ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமநிலையான உணவு மிக முக்கியம். குறிப்பாக வைட்டமின் மற்றும் தாதுக்கள் குறைவின்றி உடலுக்குத் தேவையான அளவு கிடைக்காவிட்டால், பல்வேறு உடல்நலக் குறைபாடுகள் தோன்றுகின்றன. அதில் ஒன்றாக கருதப்படுவது வைட்டமின் B7 குறைபாடு.
வைட்டமின் B7, அல்லது பயோட்டின், நம் உடலில் கொழுப்பு, புரதம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளின் சீரான வளர்சிதை மாற்றத்திற்கு தேவையான நீரில் கரையக்கூடிய ஒரு முக்கிய வைட்டமின். இது B-காம்ப்ளக்ஸ் குழுவில் அடங்குகிறது. பெரும்பாலானோருக்கு இந்த குறைபாடு ஏற்படாமல் இருந்தாலும், ஏற்பட்டால் அது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தும். ஹெல்த் நியூட்ரிஷன் நிபுணர் சாக்ஷி சிங், உடலில் வைட்டமின் B7 குறைவால் ஏற்படும் முக்கிய விளைவுகளை விரிவாக விளக்குகிறார்.
B7 குறைவால் ஏற்படும் முக்கிய விளைவுகள்
முடி உதிர்தல்
வைட்டமின் B7 குறைவின் முதல் அறிகுறி முடி உதிர்தல் ஆகும். பயோட்டின் இல்லாமல், முடியின் வேர்கள் பலவீனமடைகின்றன, இதனால் முடி மெலிதல், உதிர்தல் அல்லது சில நேரங்களில் வழுக்கை கூட ஏற்படலாம்.
தோல் பிரச்சனைகள்
இந்த குறைபாடு முகத்தில் மற்றும் உடலில் சிவப்பு தடிப்புகள், வறட்சி, அரிப்பு, உரிதல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். கண்கள், மூக்கு, வாய் சுற்றிய பகுதிகள் அதிகமாக பாதிக்கப்படுகின்றன.
சோர்வு மற்றும் தசை பலவீனம்
பயோட்டின் குறைவால் ஒருவர் எளிதில் சோர்வடைகிறார். சிறிய வேலைகளுக்குப் பிறகே தசைகள் பலவீனமடைகின்றன, உடலில் வலி மற்றும் ஆற்றல் குறைவு தென்படும்.
மனநல பாதிப்புகள்
வைட்டமின் B7 குறைபாடு உடலுக்கு மட்டுமல்ல, மன ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. மனநிலை ஊசலாட்டம், எரிச்சல், மனச்சோர்வு, அதிக கோபம், கவலை போன்ற அறிகுறிகள் தோன்றும். நீண்டகால குறைபாடு மனநலக் கோளாறுகளுக்கே வழிவகுக்கலாம்.
நகங்கள் பலவீனமடைதல்
பயோட்டின் குறைவால் நகங்கள் உடையக்கூடியது, நகங்களின் தடிமன் குறையக்கூடும். சில சமயம் நகங்களைச் சுற்றிய தோலில் வீக்கம் அல்லது வலி ஏற்படலாம்.
பயோட்டின் குறைபாட்டை எவ்வாறு தடுக்கலாம்?
நிபுணர்கள் கூறுவதாவது, நம்முடைய உணவில் பின்வரும் உணவுகளைச் சேர்த்தால், பயோட்டின் தேவையை பூர்த்தி செய்ய முடியும்:
* முட்டை (சமைத்தது மட்டுமே; பச்சை முட்டையைத் தவிர்க்கவும்)
* பருப்பு வகைகள்
* நட்ஸ் மற்றும் விதைகள்
* வாழைப்பழம்
* முழு தானியங்கள்
தேவையெனில், மருத்துவரின் ஆலோசனையின் பேரில் பயோட்டின் சப்ளிமெண்ட் எடுத்துக் கொள்ளலாம்.
இறுதியாக..
வைட்டமின் B7 குறைபாடு அரிதானது என்றாலும், அது ஏற்பட்டால் தீவிர விளைவுகளை ஏற்படுத்தும். குறிப்பாக முடி, தோல், நகம், மனநிலை ஆகியவை பாதிக்கப்படும். எனவே, இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல் உடனே உணவு பழக்கவழக்கத்தில் மாற்றங்கள் செய்து, தேவைப்பட்டால் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம்.