$
உங்கள் சொந்த நண்பர்களிலேயே சிலர் தங்கள் உடலில் உள்ள சிறிய விஷயங்களுக்கு கூட டென்ஷனாவதைக் காணலாம். முகத்தில் பருக்கள் வந்தாலோ அல்லது சில சிறிய புள்ளிகள் ஏற்பட்டாலோ அல்லது உடல் எடைக்கூடிவிட்டாலோ தங்களைப் பற்றி கவலைப்பட்டு பொது வெளியில் செல்லத் தயங்குபவர்களும் உண்டு. இது போன்ற பிரச்சனைகளை கொண்டவர்களுக்கு பொதுவாக பாடி டிஸ்மார்பிக் கோளாறு இருப்பதாக கூறப்படுகிறது.
அறிகுறிகள் என்ன?
உங்களுக்கு பாடி டிஸ்மார்பிக் கோளாறு இருந்தால், நீங்கள் எப்படி இருக்கிறீர்கள், அதே போல் உங்கள் உடல் உருவத்தைப் பற்றியும் தொடர்ந்து சிந்திக்கிறீர்கள். அதேபோல, தாங்கள் அழகாக இருப்பதை உறுதி செய்வதற்காக அவ்வப்போது கண்ணாடியைப் பார்த்துக் கொண்டே இருப்பார்கள். அவர்களின் கவனம் உடல் மீது மட்டுமே இருப்பதால், அன்றாடம் பல விஷயங்களில் கவனம் செலுத்த முடியாமல் போகும்.

சில சமயம் கண்ணுக்குத் தெரியாத சில பிரச்சனைகளை நினைத்துக் கவலைப்பட்டுப் பேசிக் கொண்டிருப்பார்கள். மேலும், இந்தக் காரணங்களைச் சுட்டிக்காட்டி, தாங்கள் அழகாக இல்லை என்றும், தங்களுக்குப் பல பிரச்சனைகள் இருப்பதாகவும் தாங்களே நம்புவார்கள்.
எப்போதும் அழகாக இல்லை என எதிர்மறையாக நினைத்துக்கொள்வார்கள். அதனால், மக்களை எதிர்கொள்ளக்கூட தயங்குவார்கள். பொது இடங்களுக்குச் செல்வதையே தவிர்ப்பார்கள்.
அவர்கள் எப்போதும் தங்கள் குறைகளை மறைக்க மேக்-அப்புடன் வெளியே செல்வார்கள், அவற்றை மறைப்பதில் எப்போதும் அதிக அக்கறை காட்டுவார்கள்.

அதுபோலவே தன் அழகை மற்றவர்களின் அழகோடும் உடலோடும் ஒப்பிட்டுப் பார்க்கத் தொடங்குவார்கள். இதன் மூலம் அவர்கள் தங்களைப் பற்றி எதிர்மறையான கருத்தை உருவாக்குகிறார்கள். தாங்கள் கெட்டவர்கள், மற்றவர்கள் நல்லவர்கள் என்று தங்களைத் தாங்களே எண்ணிக்கொள்வார்கள்.
வெளியில் செல்லும்போது தாங்கள் அழகாக இருப்பதையும், எல்லாவற்றிலும் கச்சிதமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் கொண்டிருப்பார்கள். இதற்காக விலையுயர்ந்த உடைகள், அழகு சாதனங்கள் போன்றவற்றை வாங்கி குவிக்கவும் தயங்கமாட்டார்கள்.
மூக்கின் அளவு, சரும நிறம், சுருக்கங்கள், பருக்கள் என முகத்தின் வடிவத்தில் ஏதேனும் வித்தியாசம் ஏற்படுவது போல் தெரிந்தால் அவர்களால் இதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இதேபோல் முடி நரைத்தல், முடி உதிர்தல், தோல் மற்றும் நரம்புகளில் ஏற்படும் மாற்றங்கள், மார்பக அளவு, எடை இழப்பு அல்லது அதிகரிப்பு ஆகியவற்றை எண்ணியும் கவலை கொள்வார்கள்.
மருத்துவரை எப்போது பார்க்க வேண்டும்?
இந்த மனநலக்கோளாறு தீவிரமடையும் முன்பே மருத்துவரை அணுகுவது நல்லது. ஏனென்றால் இது அவர்களுடைய தன்னம்பிக்கையை பாதிக்கும், தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொள்ள தூண்டும். இது மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வுக்கு வழிவகுக்கும்.

அதிக துக்கம் மற்றும் பதற்றத்தை உணர்வார்கள். மேலும் பதற்றம் காரணமாக சரியாக சாப்பிடாமல் இருப்பது கூட பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. இது ஆரோக்கிய பிரச்சனைகளையும் அதிகரிக்கலாம். இதுபோன்ற பிரச்சனைகள் அதிகமாக இருந்தால், மருத்துவரை அணுகுவது நல்லது.
Image Source: Freepik