கோடை வெப்பம் ஆரம்பத்திலேயே கொளுத்தி எடுக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வழக்கத்தை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வளவு நாட்களாக கடும் குளிரால் அவதிப்பட்ட நாம், இப்போது கொளுத்தும் வெயிலுக்கு தயாராக வேண்டும்.
கோடை வெப்பத்தினால் அடிக்கடி நாக்கு வறட்சி ஏற்படும். அடிக்கடித் தண்ணீர் குடிப்பதுடன், சில சத்தான பானகத்தைச் செய்து அருந்துவது, சோர்வை நீக்கி, சுறுசுறுப்பைத் தருவதுடன், உடலுக்குத் தெம்பையும் கூட்டும். உடலைக் குளிரவைக்கும் சில பானகங்களை, சமையல் நிபுணர் தாமு செய்து காட்டுகிறார்.
புதினா டீ
தேவையானவை:
- புதினா
- ஏலக்காய் – சிறிதளவு
- பனை வெல்லம் – தேவையான அளவு
செய்முறை:
புதினா இலைகளைத் தண்ணீரில் கொதிக்கவைத்து, பனை வெல்லம் சேர்த்து, இறக்குவதற்கு முன்பு, ஏலக்காய்த் தூளைச் சேர்க்கவும். நான்கைந்து புதினா இலைகள் போதுமானது. அதிக அளவு சேர்த்தால், தொண்டையில் எரிச்சல் ஏற்படும்.
பலன்கள்: வயிற்று வலியைக் கட்டுபடுத்தும். உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். முகம் பொலிவுபெறும். பருக்கள், கட்டிகள் வராமல் காக்கும். ஜீரணத்துக்கு நல்லது.
துளசி டீ
தேவையானவை:
- துளசி
- ஏலக்காய் – சிறிதளவு
- பனை வெல்லம் – தேவையான அளவு
செய்முறை:
ஆவாரம் டீ போலவே இதையும் தயாரிக்க வேண்டும். ஆவாரம் பூ, பட்டை சேர்ப்பதற்குப் பதிலாக, துளசி இலையைச் சேர்த்துத் தயாரிக்கலாம்.
பலன்கள்:
துளசியில் ஆக்சிஜன் அதிக அளவு இருப்பதால், உடலுக்கு மிகவும் நல்லது. அதிகமான வியர்வையைக் கட்டுபடுத்தும். உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். முகப்பொலிவுக் கூடும்.
கற்றாழை ஜூஸ்
தேவையானவை:
- பெரிய நெல்லிக்காய் – ஏழு
- பனை வெல்லம் – தேவையான அளவு
செய்முறை:
பெரிய நெல்லிக்காயில் விதையை நீக்கி, தோலைச் சீவிக்கொள்ளவும். இதனால், துவர்ப்புத் தன்மை இருக்காது. தோல் சீவக் கடினமாக இருந்தால், சிறிதளவு நீரைக் கொதிக்கவைத்து, அதில் ,நெல்லிக்காயைப் போட்டுவைத்து எடுத்தால், தோல் நீங்கிவிடும். இதனுடன், பனை வெல்லம் சேர்த்து, தண்ணீர் விட்டு, மிக்ஸியில் போட்டு அரைத்துக்கொள்ளவும். குளிர்ச்சியான நெல்லிக்காய் ஜூஸ் தயார்.
பலன்கள்:
நெல்லிக்காயில் வைட்டமின் சி சத்து அதிகம் இருக்கிறது. சோர்வாக இருக்கும் போது பருகினால், உடலுக்கு நல்ல சக்தியைத் தரும். ரத்தத்தைச் சுத்தப்
படுத்தும். வியர்வையை வெளியேற்றும்.
கேழ்வரகு முளைப்பால்
தேவையானவை:
- கேழ்வரகு – 250 கிராம்
- பனை வெல்லம் – 50 கிராம்
செய்முறை:
நன்றாக முற்றி விளைந்த கேழ்வரகை ஊறவைத்து, தண்ணீரை வடிகட்டி, முளைக்கவிடவும். முளைவிட்ட கேழ்வரகை மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். பிறகு, ஒரு பருத்தித் துணியால் வடிகட்டிக்கொள்ள வேண்டும். வடிகட்டிய கேழ்வரகுப் பாலுடன், பனை வெல்லம் சேர்த்து, நன்றாக அரைத்துக்கொள்ளவும். சுவையான கேழ்வரகு முளைப்பால் தயார்.
பலன்கள்:
கேழ்வரகில் வைட்டமின் டி, இரும்பு, கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருப்பதால், உடலுக்கு மிகவும் ஏற்றது. உடல் உஷ்ணத்தைப் போக்கி, நல்ல குளிர்ச்சியைத் தரும்.
Image Source: Freepik