Women Health: மழைக்காலத்தில் பலவகையான நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக மழைக் காலத்தில் பெண்கள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இந்த பதிவில் முழுமையாக படித்து அறிந்துக் கொள்வோம். சிறிய உடல்நலப் பிரச்சினைகள் பெரிய அபாயங்களைக் கொண்டு வரலாம்.
எளிதாக பரவும் நோய் தொற்றுகள்
வாட்டி வதைத்த வெயிலில் இருந்து மழைக்காலம் விடிவைத் தரும் என்றாலும், நோய் பரவலும் அதிகரிக்கத் தொடங்கும். சிலர் விரும்பி மழையில் நனைவார்கள், பலர் எதார்த்தமாக மழையில் நனைவார்கள். மழையால் நனைந்தால் சளி, காய்ச்சல் போன்ற நோய்கள் தொற்றுவது உறுதி. மழைக்காலத்தில் பருவாகல நோய்கள் வருவது இயல்பு. ஆனால் நாம் இதில் இருந்து கவனமாக இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம். குறிப்பாக பெண்கள். பெண்கள் நோய்த் தொற்று அபாயத்தில் இருந்து மிக கவனமாக இருக்க வேண்டும். மழைக்காலத்தில் பெண்கள் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கான சில வழிமுறைகளை இப்போது பார்க்கலாம்.
இதையும் படிங்க: மலச்சிக்கல் இத்தனை பாதிப்பை ஏற்படுத்துமா?
மழைக்கால உடல்நலக் கோளாறு
வைரஸ் காய்ச்சல், காய்ச்சல், மலேரியா, டெங்கு, மெட்ராஸ் ஐ (கான்ஜுன்க்டிவிடிஸ்) தோல் தொற்று, சிறுநீர் பாதை தொற்று பாதிப்பு, வைட்டமின் டி குறைபாடு, ஆஸ்துமா, ஃபுட் அலர்ஜி, நீர் மூலம் பரவும் நோய்கள், வயிற்றுப்போக்கு என பலவகை நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?
காய்கறி சூப்கள், முளைக் கட்டிய பயிர்கள், சோளம், தேனுடன் கூடிய மூலிகை தேநீர், மசாலா சாய், எலுமிச்சை, புதினா இலைகள், உலர் பழங்கள் மற்றும் பருப்புகள், புரோபயாடிக்குகள். தயிர், மோர், பழங்கள், வேகவைத்த காய்கறிகள், கீரைகள், பூண்டு, மஞ்சள், சுரைக்காய் போன்றவைகளை சாப்பிடலாம்.
என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்?
மலேரியா டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்கள் கொசுக்களால் பரவுகின்றன. எனவே நீங்கள் வசிக்கும் பகுதியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கொசுக்கள் வளராமல் பார்த்துக் கொள்வது அவசியம். முழு கை ஆடைகளை அணியுங்கள். கொசு விரட்டி மற்றும் கொசு வலைகளை பயன்படுத்துவது நல்லது.
பாதுகாப்பான குடிநீர் அவசியம்
ஹெபடைடிஸ் ஏ, ஹெபடைடிஸ் இ, காலரா, டைபாய்டு, இரைப்பை குடல் அழற்சி போன்ற நீர் மூலம் பரவும் நோய்களைத் தடுக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சுத்தமான, பாதுகாப்பான குடிநீரை மட்டும் குடிக்க வேண்டும். முடிந்தளவு தண்ணீரை சுட வைத்து குடிப்பது நல்லது. புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவது நல்லது. சுகாதார முறைகளை கடைபிடியுங்கள், அடிக்கடி கைகளை கழுவுங்கள்.
காய்ச்சல் தடுப்பூசிகள்
காய்ச்சலைத் தடுக்க வருடத்திற்கு ஒரு முறை காய்ச்சல் தடுப்பு தடுப்பூசிகள் போடுவதும் நல்லது. ஆரோக்கியமான சமச்சீரான ஊட்டச்சத்து உணவை உட்கொள்ளுங்கள். சுத்தமான வேகவைத்த மற்றும் காய்ச்சி வடிகட்டிய தண்ணீரைக் குடிக்கவும், தெரு உணவுகளை தவிர்க்கவும். 7-8 மணி நேரம் போதுமான தூக்கத்தைப் பெறவும் மற்றும் உடற்பயிற்சி முறையைப் பின்பற்றவும். மழையில் நனைவதை முடிந்தவரை தவிர்க்கவும். பழங்கள் மற்றும் காய்கறிகளை நன்கு கழுவி சாப்பிடவும். தினமும் 2-3 லிட்டர் தண்ணீர் குடிக்கவும். தினசரி உணவில் வைட்டமின் சி நிறைந்த உணவுகளை சேர்க்கவும்.
பாதுகாப்பாக இருப்பது முக்கியம்
ஈரமான காலணிகளை அணிய வேண்டாம், அவற்றை மீண்டும் அணிவதற்கு முன்பு அவற்றை சுத்தம் செய்து உலர வைக்கவும். மெட்ராஸ் ஐ நோயால் யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களிடம் இருந்து விலகியிருங்கள். தூசி, நீராவி அல்லது மாசுபாட்டினால் உங்களுக்கு ஒவ்வாமை இருந்தால், நீங்கள் வெளியே செல்லும் போது மாஸ்க் அணிந்து செல்லுங்கள். உங்கள் நகங்களை சுத்தமாக வைத்திருங்கள். உங்கள் வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைக்க முயற்சி செய்யுங்கள்.
UTI பாதிப்பு
இறுக்கமான ஆடைகளை தவிர்க்கவும். உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்றுவதில் நீரேற்றம் முக்கியமானது, நிறைய தண்ணீர் குடியுங்கள். இதன்மூலம் UTI பாதிப்பில் இருந்து விடுபடலாம்.
இதையும் படிங்க: Common Monsoon Diseases: பருவமழையில் பரவும் நோய்த் தொற்றுகள்- முன்னெச்சரிக்கை அவசியம்
நோய் பாதிப்பில் இருந்து விடுபட இந்த எளிய வழிமுறைகளை பின்பற்றலாம் இருப்பினும் ஏதேனும் தீவிரத்தை உணரும் போது உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.
image source: freepik