Senior Marxist Leader Sankaraiah Passed Away: விடுதலை போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான என். சங்கரய்யா (102) வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நலக் கோளாறு காரணமாக இன்று காலை காலமானார்.
இவருக்கு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, சளி மற்றும் காய்ச்சலால் ஆக்சிஜன் குறைவு ஏற்பட்டது. இதனை அடுத்து உடனடியாக அவர், சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை 9 மணி அளவில் மருத்துவமனையிலேயே அவர் உயிர் பிரிந்தது. இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் இரங்கள் தெரிவித்து வருகின்றனர்.
உயிரை பறிக்கும் குளிர் காலம்!
பொதுவாக குளிர் காலம் என்றாலே அது வயது மூப்பினருக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக சளி, காய்ச்சல், ஆக்சிஜன் பற்றாக்குறை போன்ற பல இன்னல்களை கொடுக்கிறது. மேலும் நிமோனியா, COPD போன்ற நுரையீரல் சார்ந்த நிலைகளில் உள்ள வயதானவர்களுக்கு, குளிர்காலமானது உயிர் பறிக்கும் காலமாக திகழ்கிறது.
அந்த வகையில் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யாவிற்கு தற்போது 102 வயது ஆகிறது. இவர் கடந்த இரண்டு வருடங்களாகவே, அவ்வப்போது வயது மூப்பால் ஏற்படும் சில உடல்நலக் கோளாறுக்கு உள்ளாகியிருந்தார். இந்நிலையில் கடந்த 13ஆம் தேதி அன்று அதீத சளி காரணமாக ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதால், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிரமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.
இதையும் படிங்க: World COPD Day 2023: நுரையீரலை பாதிக்கும் COPD! இதன் தாக்கம் என்ன?
சளியிலிருந்து முதியவர்களை காப்பது எப்படி?
குளிர்காலத்தின் போது வீட்டில் உள்ள முதியவர்களை நாம் கவனமாக கையாள வேண்டும். அவர்கள் இந்த நேரத்தில் அபாயம் நிறைந்த உடல் பிரச்னைகளை சந்திக்கலாம். குறிப்பாக சுவாசக்கோளாறுகளால், அவர்கள் பாதிக்கப்படலாம். இதிலிருந்து அவர்களை பாதுகாக்க சில வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. இதனை படித்து பயன் பெறவும்.
முடிந்த வரை முதியவர்களை குளிர்காலத்தில் வெளியே செல்ல அனுமதிக்க வேண்டாம். ஏதேனும் கட்டாயம் இருந்தால், மாஸ்க், ஸ்வெட்டர் போன்ற பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து செல்ல அனுமதிக்கவும்.
வயதானவர்கள் இருக்கும் வீட்டில் ஹீட்டர் உபயோகிக்கவும். இது குளிர் காலத்தில் வீட்டை கதகதப்பாக வைத்திருப்பதுடன், வயதானவர்களை குளிரிலிருந்து காக்க உதவுகிறது.
முதியவர்கள் மட்டுமின்றி வீட்டில் உள்ள அனைவரும், முடிந்த வரை சுடு தண்ணீர் குடிப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
நீண்ட நேரம் நீரில் நேரத்தை கழிக்காதீர்கள். குளிப்பதற்கு வெதுவெதுப்பான நீரை பயன்படுத்தவும். இது உங்களை சளி மற்றும் காய்ச்சலிலிருந்து காக்க உதவுகிறது.