What are the 21 types of leaves for ganpati: ஆண்டுதோறும் தமிழ் மாதமான ஆவணி மாதத்தில் சதுர்த்தி தினத்தில் விநாயகர் சதுர்த்தி திருவிழா கொண்டாடப்படுகிறது. அதாவது முதன்மைக் கடவுள் என்று போற்றப்படக்கூடிய கணபதி இந்த தினத்தில் தான் பிறந்தார் என்று ஆன்மீகத்தில் குறிப்பிடப்படுகிறது. இந்த தினத்தில் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். மேலும், இந்த பூஜையில் விநாயகருக்குப் பிடித்த பலகாரங்கள், இனிப்பு வகைகள் மற்றும் இன்னும் சில இனிப்பு ரெசிபிகள் படைக்கப்படுகிறது.
இது தவிர, இலைகள், மலர்கள் மற்றும் பூக்கள் போன்றவையும் அளிக்கப்படுகிறது. அவ்வாறு விநாயகருக்குப் படைக்கக்கூடிய இலைகளில் மொத்தம் 21 இலைகள் படைக்கப்படும். இவை ஒவ்வொன்றுமே தனித்த பண்புகளைக் கொண்டதாகும். இது ஆன்மீகம் சார்ந்து மட்டுமல்லாமல், உடல்நலம் சார்ந்தும் நன்மை தரக்கூடியதாகும். இதில் விநாயகருக்கு படைக்கக்கூடிய இலைகளையும், அதன் ஆரோக்கிய நன்மைகளையும் காணலாம்.
விநாயகருக்குப் படைக்கக்கூடிய 21 இலைகள் (21 types of leaves for vinayaka chaturthi)
1.முல்லை இலை
விநாயகருக்குப் படைக்கக்கூடிய இலைகளில் ஒன்றான முல்லை இலையானது படைக்கப்படுவதற்கான காரணமாக அறத்தை வளர்ப்பது அடங்கும். உடல்நலத்தைப் பொறுத்த வரை இது ஏராளமான நன்மைகளைக் கொண்டுள்ளது. முல்லை இலை தலைவலி, கண்பார்வை குறைபாடு மற்றும் மனநோய் போன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வு தருவதாகக் கூறப்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: பல நன்மைகளை அள்ளித்தரும் கீரை வகைகள்! குறிப்பா இந்த கீரைகளை மிஸ் பண்ணீடாதீங்க மக்களே
2.கரிசலாங்கண்ணி இலை
இது இல்வாழ்க்கைக்குத் தேவையான பொருள் சேர்வதற்காக விநாயகருக்கு படைக்கப்படுகிறது. இது மருத்துவத்தில் பல நன்மைகளைக் கொண்டதாகும். இது கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தவும், இரத்தத்தை சுத்தப்படுத்தவும், சிறுநீரக பிரச்சனைகளை சரி செய்யவும் உதவுகிறது. மேலும், முடி உதிர்வதைத் தடுத்து, முடி கருமையாகவும், பளபளப்பாகவும் மாற்ற உதவுகிறது.
3.வில்வம் இலை
இது இன்பம் மற்றும் விரும்பியவை அனைத்தும் கிடைக்க படைக்கப்படும் இலையாகும். வில்வ இலையானது கண்பார்வை ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. மேலும் இது சளி, இருமல், சைனஸ் போன்ற பிரச்சனைகளை தீர்க்கவும், கல்லீரலை பாதுகாக்கவும், இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும், வயிற்று வலியை குணப்படுத்தவும் உதவுகிறது.
4.அருகம்புல்
இது அனைத்து சவுபாக்கியங்களையும் அருள்வதுடன் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது. இது பல நோய்களைக் குணப்படுத்த உதவும் அற்புத புல் ஆகும். இது சிறுநீரக பாதை நோய், சளி, சைனஸ், ஆஸ்துமா போன்றவற்றைக் குணப்படுத்தவும், கண் எரிச்சலை நீக்கவும் உதவுகிறது.
5.இலந்தை இலை
இந்த இலையை விநாயகருக்குப் படைப்பதன் மூலம் கல்வியில் மேன்மை அடையலாம். இலந்தை இலையானது இரத்த சுத்திகரிப்பு, முதுகுவலி, இருதய நோய், ஆஸ்துமா, கழுத்து வலி, கண் பார்வை, இரத்த அழுத்தம், தலைவலி போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது.
6.ஊமத்தை இலை
ஆன்மீகத்தைப் பொறுத்தவரை ஊமத்தை இலையைப் படைப்பது பெருந்தன்மை கைவரப் பெறும் எனக் கூறப்படுகிறது. இதன் மருத்துவ பண்புகளாக வலி நிவாரணி, அழற்சி எதிர்ப்பு மற்றும் தூக்கத்தை தூண்டும் போன்ற குணங்களைக் கொண்டுள்ளது. மேலும் இது தோல் நோய்கள் மற்றும் நரம்பு தொடர்பான பிரச்சனைகளுக்கும் சிகிச்சையளிக்க உதவுகிறது.
7.வன்னி இலை
இந்த இலையைப் படைப்பது பூவுலக வாழ்விலும், சொர்க்க வாழ்விலும் நன்மைகள் கிடைக்கப் பெற உதவுவதாகக் கூறப்படுகிறது. இந்த இலையைக் கொண்டு தயார் செய்யப்படும் கஷாயத்தில் வாயைக் கொப்பளிப்பது பல் வலி குணமாக உதவுகிறது. மேலும் இதை அரைத்து வலி உள்ள இடத்தில் பற்றாகப் போடுவது வலியைக் குறைக்க உதவுவதாகக் கூறப்படுகிறது.
8.நாயுருவி இலை
நாயுருவி இலை தோல் நோய்கள், மூலநோய், மற்றும் தேள் கடி போன்ற பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இந்த இலை மட்டுமல்லாமல், இதன் வேர் மற்றும் விதைகள் என அனைத்துமே மருத்துவ குணங்களைக் கொண்டதாகும். இது முகப் பொலிவும், அழகும் கூடுவதற்கு படைக்கப்படுகிறது.
9.கண்டங்கத்திரி இலை
இந்த இலையை படைப்பதால் வீரமும், தைரியமும் கிடைக்கப் பெறும் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக, கண்டங்கத்திரி இலையின் சாறு சிறுநீர் எரிச்சலைப் போக்கவும், ஆசனவாய் புண்களை ஆற்றவும் பயன்படுகிறது. மேலும் இது வீக்கத்தைக் குறைக்கவும், காய்ச்சல் மற்றும் இருமல் தீர உதவுகிறது.
10.அரளி இலை
விநாயகருக்கு அரளி இலையைப் படைப்பது எந்த முயற்சியிலும் வெற்றி கிடைக்க உதவுவதாகக் கூறப்படுகிறது. பொதுவாக, அரளி இலையில் கடுமையான நச்சுத்தன்மை இருப்பதால் இதை மருத்துவத்திற்காக பயன்படுத்தக் கூடாது. எனினும், அரளிப்பூவை வெளிப்பூச்சி மருந்தாக பயன்படுத்தலாம்.
11.எருக்கம் இலை
கணபதிக்கு எருக்க இலைகளைப் படைப்பது கருவிலுள்ள சிசுவுக்கு பாதுக்காப்புக் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த இலைகளின் மருத்துவ குணங்கள், குதிகால் வலி நீக்குதல், மூட்டு வலி, படை, பொடுகு போன்ற பிரச்சனைக்கு உதவுகிறது. மேலும் ஆஸ்துமாவைக் குணப்படுத்த உதவும் எனவும் கூறப்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Kozhukattai Recipe: விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்.! பூரண கொழுக்கட்டை இப்படி செய்து அசத்துங்க..
12.மருதம் இலை
இந்த இலையை படைப்பது மகப்பேறு கிடைக்கும் எனக்கூறப்படுகிறது. இது பல மருத்துவ பயன்களைக் கொண்டுள்ளது. குறிப்பாக, இது இதய நோய்கள், பித்த வெடிப்பு, குடல் புண்கள் மற்றும் பல் சொத்தை போன்ற பிரச்சனைகளுக்கு உதவுகிறது. இந்த இலையை அரைத்து பாலில் கலந்து குடித்தால் பித்த வெடிப்பு நீங்கும் என்று கூறப்படுகிறது. மேலும், இது உடலில் ஏற்படும் காயங்கள் மற்றும் புண்களை ஆற்ற உதவுகிறது.
13.விஷ்ணுகிராந்தி இலை
விநாயகருக்கு விஷ்ணுகிராந்தி இலையைப் படைப்பது நுண்ணறிவு கைவரப் பெற உதவும். இது பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகையாகும். இந்த இலையானது இது காய்ச்சல், இருமல், உடல் சூடு, மற்றும் இரைப்பு போன்ற பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படுகிறது. மேலும் இது ஆஸ்துமா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.
14.மாதுளை இலை
விநாயகர் சதுர்த்தியில் விநாயகருக்கு மாதுளை இலையைப் படைப்பது பெரும் புகழும் நற்பெயரும் கிடைக்க வழிவகுக்கும். இந்த இலைகளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் பல்வேறு நோய்களை குணப்படுத்த உதவுகிறது. இது மஞ்சள் காமாலை, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளுக்குப் பயன்படுகிறது.
15.தேவதாரு இலை
விநாயகருக்கு தேவதாரு இலையை வைத்து படைப்பது எதையும் தாங்கும் மனோ தைரியம் கிடைக்க உதவும். இது ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக சுவாசக் கோளாறுகள் மற்றும் தோல் நோய்களுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. மேலும், தேவதாரு எண்ணெய் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டதாகும். எனவே இது மூட்டு வலி, வீக்கம் மற்றும் கீல்வாதத்திற்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது.
16.மரிக்கொழுந்து இலை
இந்த இலையைப் படைப்பது இல்லற சுகம் கிடைக்கப் பெற உதவும். இதன் நறுமணப் பண்புகள் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும் இது சரும தொற்றுகளை எதிர்த்துப் போராடவும், பூஞ்சை காளான்களுக்கு எதிராகவும் செயல்படுகிறது.
17.அரச இலை
அரச இலையைப் படைப்பது உயர் பதவியும், பதவியால் கீர்த்தியும் கிடைக்க வழிவகுக்கும். இந்த இலைகள் ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தில் பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், செரிமான பிரச்சனைகளை சரி செய்யவும், தோல் நோய்களை குணப்படுத்தவும், மற்றும் பெண்களின் கருவுறுதல் பிரச்சனைகளை தீர்க்கவும் உதவுகிறது.
18.ஜாதிமல்லி இலை
இந்த இலைகளைப் படைப்பது சொந்த வீடு, மனை, பூமி பாக்கியம் கிடைக்கப் பெறும். இந்த இலைகளில் உள்ள பண்புகள் உடல் வலியை போக்க, சரும பிரச்சனைகளை குணப்படுத்த, சளி மற்றும் இருமலை குணப்படுத்த உதவுகின்றன. மேலும் இந்த இலைகளைக் காயங்களுக்குத் தடவினால் அவை விரைவில் குணமாகும்.
19.தாழம் இலை
தாழம் இலை செல்வச் செழிப்புக் கிடைக்கப் பெற உதவுவதாகக் கூறப்படுகிறது. இதன் சாறு நீர்க்கடுப்பு, நீர்ச்சுருக்கு பிரச்சனைகளுக்கு உதவுகிறது. மேலும் தாழம்பூ உடல் சூட்டைத் தணிக்கிறது. இது தவிர, தலைவலி, மூட்டு வலி பிரச்சனைகளுக்கு இதன் பூக்கள் உதவுகின்றன.
20.அகத்தி இலை
இந்த இலையைப் படைப்பது கடன் தொல்லையில் இருந்து விடுதலை கிடைக்க உதவுவதாகக் கூறப்படுகிறது. அகத்தி கீரை என்றழைக்கப்படும் அகத்தி இலை பல், எலும்பு வளர்ச்சிக்கும், வயிற்றுப்புண்களைக் குணமாக்கவும், சரும பிரச்சனைகளுக்கும் உதவுகிறது.
21.தவனம் ஜகர்ப்பூரஸ இலை
விநாயகருக்கு இந்த இலையைப் படைப்பது நல்ல கணவன்- மனைவி அமையப் பெற உதவுவதாகக் கூறப்படுகிறது. மரிக்கொழுந்து என்றழைக்கப்படும் தவனம் இலை மற்றும் பூக்கள் தவன எண்ணெய் எனப்படும் அத்தியாவசிய எண்ணெயை உற்பத்தி செய்ய உதவுகிறது. தவனம் சில நேரங்களில் சுவைக்காக மூலிகை தேநீர்களில் பயன்படுத்தப்படுகிறது.
இந்த இலைகள் அனைத்துமே விநாயக பெருமானுக்குப் படைக்கக்கூடிய இலைகள் ஆகும். இங்கே கொடுக்கப்பட்டுள்ள இலைகளின் நன்மைகள் பல்வேறு வலைதளங்களின் அடிப்படையில் பெறப்பட்டதாகும். இது குறித்த விரிவான மற்றும் கூடுதல் தகவல்களைப் பெற நிபுணர் அல்லது மருத்துவ ஆலோசனை பெறலாம்.
இந்த பதிவும் உதவலாம்: ஒன்றல்ல! இரண்டல்ல! பல மடங்கு நன்மைகளை அள்ளித் தரும் கணேச முத்ரா! இதை எப்படி செய்யணும்னு பாருங்க
Image Source: Freepik