மூட்டுத் தேய்மானம் :
முழங்கால் மூட்டுவலிக்கு அடிப்படைக் காரணம் அங்கு ஏற்படுகிற தேய்மானம்தான். வயதாக ஆக, குருத்தெலும்பு தேய்ந்து அழற்சி உண்டாகிறது. இதை ‘முதுமை மூட்டழற்சி’ (Osteoarthritis ) என்கிறார்கள். முழங்கால் மூட்டில் உள்ள குருத்தெலும்பு வழுவழுப்பாக இருக்கும். இதற்குக் காரணம், ‘கொலாஜன்’ எனும் புரதப்பொருள் அதில் இருப்பதுதான். இதுதான் இந்த வழுவழுப்புத் தன்மையைப் பாதுகாக்கிறது.
குருத்தெலும்பை வலுவாக வைத்துக்கொள்கிறது. முதுமை நெருங்கும்போது, இயற்கையாகவே கொலாஜன் உற்பத்தி குறைந்துவிடும்; குருத்தெலும்புத் திசுக்கள் தேய்ந்து மெலிதாகிவிடும். இதன் விளைவால், மசகு போட மறந்த சைக்கிள் சக்கரம் கிரீச்சிடுவது போல, நமக்கு வயதாகும்போது முழங்கால் மூட்டுகள் உரசிக்கொள்ள, மூட்டுவலி ஏற்படுகிறது.
எலும்பில் ஏற்படும் முடிச்சுகள்:
நாட்கள் ஆக ஆக அழற்சி ஏற்பட்டுள்ள குருத்தெலும்புத் திசுக்களில் சிறிதாக எலும்பு முடிச்சுகள் (Osteophytes) முளைக்கின்றன. இதனால் குருத்தெலும்பு கடினமாகிவிடுகிறது. இதன் விளைவால், மூட்டின் முனைகளில் காணப்படுகின்ற வழுவழுப்புத் தன்மை முழுவதுமாக மறைந்து சொரசொரப்பாகி விடுகின்றன. முழங்காலை அசைத்தால், இந்தக் கடினப்பகுதிகள் உரசுவதால் மூட்டுவலி கடுமையாகிறது.
மூட்டு வீக்கம்:
மூட்டுவலி வந்துள்ள முழங்காலுக்கு அதிக வேலை கொடுத்தால், குருத்தெலும்பில் திடீரென்று அழற்சி அதிகமாகிறது; சைனோவியல் படலம் அதிக திரவத்தைச் சுரக்கத் தொடங்குகிறது. இதனால், மூட்டில் நீர் கோத்து, வீங்கிக்கொள்கிறது.
மூட்டுத் தேய்மானத்தை எப்படி அறிவது?
சிறிது நேரம் உட்கார்ந்துவிட்டு எழுந்து நில்லுங்கள். மூட்டு பிடிப்பதுபோல் இருக்கிறதா?
கொஞ்ச தூரம் நடந்து செல்லுங்கள். அந்தப் பிடிப்பு விட்டதுபோல் இருக்கிறதா? அப்படியானால் உங்களுக்கு மூட்டுத் தேய்மானம் ஆரம்பமாகிவிட்டது என்று அர்த்தம்.
பரிசோதனைகள்?
மூட்டுகளில் வலி, வீக்கம் ஏற்பட்டால், உடனே குடும்ப மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற வேண்டும். எக்ஸ்ரே, சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மற்றும் ரத்தப் பரிசோதனைகள் மூலம் எந்த வகையான மூட்டுவலி என்பதைத் தெரிந்துகொண்டு அதற்கேற்ப சிகிச்சையைப் பெற வேண்டும். குடும்ப மருத்துவர் பரிந்துரை செய்தால், எலும்புநோய் சிறப்பு மருத்துவரிடம் சிகிச்சையைத் தொடர வேண்டும்.
சிகிச்சை:
ஆரம்பநிலையில் உள்ள இவ்வகை மூட்டுவலிக்கு வலி நிவாரணி மாத்திரைகள் மற்றும் பிசியோதெரபி சிகிச்சை மூலம் நிவாரணம் பெற முடியும். இவற்றுடன் தொடை தசைகளுக்குப் பயிற்சி கொடுத்தால் மூட்டுவலி குறையும். பொதுவாக, மூட்டுவலிக்கு அதிக நாட்கள் தொடர்ந்து வலி மாத்திரைகளையும் ஸ்டீராய்டு மாத்திரைகளையும் சாப்பிடக்கூடாது. இதனால், சிறுநீரகங்கள் பாதிப்படையும். எலும்புகள் பலவீனம் அடையும். இரைப்பையில் புண் வந்துவிடும். சர்க்கரை நோய் ஏற்படவும் அதிக வாய்ப்பு உண்டு.
மூட்டு வலியை தடுப்பது எப்படி?
மூட்டுத் தேய்மானத்தை முற்றிலும் தடுக்க முடியாது. ஆனால், வேகமாகத் தேய்மானம் ஆவதை தடுக்கலாம்; தள்ளிப்போடலாம். இளம் வயதிலிருந்தே புரதச் சத்து நிறைந்த பால், பால் பொருட்கள், பருப்பு, பயறு வகைகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். அடர் பச்சைநிறக் காய்கறிகள், கீரைகளைச் சாப்பிட வேண்டும். தினமும் சிறிது நேரம் உடலில் சூரிய ஒளி படும்படி நிற்க வேண்டும். சூரிய ஒளி படுவதன் மூலம் தோலின் அடிப்பாகத்தில் வைட்டமின் டி தயாராகிறது.
இது எலும்புக்கு பலம் தரக்கூடியது. சிறு வயதிலிருந்தே நடைப் பயிற்சி, நீச்சல் பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் போன்றவற்றில் ஈடுபட்டால் மூட்டுத் திசுக்கள் பலம் பெறும். மூட்டுத் தேய்மானம் ஆவது தள்ளிப்போகும். நடக்கும்போது நம் உடல் எடையைப்போல இரண்டு மடங்கு எடையை கால் மூட்டு தாங்குகிறது.
உடல் எடை அதிகரித்தால், மூட்டுக்கு அதிகப்படியான வேலை உண்டாகிறது. இதனால் மூட்டு சீக்கிரமே தேய்ந்துவிடுகிறது. எனவே, எடை சரியாக இருந்தால் மட்டுமே மூட்டுவலியைத் தவிர்க்க முடியும். தவிர, முழங்கால் மூட்டுக்கு வலிமை தருகின்ற யோகாசனங்களும் இருக்கின்றன. அவற்றை முறைப்படி செய்து வந்தால் மூட்டுவலியை நிச்சயம் தள்ளிப்போட முடியும்.
Image Source: freepik