Shorts Videos Side Effects: டிஜிட்டல் யுகத்தில் பணியில் தொடங்கி பொழுதுபோக்கு வரை அனைத்தும் திரை பயன்பாட்டில் தான். மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகம், குழந்தைகளுக்கு உணவு ஊட்டும்போது என அனைத்து பணிகளுக்கும் திரை அணுகல்கள் தேவைப்படுகிறது.
இன்றைய காலக்கட்டத்தில் பொழுதுபோக்கு என்றாலே அது திரை அணுகலில்தான் இருக்கிறது. வெளியில் சென்று விளையாடுவது, குடும்பத்தோடு வெளியே செல்வது, அக்கம்பக்கத்தினருடன் கலந்துரையாடல், நண்பர்களுடன் சந்திப்பு, குடும்பத்தாருடன் சந்திப்பு என்ற பொழுதுபோக்குகள் எல்லாம் மலையேறிவிட்டது. படம், நாடகம், விளையாட்டுகள், வெப் சீரிஸ், சமூகவலைதளம் என முழு நேரமும் திரை அணுகலில் மூழ்கி விட்டோம்.
சமூகவலைதளங்களில் மூழ்கிக் கிடக்கும் நபர்கள்
பலரும் பொழுதுபோக்குகிறோம் என நினைத்து சமூகவலைதளங்களில் மூழ்கிக் கிடக்கிறோம். 5 நிமிடம் மட்டும் என நினைத்து நாம் மொபைலை எடுத்து சமூகவலைத்தை ஓபன் செய்தால் போது அது நமது நேரத்தை அப்படியே திண்றுவிடும். அதாவது 5 நிமிடம் என நினைத்து நாம் மொபைலை எடுத்தால் போதும் நம்மையே அறியாமல் மணி நேரக் கணக்கில் அதில் மூழ்கிவிடுகிறோம்.

சமூகவலைதள தகவலையே முழுமையாக நம்பும் நபர்கள்
அதுமட்டில்லை சமூகவலைதளங்களில் இருக்கும் பல தகவல்களையும் அதன் உண்மைத்தன்மையை அறியாமலேயே நம்புகிறோம். எடுத்துக்காட்டாக சொல்லவேண்டும் என்றால் மக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்த வேட்பாளர்கள் கூட இப்போதெல்லாம் சமூகவலைதளங்களில் தான் அதீத வகையில் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
அதேபோல் மக்களும் வீடுதேடி வாக்கு சேகரிக்க வரும் வேட்பாளர்களை நேரில் சந்திப்பதை விட சமூகவலைதளங்களிலும், திரை அணுகலிலும் தான் அவர்கள் குறித்து அறிந்துக் கொள்கிறார்கள்.
சமூகவலைதளத்தில் பரவும் ஆரோக்கியம் தொடர்பான தகவல்கள்
இதெல்லாம் ஒருபுறம் இருக்க உடல்நலம் குறித்த செயல்பாடுகளையும் நாம் சமூகவலைதளங்களில் தான் அறிந்துக் கொள்கிறோம். பொதுவாக தலை வலி, வயிறு வலி, கால் வலி, கை வலி போன்ற வலிகள் ஏன் ஏற்படுகிறது என்பதை கூகுளில் டைப் செய்து தெரிந்து கொள்கிறோம். இதைகூட ஏற்றுக் கொள்ளலாம். இதன்மூலம் பலர் பலன் பெற்று இருக்கிறார்கள். ஆனால் வலி தீவிரமாக இருக்கும்பட்சத்தில் மருத்துவரை சந்திப்பது நல்லது.
ஷார்ட்ஸ் வீடியோ தகவலை நம்பலாமா?
சிலர் சமூகவலைதளங்கள் பார்க்கும்போது அதில் வரும் வினாடிக் கணக்கான ஷார்ட்ஸ் வீடியோக்களை பார்த்து அதை அப்படியே பின்பற்றுகிறார்கள் என்பது வருந்தத்தக்க ஒன்று. உதாரணமாக இதையெல்லாம் கலந்து சாப்பிட்டால் உடல் எடை குறையும், மாரடைப்பு வராமல் தடுக்க இதை சாப்பிடவும், கை கால் வலி குறைய இந்த உடற்பயிற்சி செய்யவும் என 30 வினாடி வீடியோக்களை நம்பி பலர் அதை பின்பற்றுகிறார்கள்.
ஷார்ட்ஸ் வீடியோக்களின் ஆரோக்கிய தகவலை பின்பற்றும் முன் செய்ய வேண்டியவை
ஷார்ட்ஸ் வீடியோக்களில் வருவது சரியா, அதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன என்பதை விரிவாக தேடி படிக்காமல் கூட அதை பின்பற்றுகிறார்கள். ஷார்ட்ஸ் வீடியோக்களில் வரும் தகவல் குறித்து அறிந்துக் கொள்வதும், அதை பின்பற்ற முயற்சிப்பதும் தவறில்லை என்றாலும் அதனால் ஏற்படும் பக்கவிளைவுகள், அனைத்தும் சரியா என்பது குறித்து அறிந்துக் கொள்வதும் அவசியம்.
மருத்துவர் ஆலோசனை பெறுவது கூடுதல் சிறப்பு
எனவே ஷார்ட்ஸ் வீடியோக்கலின் தகவலை நம்பவே வேண்டாம் என கூறவில்லை, முழுவதுமாக நம்பி பின்பற்றாமல் அதன் தகவலை முறையாக படித்துத் தெரிந்துக் கொண்டு பின்பற்றவும். உங்கள் உடலில் வேறு ஏதேனும் பிரச்சனை இருந்தாலோ அல்லது சமூகவலைதள வீடியோக்களில் பெருமளவு சந்தேகம் இருந்தாலோ உடனே மருத்துவரை அணுகி அவரின் ஆலோசனையின்படி செயல்படுவது நல்லது.
Pic Courtesy: FreePik