திருமணமான ஒரிரு ஆண்டுகளில் தம்பதியினர் எதிர்கொள்ளும் முக்கியமான கேள்விகளில் ஒன்று. "வீட்ல ஏதும் விசேசமா?" என்பது தான். குழந்தைப் பிறப்பை சில தம்பதியினர் உண்மையாகவே சில ஆண்டுகள் தள்ளிப் போட்டிருந்தாலும் பல தம்பதிகளுக்கு இக்கேள்வி அச்சமூட்டுவதாக இருக்கிறது. மாறிவரும் வாழ்க்கை முறை, உணவுப்பழக்கம், உடல் பருமன், போதைவஸ்துகள் பயன்பாடு என பல்வேறு காரணங்களால் குழந்தைப் பிறப்பு தள்ளிப் போய், பின்னர் அதுவே பெரும் மன அழுத்தத்தை உருவாக்கி விடுகிறது.
குழந்தைப்பேறுக்காக பல்வேறு சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன.கருப்பையக கருவூட்டல் எனப்படும் Intrauterine insemination (IUI) மற்றொன்று ஐவிஎஃப் எனப்படும் இன் விட்ரோ கருத்தரித்தல். இதுகுறித்து சென்னையைச் சேர்ந்த ஜீவன் மித்ரா கருத்தரித்தல் மற்றும் பெண்கள் நல மையத்தின் தலைமை மருத்துவரான டாக்டர் ரம்யா ராமலிங்கத்திடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.
IUI முறையில் கருமுட்டைகள் சேகரிக்கப்படுவதில்லை. விந்தணுக்கள் மட்டும் கர்ப்பபையில் செலுத்தப்படுகிறது. கருப்பையில் இருந்து விந்து நகர்ந்து கருக்குழாய்க்கு (fallopian tube) வர வேண்டும். கருமுட்டை பையிலிருந்து, கருமுட்டை வெடித்து அதுவும் கருக்குழாய்க்கு வர வேண்டும்.
கருக்குழாயில் கருமுட்டையும், விந்துவும் இணைந்து கருத்தரித்தல் (fertilization)
இயற்கையாகவே நடைபெற வேண்டும். கருவானது, திரும்ப கருப்பையில் வந்து தங்க வேண்டும். இதுதான் IUI முறையில் கருத்தரித்தலுக்கான வழியாகும்.
IVF முறையில் மனைவியின் கருமுட்டையையும், கணவனின் விந்தணுவையும் வெளியே எடுத்து ஆய்வகத்தில் (Lab) வைத்து கருத்தரிக்க வைத்து பின்னர் கர்ப்பப்பைக்குள் கருவாக கொண்டுபோய் வைக்கப்படும். இந்தமுறையில் கருமுட்டை, விந்து ஆகியவற்றை இணைத்து ஆரோக்கியமான கருத்தரித்தலையும், வளர்ச்சியையும் உறுதி செய்த பின்னர் கர்ப்பபைக்குள் அனுப்பப்படுவதால் IVF முறையில் வெற்றி விகிதாச்சாரம் அதிகமாக இருக்கும்.
IUI சிகிச்சை யாருக்கெல்லாம் பரிந்துரைக்கப்படுகிறது?
விந்துப் பரிசோதனையில் வழக்கத்தை விட எண்ணிக்கை சற்றே குறைவாகவும் விந்து இயக்கத்தன்மை சற்றே குறைவாகவும் (motility) இருப்பவர்கள் IUI சிகிச்சை மேற்கொள்ளலாம். ஓவுலேசன் இன்டெக்சன் (ovulation induction) சிகிச்சையை ஐந்தாறு முறை செய்தும் வெற்றியடையாதவர்களுக்கு, சரியான நேரத்தில் உடலுறவு வைத்துக் கொள்ள இயலாதவர்களுக்கு, IUI சிகிச்சைமுறை பரிந்துரைக்கப்படுகிறது. லேசான எண்டோமெட்ரியாசிஸ் (Endometriosis) உள்ள பெண்களுக்கும், திருமணமாகி சில ஆண்டுகளாகி என்ன காரணம் என்றே தெரியாமல் கருத்தரிக்காமல் (Unexplained infertility) உள்ள பெண்களுக்கும் IUI சிகிச்சை அளிக்கலாம். IUI சிகிச்சை முறை என்பது இயற்கையான கருத்தரித்தலை விட ஒருபடிநிலை முன்பானதே அன்றி, மிக மேம்பட்ட ஒன்றாக நினைக்க முடியாது.
IUIக்கு முன் என்னென்ன பரிசோதனைகள் அவசியம்?
இயற்கையான முறையில் இக்கருத்தரித்தல் நிகழ்வதால் பெண்களுக்கான இரு கருக்குழாய்களில் ஒன்றாவது திறந்திருப்பது அவசியம். கருக்குழாய் பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும். கர்ப்பபை இயல்பாக இருக்கிறதா என்பதை அறிய TVS ஸ்கேன் பரிசோதனை செய்ய வேண்டும். IUI க்கு முன் TVS பரிசோதனையில் கருமுட்டையின் வளர்ச்சியையும் உறுதி செய்து கொள்வது நல்லது. இதைத்தாண்டி உடலின் பொதுவான ஆரோக்கியம், ரத்தப் பரிசோதனை, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, தைராய்டு எல்லாம் இயல்பாக இருக்கிறதா என்பதையும், கருத்தரித்தலுக்குத் தேவையான அளவு ஹீமோகுளோபின் இருக்கிறதா என்பதையும் சோதனை செய்து கொள்வது நல்லது.
IVF என்றால் என்ன?
IVF என்பது இன்-விட்ரோ ஃபெர்டிலைசேஷன் (In Vitro Fertilization). இயற்கையான முறையில் கருத்தரிப்பதில் சிரமம் உள்ள தம்பதியர்களுக்கு, பெண்ணின் கருமுட்டையையும், ஆணின் விந்தணுவையும் செயற்கையாக ஒரு ஆய்வகத்தில் Test Tube / dish-ல் இணைத்து மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை வளர வைத்து, நன்றாக வளரும் கருவை பெண்ணின் கருப்பைக்குள் செலுத்தி, குழந்தையை பிரசவிக்க வைப்போம்.
குழந்தை இல்லாத நிறைய தம்பதிகளுக்கு இது வரப்பிரசாதம். குறிப்பாக இயற்கையான முறையில் கருத்தரிக்கவே முடியாது என்ற சிக்கலில் உள்ள நிறைய தம்பதிகளுக்கு IVF சிகிச்சை மூலமாக குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பு அதிகம். கருக்குழாய் அடைப்பு (Tubal Block), எண்டோமெட்ரியாசிஸ் (Endometriosis), விந்தணு குறைபாடு உள்ளிட்ட பிரச்சனை உள்ளவர்களுக்கு IVF சிகிச்சை மூலமாக குழந்தைப்பேறு அடைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
குறிப்பாக விந்தணு குறைபாடு அதிகம் உள்ள ஆண்களுக்கு, எவ்வளவோ சிகிச்சைகளை முயற்சித்தும் பலனில்லை என்றால், IVFல் உள்ள அட்வான்ஸ் சிகிச்சையான ICSI மூலமாக அவர்களுடைய சொந்த குழந்தையை உருவாக்க முடியும். இதேபோல் பல ஆண்டுகளாக குழந்தை இல்லை, ஆனால் அனைத்துவிதமான பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை முறைகளையும் முயன்று பல தோல்விகளைச் சந்தித்த தம்பதிகளுக்கும்(Un explained Infertility)IVF சிகிச்சை குழந்தைப்பேறுக்கான அதிக வாய்ப்பை வழங்குகிறது.
IVF சிகிச்சைக்கு தயாராகும் தம்பதி என்னென்ன மாதிரியான பரிசோதனைகளை எல்லாம் மேற்கொள்ள வேண்டும்?
IVF சிகிச்சையை ஆரம்பிப்பதற்கு முன்னதாக பெண்ணின் உடல் கருத்தரித்தலுக்கு தயாராக இருக்கிறதா என்பதை பரிசோதிப்போம். அதாவது சினைக்கருவை ஏற்றுக்கொள்ளும் தன்மையும், வளர்க்கும் தகுதியும் கருப்பைக்கு உள்ளதா என பரிசோதிப்போம். அதன்பின்னர் உடல் எடை, நீரிழிவு நோய், தைராய்டு, உயர் ரத்த அழுத்தம் பரிசோதனை செய்யப்படும். ஒருவேளை நீரிழிவு நோய் அல்லது தைராய்டு இருப்பது கண்டறியப்பட்டால், அதனை கட்டுப்படுத்தும் செயல்பாடுகள் தொடங்கப்பட்ட பின்னரே, ஐ.வி.எஃப். செய்யப்படும். ஆணிடம் விந்தணுவின் தரம், இயக்கம், அளவு சரியாக உள்ளதா? என பரிசோதிப்போம்.
Image Source: Freepik