PCOS பிரச்சனை எதனால் ஏற்படுகிறது?
பிசிஓஎஸ் (Polycystic Ovary Syndrome) என்பது ஹார்மோன் சீர்குலைவால் ஏற்படும் பிரச்சனையாகும். பெண்களின் உடலில் ஆண் ஹார்மோன்கள் (ஆண்ட்ரோஜன்) அளவு அதிகரிக்கும் போது, முட்டை வெளியீடு (ஓவுலேஷன்) பாதிக்கப்படுகிறது. லியூடினைசிங் ஹார்மோன் (LH) அதிகரிப்பு மற்றும் ஃபோலிகில்-ஸ்டிமுலேடிங் ஹார்மோன் (FSH) குறைவு, முட்டை பை (Follicle) வளர்ச்சியைத் தடுக்கிறது.
உடல் செல்கள் இன்சுலினுக்கு பதிலளிப்பதில் தோல்வியடையும் போது, இன்சுலின் அளவு அதிகரிக்கிறது. இது ஆண்ட்ரோஜன் உற்பத்தியைத் தூண்டுகிறது. 80% பிசிஓஎஸ் பாதிப்புள்ள பெண்கள் உடல்பருமன் அல்லது இன்சுலின் எதிர்ப்பு கொண்டவர்கள். தாய், சகோதரி போன்றவர்களுக்கு பிசிஓஎஸ் இருந்தால், அதன் ஆபத்து அதிகம். உடற்பயிற்சி இன்மை, பதப்படுத்தப்பட்ட உணவு, சர்க்கரை அதிகம் கொண்ட உணவுகள், பிளாஸ்டிக் (BPA), பூச்சிக்கொல்லிகள் போன்றவை ஹார்மோன் சீர்குலைவை ஏற்படுத்தலாம். ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி, முகப்பரு, தலைமுடி குறைதல், உடல் முடி அதிகரிப்பு (Hirsutism), எடை அதிகரிப்பு (குறிப்பாக வயிறு பகுதியில்) பிசிஓஎஸ்-இன் அறிகுறிகளாக உள்ளன.
"பிசிஓஎஸ் குணப்படுத்த முடியாது, ஆனால் சரியான மருத்துவ மேலாண்மை மூலம் அறிகுறிகளைக் கட்டுப்படுத்தலாம். மாதவிடாய் சீராக்க, ஆண்ட்ரோஜன் குறைக்க, இன்சுலின் எதிர்ப்பைக் குறைக்க மருந்துகள் இருக்கின்றன.எடை குறைத்தல், குறைந்த கார்போஹைட்ரேட், உயர் புரத உணவு, வாரத்திற்கு 150 நிமிடம் உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்" என்கிறார் மருத்துவர் ரம்யா ராமலிங்கம்
உடல் பருமன் குழந்தையின்மை பிரச்சனையை பாதிக்குமா?
ஆம். உடல் பருமன் (Obesity) ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் கருவுறுதல் திறனை பாதிக்கக்கூடிய காரணிகளில் ஒன்றாகும். பெண்களைப் பொறுத்தவரை உடல் பருமன், ஹார்மோன் சமநிலையின்மையை உருவாக்கி, எஸ்ட்ரோஜன் மற்றும் பிற ஹார்மோன்களின் அளவை மாற்றி, மாதவிடாய் சுழற்சியை ஒழுங்கற்றதாக்கலாம். இது முட்டை வெளியீட்டில் (Ovulation) பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
உடல் பருமன் PCOS நிலையை மோசமாக்கலாம், இது முட்டை வெளியீடு நடைபெறாமல் குழந்தையின்மைக்கு வழிவகுக்கும். கரு உருவாகுவதற்குத் தேவையான சூழல் பாதிக்கப்படலாம், இதனால் கருத்தரித்தல் கடினமாகிறது. உடல் பருமனால் கர்ப்பகாலத்தில் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம், இது கருச்சிதைவு அபாயத்தை அதிகரிக்கும்.
ஆண்களைப் பொறுத்தவரை உடல் பருமன் பிரச்சனை விந்தணுக்களின் எண்ணிக்கை, இயக்கம் மற்றும் தரத்தை குறைக்கலாம். ஹார்மோன் மாற்றங்களை ஏற்படுத்தி டெஸ்டோஸ்டிரோன் அளவைக் குறைத்து, எஸ்ட்ரோஜன் அளவை அதிகரிக்கலாம், இது விந்தணு உற்பத்தியை பாதிக்கும். இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, விறைப்புத்தன்மை குறைபாடு (Erectile Dysfunction) ஏற்படலாம்.