மற்றும் உடல் எடை குறைப்பு முறையை மட்டுமே இவர் நம்பியிருந்திருக்கிறார்.
ஏஐ உதவியுடன் உடல் எடை குறைத்த யூடியூபர்
குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், ChatGPTமூலம் 46 நாட்களில் 11 கிலோ எடையைக் குறைக்க திட்டத்தை உருவாக்கி இருக்கிறார். இரண்டு குழந்தைக்கு தந்தையான க்ரோன் இந்த நிகழ்வை யூடியூப் மூலம் மற்றவர்களுக்கும் எப்படி என பகிர்ந்துள்ளார்.
மேலும், அந்த யூடியூப் வீடியோவில் தனது உடல் எடை அதிகரிப்பால் மிகவும் சிரமப்பட்டதாகவும், பல இடங்களில் சங்கடத்தை அனுபவித்ததாகவும் கூறியுள்ளார். அதேபோல் தனது இலக்குகள் மற்றும் வாழ்க்கை முறைக்கு ஏற்ப தனிப்பயனாக்கப்பட்ட வழக்கத்தை உருவாக்க ChatGPTஐப் பயன்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.
56 வயதான அவர் ஆரோக்கியமான உணவு, வழக்கமான உடற்பயிற்சிகள், நீரேற்றம் மற்றும் சீரான தூக்க அட்டவணையை உள்ளடக்கிய ஒரு ஒழுக்கமான முறையை ChatGPTவழிகாட்டுதலின் படி பின்பற்றினார். AI-யின் வழிகாட்டுதலுடன், அவர் தனது உடலை மாற்றியமைத்து 46 நாட்களில் 11 கிலோ எடையைக் குறைத்துள்ளார். இதன்மூலம் அவர் உடல் எடை 95 கிலோவில் இருந்து 83 கிலோ வரை குறைந்திருக்கிறது.
க்ரோன் தனது வீட்டில் உடல் எடையை குறைக்க ரெசிஸ்டன்ஸ் பேண்டுகள், கெட்டில்பெல்ஸ் மற்றும் எடை வேஸ்ட் போன்ற உபகரணங்களை வாங்கி வீட்டிலேயே உடற்பயிற்சி கூடத்தை அமைத்துள்ளார் என்பதும் கவனிக்கத்தக்க ஒன்றாகும்.
உடல் எடை குறைக்க AI வழங்கிய உணவுத் திட்டம் என்ன?
சரி, ChatGPT AI அவருக்கு அப்படி என்ன உணவுத் திட்டம் வழங்கியது. என்னென்ன உணவுத் திட்டத்தை பின்பற்றினார், எப்படி உடல் எடையை குறைத்தார் என்பது குறித்து பார்க்கலாம்.
AI வழங்கிய உணவு மற்றும் வழக்கம்
- அவரது உணவில் புல் ஊட்டப்பட்ட இறைச்சிகள், ஸ்டீல்-கட் ஓட்ஸ், மல்லிகை அரிசி, ஆலிவ் எண்ணெய் மற்றும் கீரைகள் போன்ற முழுமையான, ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் இடம் பெற்றுள்ளன.
- பதப்படுத்தப்பட்ட உணவுகள், விதை எண்ணெய்கள், சர்க்கரை மற்றும் பால் பொருட்களை அவர் நீக்கி, அதற்கு பதிலாக உயர்தர, கரிம மற்றும் ஹார்மோன் இல்லாத பொருட்களைத் தேர்ந்தெடுத்தார்.
- க்ரோன், தனது உடல் எடை குறைப்பு முறையில் அன்றாட வழக்கத்தில் கிரியேட்டின், பீட்டா-அலனைன், கொலாஜன், மோர் புரதம் மற்றும் மெக்னீசியம் உள்ளிட்ட கூடுதல் பொருட்களைச் சேர்த்துக் கொண்டுள்ளார்.
- அவரது தினசரி வழக்கத்தில் வாரத்திற்கு ஆறு நாட்கள், தனது கேரேஜ் ஜிம்மில் 60-90 நிமிட உடற்பயிற்சிக்காக அதிகாலை 4:30 மணிக்கு எழுந்திருத்துள்ளார் என்பது கவனிக்கத்தக்க ஒன்றாகும்.
- படுக்கைக்குச் செல்வதற்கு முன் திரை சாதனங்களை தவிர்ப்பது, பிளாக் அவுட் திரைச்சீலைகளைப் பயன்படுத்துவது மற்றும் இயற்கை படுக்கைப் பொருட்களுக்கு மாறுவதன் மூலம் அவர் தூக்க சுகாதாரத்திற்கு முன்னுரிமை அளித்து நிம்மதியான தூக்கத்தை பெற்றுள்ளார்.
- கூடுதலாக, தூங்குவதற்கு முன் ஒரு ஸ்பூன் உள்ளூர் பச்சை தேனை உட்கொண்டார் க்ரோன், காலை சூரிய ஒளியை வெளிப்படுத்துவதையும், தினமும் சுமார் நான்கு லிட்டர் தண்ணீரை குடிப்பதையும், ஒவ்வொரு இரவும் தடையற்ற தூக்கத்தை உறுதி செய்வதிலும் அவர் கவனமாக இருந்துள்ளார்.
- தினசரி எடைப் பரிசோதனைகள் மூலம் அவர் தனது முன்னேற்றத்தைக் கண்காணித்திருக்கிறார், அதற்கேற்ப தனது திட்டத்தில் மாற்றங்களைச் செய்ய ChatGPTவழிகளை முழுமையாக நம்பினார்.
க்ரோன் தனது எடை இழப்பு பயணத்தில் மருந்துகள் போன்ற எதையும் பயன்படுத்தாமல் ஆரோக்கியமான முறையில் மட்டுமே உடல் எடையை குறைத்திருக்கிறார். முழுமையாக ஏஐ மூலம் அதை நம்பி மனதை திடப்படுத்தி அப்படியே பின்பற்றி, சிறிதும் வழி மாறாமல் முறையாக உடல் எடை குறைத்த இவரது தன்னம்பிக்கை மற்றும் மன ஒழுக்கத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.