What is the age limit for IVF treatment: குழந்தையின் சிரிப்பைப்போல ஒரு வீட்டை நிறைப்பது எதுவும் இல்லை. ஆனால், பல்வேறு காரணங்களால் தற்போது குழந்தைப்பேறு பலருக்குத் தள்ளிப்போகிறது. சிலருக்கு இயல்பாக நிகழ்வதில்லை. அந்தச் சூழலில் உள்ளவர்கள் மருத்துவர்களை அணுகுவதும் கர்ப்பம் தரிப்பதற்கான ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகள் பெறுவதும் இயல்பு.
குறிப்பாக IVF சிகிச்சை அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில், தம்பதிகளின் வயது இந்த சிகிச்சைக்கு எவ்வாறு முக்கிய பங்காற்றுகிறது என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. இதுகுறித்து சென்னையைச் சேர்ந்த ஜீவன் மித்ரா கருத்தரித்தல் மற்றும் பெண்கள் நல மையத்தின் தலைமை மருத்துவரான டாக்டர் ரம்யா ராமலிங்கத்திடம் (Dr ramya Ramalingam, IVF Specialist, jeevan Mithra Fertility Centre, Chennai) சில கேள்விகளை முன்வைத்தோம்.
குழந்தை பேறுக்கு தம்பதிகளின் வயது மிகவும் முக்கியமானதா?
ஒரு தம்பதி குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுக்கிறார்கள் என்றால், அப்போது அவர்களுடைய வயது மிகவும் முக்கியமானது. குறிப்பாக பெண்களுடைய வயதை கட்டாயம் கணக்கில் கொள்ள வேண்டும். பெண்களுக்கு வயதாக வயதாக அவர்களுடைய கருமுட்டையின் தரம் மற்றும் அளவு குறைந்து கொண்டே செல்லும். ஆண்களுக்கு விந்தணுவின் தரம் குறையும். பெண்களுக்கு பிறக்கும் போதே ஒரு குறிப்பிட்ட அளவு கருமுட்டை தான் இருக்கும். அது வயதாக, வயதாக குறைந்து கொண்டே செல்லும். 35 வயதுக்கு மேல் சென்றாலே கருமுட்டையின் எண்ணிக்கை குறைந்து கொண்டே இருக்கும்.
40 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு மிகவும் சொற்ப எண்ணிக்கையிலான கருமுட்டைகள் மட்டுமே இருக்கும். ஆனால் இந்த வயது ரீதியிலான கருமுட்டை எண்ணிக்கை என்பது அனைத்து பெண்களுக்கு ஒரே மாதிரியாக இருக்காது. ஒவ்வொருவருடைய உடல் நிலையைப் பொறுத்து வயதனாலும் கருமுட்டைகளின் எண்ணிக்கை மாறலாம்.
சிலர் பெண் குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே நல்ல ஆரோக்கியமான உணவு கொடுத்து வளர்த்திருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு வயதானாலும் கருமுட்டைகளின் எண்ணிக்கை அதிகமாகவும், தரமானதாகவும் இருக்கும். மரபணு காரணங்கள், கருப்பையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டது, உணவுப்பழக்கம், சத்துக்குறைபாடு, உடல்பருமன், சுற்றுச்சூழல், மன அழுத்தம், நோய் தொற்று போன்ற காரணங்களால் சில பெண்களுக்கு சீக்கிரமாகவே கருமுட்டைகளின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: IVF சிகிச்சைக்கு முயற்சிக்கிறீங்களா?… பக்கவிளைவுகள் பத்தி தெரிஞ்சிக்கோங்க!
IVF சிகிச்சைக்கு வயது முக்கியமா? பெண்கள் எந்த வயதில் IVF சிகிச்சை செய்து கொள்வது குழந்தை பேறுக்கான வாய்ப்பை அதிகரிக்கும்?
ஓவுலேஷன் இண்டக்ஷன்(Ovulation Induction), லேப்ராஸ்கோபி (Laparoscopy), இன்யூட்ரோ இன்செமினேஷன் (Intrauterine insemination), ஹிஸ்டரோஸ்கோபி (Hysteroscopy) என குழந்தையின்மைக்கு பல அதிநவீன சிகிச்சை முறைகள் உள்ளன. இதை எல்லாம் விட இன் விட்ரோ ஃபெர்டிலைசேஷன் எனப்படும் IVF மற்றும் இன்ட்ரா சைட்டோபிளாஸ்மிக் ஸ்பெர்ம் இன்ஜெக்ஷன் (ICSI) சிகிச்சை குழந்தை பேறுக்கான அதிக வாய்ப்புகளை வழங்குகிறது. இந்த அதிநவீன மருத்துவ முறையிலும் தம்பதியின் வயது மிக முக்கியத்துவம் வாய்ந்தது. 35 வயதுக்குள் இருக்கும் பெண்களுக்கு ஐவிஎஃப் சிகிச்சைக்கான வெற்றி வாய்ப்பு மிக மிக அதிகமாக இருக்கும். குறிப்பாக 40 வயதுக்கு மேல் ஐவிஎஃப் சிகிச்சை மேற்கொள்ளும் போது குறைபாடுள்ள குழந்தைகள் பிறப்பதை முன்கூட்டியே தவிர்க்க, கருமுட்டைகளில் மரபணு ரீதியிலான சோதனைகளை மேற்கொண்ட பிறகே சிகிச்சையை தொடர வேண்டிய நிலை ஏற்படும்.
இதையும் படிங்க: நீங்க IVF செய்ய விரும்புகிறீர்களா.. இந்த விஷயங்களில் கவனமாக இருங்க!
தற்போது எல்லாம் இளம் பெண்களுக்கே கருமுட்டை உற்பத்தி குறைவதாக கூறப்படுகிறதே அதற்கான காரணங்கள் மற்றும் சிகிச்சைகள் என்ன?
இளம் பெண்களுக்கு கருமுட்டை எண்ணிக்கை குறைவது Low AMH (லோ லெவல் ஆஃப் ஆன்டி முல்லேரியன் ஹார்மோன்) எனப்படுகிறது. இந்த பிரச்சனை உள்ள பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ளவே முடியாது என்ற தவறான கருத்து உள்ளது. ஆனால் வாழ்க்கை முறை மற்றும் சில குறிப்பிட்ட மருந்துகள் மூலமாக Low AMH பிரச்சனைக்கும் சிகிச்சை அளிக்க முடியும். Low AMH பிரச்சனை உள்ள பெண்களுக்கு கருமுட்டையின் எண்ணிக்கை குறைவாக இருக்கும், அதில் தரமான கருமுட்டைகளை கண்டறிந்து சிகிச்சை அளித்தால், அவர்களுக்கும் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது.
IVF முறையில் Low AMH பிரச்சனையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு என பிரத்யேக சிகிச்சையே முறையே உள்ளது. முறையான வாழ்க்கை மாற்றத்துடன் சரியான சிகிச்சை எடுத்துக்கொண்டால் இவர்களுக்கும் கட்டாயம் குழந்தைப்பேறு கிடைக்கும்.
தற்போது சிகிச்சைக்கு வரும் பெண்களின் கருமுட்டை எண்ணிக்கையை கண்டறிவதற்கான பிரத்யேக சிகிச்சைகள் வந்துவிட்டன. அதனால் ஐவிஎஃப் சிகிச்சைக்கு முன்னதாகவே பெண்கள் தங்களது கருமுட்டை குறித்து முழு விவரங்களையும் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
தாமதமாக திருமணம் செய்யும் தம்பதிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்ன?
இப்போதெல்லாம் ஆண், பெண் என இருதரப்புமே தங்களது வேலையில் நல்ல நிலையை அடைய வேண்டும், வீடு, கார் என செட்டில் ஆன பிறகே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என நினைக்கிறார்கள். இதனால் திருமணத்தை தள்ளிப்போடும் இளம் தலைமுறையினரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தாமதமான திருமணங்களில் முதலில் தம்பதிகளின் வயது அதிகமாக இருக்கும்.
வயதான பெண்களிடையே எண்டோமெட்ரியாசிஸ் (Endometriosis) என்ற பிரச்சனை அதிக அளவில் காணப்படுகிறது. இந்த பிரச்சனை உள்ளவர்களுக்கு கடுமையான மாதவிடாய் வலி, பாலியல் உறவின் போதும் அல்லது பிறகும் வலி, கடுமையான அல்லது அசாதாரண மாதவிடாய், மாதவிடாயின் போது அதிகமான ரத்தப்போக்கு ஆகிய பிரச்சனைகள் இருக்கும். இவர்களுக்கு குழந்தை பெற்றுக்கொள்வதில் சிக்கல் ஏற்படலாம்.
வயதான பெண்கள் குழந்தை பேறுக்கு தகுதி பெற்றாலும், வயது அதிகரிக்கும்போது, அபாயங்களும் அதிகரிக்கும் என்கிறார் மருத்துவர் ரம்யா ராமலிங்கம். அதிக வயதில் கருவுறும் பெண்களுக்கு மரபணு குறைப்பாடுள்ள குழந்தைகள் பிறப்பது, கருச்சிதைவு, குறைப்பிரசவம் போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கிறர். ஆனால் தற்போதுள்ள நவீன மருத்துவம் மூலமாக தாயின் வயிற்றில் வளரும் குழந்தை ஆரோக்கியமாக உள்ளதா? என்பதை கண்டறிய முடியும். எனவே வயதான தாய்மார்களும் கூட சரியான திட்டமிடல், கண்காணிப்பு மற்றும் சிகிச்சை எடுத்துக் கொண்டால் ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்றெடுக்க முடியும் என்கிறார் மருத்துவர் ரம்யா ராமலிங்கம்.
“காலத்தே பயிர் செய்” என பெரியவர்கள் சொன்னது போகிறப் போக்கில் சொன்ன வார்த்தைகள் கிடையாது. திருமண பந்தத்தின் முழு மகிழ்ச்சியையும் அடைய குழந்தைப்பேறு என்பது மிகவும் முக்கியமானது. இன்றைய இளம் தலைமுறையினர் எப்போது வேண்டுமானாலும் படிக்கலாம், வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்லலாம், புரோமோஷன், வீடு என அனைத்தையும் அடையலாம், ஆனால் குழந்தை பெற்றுக்கொள்ள வயது மிக முக்கியமான ஒன்று. திருமணம் செய்ய முடிவெடுக்கிறீர்கள் என்றாலே 35 வயதுக்குள் குழந்தை பெற்றுக்கொள்ளவும் திட்டமிட்டுக்கொள்ளுங்கள் என அட்வைஸ் கொடுக்கிறார் மகப்பேறு சிறப்பு மருத்துவர் ரம்யா ராமலிங்கம்.
ஒருவேளை தவிர்க்க முடியாத காரணங்களுக்காக குழந்தை பிறப்பை தள்ளிப்போட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், எந்தவித தயக்கமும் இன்றி உடனடியாக மகப்பேறு சிறப்பு மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள். ஆண், பெண் யாராக இருந்தாலும் அவர்களது வயதுக்கு ஏற்றார் போல் குழந்தை பேற்றை முன்கூட்டியே கணிக்கக்கூடிய சிம்பிளான மருத்துவ பரிசோதனைகளை பரிந்துரைப்பார்கள். இதன் மூலமாக உங்கள் வயதுக்கு ஏற்றார் போல் மகப்பேறு சிகிச்சைக்கு திட்டமிட்டுக்கொள்ளலாம் என்கிறார். தற்போதுள்ள நவீன மருத்துவத்தால் 50 வயதில் கூட தாய்மார்கள் ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றுக் கொள்வது சாத்தியமானது என அடித்துக்கூறும் மருத்துவர் ரம்யா ராமலிங்கம், அதற்கு அவர்கள் சரியான உடல் தகுதியுடன் இருக்க வேண்டும் எனக்குறிப்பிட்டுள்ளார்.