Pregnancy Diet: கர்ப்ப காலத்தில் தாய் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு மிக முக்கியம் ஆகும். இந்த பாதுகாப்பு குறிப்பில் முக்கிய பங்கு வகிப்பது உணவு முறை மாற்றம் ஆகும். இதுவே, குழந்தை மற்றும் தாய்க்குத் தேவையான ஊட்டச்சத்துகள், வைட்டமின் மற்றும் தாதுக்களை அளிக்கக் கூடியதாக அமைகிறது. எனவே, கர்ப்ப காலத்தில் பெண்களுக்கென சில உணவுகள் கட்டாயமாக்கப்பட்டும், சில உணவுகள் தவிர்க்கக் கூடியதாகவும் அமைகின்றன. விஜயவாடாவில் உள்ள மணிப்பால் மருத்துவமனையின் உணவியல் நிபுணர் சுவாதி அவர்கள், கர்ப்ப கால உணவுத் தேவைகள் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
ஊட்டச்சத்து நிறைந்த உணவு
கர்ப்பிணி பெண்கள் தங்களின் உடல் ஆரோக்கியத்திற்கும், வயிற்றில் உள்ள குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை எடுத்துக் கொள்வதில் முன்னுரிமை அளிக்க வேண்டும். சாதாரண நிலையை விட இந்த நேரத்தில் அதிக அளவிலான ஊட்டச்சத்துகள் தேவைப்படுகிறது.
குடும்பம் மற்றும் சமூக மருத்துவ இதழின் படி, கர்ப்ப காலத்தில் போதிய ஊட்டச்சத்து, குழந்தை மற்றும் தாய் இருவரையும் பாதிப்பதாக அமையும். எனவே, ஒரு கர்ப்பிணி பெண் தனக்கும், தனது கருவின் தேவைக்கும் ஏற்றவாறு ஊட்டச்சத்துகளை வழங்க வேண்டும். ஊட்டச்சத்துக்களை வழங்குவதில் குறைபாடு இருப்பின், கரு தனது தேவைகளை தாயின் திசுக்களில் இருந்து ஊட்டச்சத்துகளைக் குறைப்பதன் மூலம் பெறுகிறது. இது தாயை பலவீனப்படுத்துவதுடன், ஆபத்தை அதிகரிக்கிறது. இந்த நேரத்தில் குறைந்த பிறந்த எடை கொண்ட குழந்தையைப் பெற்றெடுப்பதற்கான சூழ்நிலையைத் தருகிறது. எனவே, ஆரம்ப காலத்தில் போதுமான ஊட்டச்சத்து அளிப்பதில் கவனமுடன் இருக்க வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Pregnancy Foods: கர்ப்ப காலத்தில் மீன் சாப்பிடலாமா?
கர்ப்ப காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள்
கர்ப்ப கால உணவாக, சில உணவுப் பொருள்களை கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். இது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
முட்டைகள்
முட்டைகள் பெரும்பாலும் சூப்பர்ஃபுட் என்றே அழைக்கப்படுகின்றன. இதற்கு முட்டையில் உள்ள புரதங்கள், தாதுக்கள் மற்றும் வைட்டமின்களே காரணம் ஆகும். முட்டையில் உள்ள இந்த சத்துகள், கருவின் உயிரணுக்களை உருவாக்கி சரி செய்து, குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும், இதில் கணிசமான அளவில் உள்ள கோலின், குழந்தையின் நரம்பு மண்டலம் மற்றும் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது.
பால்பொருள்கள்
அதிக புரதம் மற்றும் கால்சியம் மிக்க உணவாக பால் பொருள்கள் உள்ளன. இவை வயிற்றில் உள்ள குழந்தையின் திசு மற்றும் உறுப்பு வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இதில் உள்ள கால்சியம் சத்துகள் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகின்றன. எனவே, கர்ப்ப காலத்தில் நெய், பன்னீர், தயிர், மற்றும் பால் போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
பருப்பு வகைகள்
பொதுவாக பருப்பு வகைகளில் நார்ச்சத்து, புரதம், கால்சியம், இரும்பு, அத்தியாவசிய கொழுப்புச் சத்துகள் நிறைந்துள்ளது. இவை கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்துகளை அளிக்கின்றன.
வாழைப்பழங்கள்
இதில் உள்ள பொட்டாசியம், கால்சியம், ஃபோலிக் அமிலம் போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும், இவை பார்வை மேம்பாட்டிற்கும் உதவி புரிகின்றன.
இந்த பதிவும் உதவலாம்: Avoid Pregnancy Fruits: கர்ப்ப காலத்தில் பெண்கள் சாப்பிடவே கூடாத பழங்கள் என்னென்ன தெரியுமா?
கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்
கர்ப்ப காலத்தில் சில உணவுப் பொருள்களை அறவே தடுப்பதன் மூலம் ஆரோக்கியமாக இருக்கலாம்.
- அன்னாச்சி, பச்சை பப்பாளி, எள், சோயா பால் போன்றவற்றை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை கரு சுருக்கத்திற்கு வழிவகுக்கும்.
- அதிக பாதரசம் கொண்ட மீன்களைத் தவிர்க்க வேண்டும்.
- பொரித்த அல்லது பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் நொறுக்குத் தீனிகள், கார்பனேற்றம் செய்யப்பட்ட பானங்கள் போன்றவற்றைத் தவிர்க்கவும்.
- புகைபிடித்த அல்லது சுட்ட அசைவ உணவுகள் மற்றும் பாதி வேக வைத்த அசைவ உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
கர்ப்ப காலத்தில் செய்ய வேண்டியவை
பெண்கள் கர்ப்ப காலத்தில் சரியான பழக்க வழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் தாய் மற்றும் சேய் இருவரும் ஆரோக்கியமான நலன்களைப் பெறலாம்.
- கர்ப்பிணி பெண்கள் உணவு உண்ட பிறகு 15-20 நிமிட அளவிலான நடைபயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
- உணவில் ஏராளமான ஊட்டச்சத்துகள் நிறைந்த காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- எண்ணெய் விதைகள் மற்றும் கொட்டைகளை மிதமான அளவில் சேர்த்துக் கொள்ளலாம்.
- டீ மற்றும் காபியை அளவாக எடுத்துக் கொள்வது நல்லது.
- குறிப்பிட்ட நேரத்தில், சிறிய அளவு உணவை உட்கொள்ள வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Pregnancy Test Kit: கர்ப்ப பரிசோதனை கருவியை பயன்படுத்துவது எப்படி?
Image Source: Freepik