1.திருமணமான தம்பதிகள் குழந்தையின்மை பிரச்சனைக்கு எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?
35 வயதுக்கு கீழ் உள்ள பெண்கள் ஒரு வருடம் தொடர்ச்சியாக கருத்தரிக்க முயற்சித்தும் வெற்றி பெறவில்லை என்றால், 35 வயதுக்கு மேல் உள்ள பெண்கள் 6 மாதங்கள் முயற்சித்தும் கருத்தரிக்காத நிலையில் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது அவசியம். 40 வயதுக்கு மேல்கருத்தரிப்பு வாய்ப்புகள் சற்றுக் குறைவு என்பதால், 3 மாதங்கள் முயற்சித்த பிறகு மருத்துவரை அணுகலாம்.
பெண்ணுக்கு (PCOS), எண்டோமெட்ரியோசிஸ், தைராய்டு பிரச்சினை, அல்லது ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி, கருப்பை குழாய் அடைப்பு, முன்பு கருச்சிதைவுகள், அல்லது கர்ப்பப்பை மற்றும் வயிறு சார்ந்த அறுவை சிகிச்சை செய்திருந்தாலும், ஆணுக்கு விந்தணு எண்ணிக்கை குறைவு, விந்தணு இயக்கம் பிரச்சினை, அல்லது விந்துப் பை அறுவை சிகிச்சை வரலாறு இருந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
2.குழந்தையின்மைக்கான பொதுவான காரணிகள் என்னென்ன?
பெண்களுக்கு ஹார்மோன் குறைபாடு, கருக்குழாய் அடைப்பு, என்டோமெட்ரியாசிஸ் சாக்லெட் சிஸ்ட், கருமுட்டை அளவு மற்றும் தரம் குறைவது (Low AMH), கர்ப்பைக்கட்டி போன்றவை குழந்தையின்மைக்கான காரணங்களாக உள்ளன. ஆண்களுக்கு விந்தணு தரம், எண்ணிக்கை குறைவு, விந்தணு இயக்கம், ஹார்மோன் பிரச்சனைகளாலும் இருவருக்கும் பொதுவாக தெரியாத காரணிகள், வாழ்கை முறை (புகை, மது, உடல்பருமன்), மரபணு கோளாறுகள் உள்ளிட்டவை குழந்தையின்மைக்கான பொதுவான காரணிகளாக உள்ளன.
தீர்வுகள் மற்றும் சிகிச்சை முறைகள் என்ன?
குறைபாடுகளைப் பொறுத்து தீர்வு அமையும். கருமுட்டை சரியாக உருவாகாதவர்களுக்கு ஓவுலேஷன் இன்டெக்சன் சிகிச்சை அளிக்கப்படும். இது ஒரு எளிய சிகிச்சை முறையாகும். மாதவிடாய் ஆன இரண்டாம் நாளிலிருந்து ஆறாம் நாள் வரை மருந்துகள் கொடுக்கப்பட்டு ஃபாலிக்குலர் மானிட்டரிங் செய்யப்படும். முட்டையின் வளர்ச்சியை பொறுத்து இயற்கையான முறையில் கணவருடன் இணையும் போது கருத்தரிக்க வைக்கலாம். கருக்குழாய் அடைப்பு கண்டறியப்பட்டால் லேப்ரோஸ்கோபி மூலம் சரி செய்யலாம். அதன் மூலம் சரியாகாதவர்களுக்கு IVF சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். சாக்லெட் சிஸ்ட் (chocolate cyst) இருப்பவர்களுக்கு லேப்ரோஸ்கோபி செய்து எண்டோமெட்ரியாசிஸ் பிரச்சனையை சரிசெய்து இயற்கையாக கருத்தரிக்க வைக்கலாம். அதில் கருத்தரிப்பு நிகழவில்லை எனில் அடுத்து IUI, IVF சிகிச்சை முறைகள் மேற்கொள்ள வேண்டும்.
கர்ப்பப்பை கட்டி தொடர்பான பிரச்சனைகள் இருந்தால் ஹிஸ்ட்ரோஸ்கோபி (Hysteroscopy), லேப்ரோஸ்கோபி சிகிச்சை மூலம் கட்டியை நீக்கி இயற்கை முறையில் கருத்தரிக்க வைக்கலாம். விந்தணுக்கள் குறைபாடுகள் இருந்தால் அதற்கான காரணங்களை கண்டறிந்து சரிசெய்து, ஆன்டிஆக்சிடண்ட் மருந்துகள் கொடுத்து விந்தணுக்களின் வளர்ச்சியை ஆராயலாம். இதுதவிர வாழ்க்கை முறை, நொறுக்குத்தீனிகள் தவிர்ப்பது, உடல்பருமன் மற்றும் மன உளைச்சலைக் குறைத்தல், இரவு நல்ல தூக்கம், ஆரோக்கியமான வாழ்க்கை முறை, வாரத்திற்கு இரண்டு, மூன்று முறை உடலுறவு கொள்ளுதல் மூலமாக இயற்கையாக கருத்தரிக்க வைக்கலாம்.
விந்தணு சோதனை, குழாய் சோதனை மற்றும் கருக்குழாய் சோதனை எல்லாமே இயல்பாக இருந்தும் கருவுறாமல் இருப்பது விவரிக்கப்படாத மலட்டுத்தன்மை (Unexplained infertility) என்று அழைக்கப்படுகிறது. அவர்களுக்கு ஓவுலேசன் இன்டெக்சன் சிகிச்சை முறை மூன்று அல்லது நான்கு சுழற்சிகள் அளித்த பின்னரும் கரு நிற்கவில்லை எனில் IUI சிகிச்சை செய்து பார்க்கலாம்.
IUI ல் கணவரின் விந்தணுக்களைப் பெற்று இயக்கம் (motility) மற்றும் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் வகையில் ஆய்வகத்தில் தயார் செய்யப்பட்டு கருப்பைக்கு நேரடியாக அனுப்பப்படுகிறது. அதிலும் நிற்கவில்லை எனில் IVF, ICSI சிகிச்சை வழங்கப்படும். தீவிரமாக இருக்கும் விந்தணுக் குறைபாடு, PCOS, எண்டோமெட்ரியாசிஸ், விவரிக்கப்படாத மலட்டுத்தன்மை இருப்பவர்கள் நிறைவாக IVF, ICSI சிகிச்சை மேற்கொள்ளலாம். அதை சரியான வயதில், சரியான நேரத்தில் செய்யும் போது வெற்றி விகிதாச்சாரம் அதிகமாக இருக்கும்.
Image Source : Freepik