சீரகம் இல்லாத சமையலறை இல்லை எனலாம். அந்த அளவிற்கு இந்திய சமையலில் சீரகம் அதன் ஆரோக்கியத்திற்காக
பயன்படுத்தப்படுகிறது.
சீரகம் இன்று நேற்றல்ல பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகவே இந்திய சமையலறையில் முக்கிய மசாலா பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. வெறும் வாசனை பொருளாக மட்டுமின்றி இயற்கை மூலிகையான சீரகம் நமது
உடலை பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது.
பொதுவாக, நமக்கு வயிற்றில் அசௌகரியம் இருந்தால், பெரியவர்கள் உடனடியாக சீரகத்தை மென்று சாப்பிடவோ அல்லது சீரகத்தண்ணீரை அருந்தவோ அறிவுறுத்துவார்கள். அஜீரணம், வயிற்றுப்போக்கு மற்றும் வாயு தொல்லை போன்றவற்றிலிருந்து உடனடி நிவாரணம் தரக்கூடியதாக உள்ளது.

சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை கற்களையும் கரைக்க வல்லதாகவும், கண் பிரச்சனைகளுக்கும் தீர்வு காணவும் கூட சீரகத்தில் மருத்துவ நன்மைகள் நிறைந்துள்ளன.
சீரகத்தில் உள்ள சத்துக்கள் என்ன?
சீரகத்தில் வைட்டமின் ஏ, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. நமது தினசரி நார்ச்சத்து தேவையில் நான்கில் ஒரு பங்கு ஒரு கிராம் சீரகத்தில் உள்ளது. ஆன்டிபாக்டீரியல் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்களும் சீரகத்தில் உள்ளன. சீரகத்தை தூள் வடிவில் அல்லது சீரக விதைகள் வடிவில் பயன்படுத்தலாம்.
சீரகத்தின் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள்:

சீரகத்தில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது உடலுக்குள் நுழைந்து உங்களை நோய்வாய்ப்படுத்தும் பாக்டீரியாக்களை அழிக்கிறது. ஈகோலை பாக்டீரியா போன்ற ஃபுட் பாய்ஷனை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளை கொல்லக்கூடிய சக்தி சீரகத்தில் உள்ளது. அதனால் தான் சீரகம் வயிற்று வலிக்கு மருந்தாக கருதப்படுகிறது.
சீரகம் வாயுத்தொல்லையை தடுக்கும்:
வயிறு உபசம், வாயு தொந்தரவு, எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி (IBS) ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சீரகத்தை மென்று விழுங்குவதன் மூலமாகவோ அல்லது சீரக டீ பருகுவதாலோ உடனடி நிவாரணம் பெறலாம். சீரகம் செரிமானத்தை மேம்படுத்தவும்
பயன்படுகிறது.
கொலஸ்ட்ரலைக் கட்டுப்படுத்தும்:
சீரகம் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுவதாக பல்வேறு ஆய்வு முடிவுகள் உறுதிபடுத்தியுள்ளன.
சீரகப் பொடியை தயிரில் சேர்த்து சாப்பிட்டால் கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடுகள் குறைவது மட்டுமின்றி நல்ல
கொலஸ்ட்ராலையும் அதிகரிக்கும் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
சர்க்கரை நோய்க்கு மருந்தாகும் சீரகம்:
சீரகம் நீரிழிவு நோயின் அறிகுறிகளையும் விளைவுகளையும் குறைக்கிறது. இது ஆண்டிடியாபெடிக் மருந்துகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
உங்கள் உடல் இன்சுலினுக்கு பதிலளிக்கும் விதத்தை பாதிப்பதன் மூலம் சீரகம் யூரியா அளவையும் குறைக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்துள்ளனர். மேலும், இது இரத்த சர்க்கரை அளவை சாதாரண வரம்பில்
வைத்திருப்பதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
புற்றுநோய்க்கு சிறந்த மருந்து:
புற்றுநோய் உடலின் செல்களில் தொடங்கி படிப்படியாகவும் வேகமாகவும் வளர்கிறது. இந்த அசாதாரண செல்களில் கட்டிகள் உருவாகின்றன. இந்த வகை கட்டிகளின் வளர்ச்சியை சீரகம் தடுப்பதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சீரகம் கல்லீரல் புற்றுநோய் மற்றும் பெரிய குடல் புற்றுநோய்க்கு பயனுள்ளதாக இருக்கும்.
எடையை கட்டுக்குள் வைக்க உதவும்:
தினமும் சீரக தண்ணீர் அல்லது சீரக டீ பருகுவது கொழுப்பை கட்டுக்குள் வைத்து உடல் எடையை பராமரிக்க உதவும் என பல்வேறு ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டியுள்ளன.
உடல் எடை அதிகம் இருப்பவர்கள் தொடர்ந்து சீரகத்தை சாப்பிட்டு வந்தால்,உடல் எடை கணிசமான அளவு குறைவதும் கண்டறியப்பட்டுள்ளது.
நிம்மதியான தூக்கத்திற்கு உதவும்:

சீரகத்தில் உள்ள எண்ணெய்கள் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை போக்கி, தூக்கத்தை தூண்ட உதவுகிறது. நீங்கள் தூக்கமின்மை பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்தால், சீரகத்தில் உள்ள மெலடோனின் தூக்கத்திற்கு உதவும் ஹார்மோன்களை ஒழுங்குபடுத்த உதவும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
வீக்கத்தைக் குறைக்கும்:

பல்வேறு காரணங்களால் உடலில் ஏற்படும் அழற்சியை போக்க சீரகம் அருமருந்தாக பயன்படுகிறது. வீக்கத்தை குறைக்க சீரகத்தில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்பு மற்றும் ஃபிளாவனாய்டுகள் உடலில் சக்தி வாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்களாக
செயல்படுகின்றன.
சீரகத்தால் பக்க விளைவுகள் உண்டா?
பொதுவாக சீரகத்தை அதிக அளவில் பயன்படுத்துவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது. சாதாரணமாக மனிதர்கள் 300 முதல் 600
மில்லிகிராம் வரை எடுத்துக் கொள்ளலாம். ஏதேனும் பக்க விளைவுகள் தோன்றினால் சீரகத்தின் அளவைக் குறைக்க வேண்டும்.
இது ஆண்களில் டெஸ்டோஸ்டிரோன் அளவைக் குறைப்பதாகவும், இதனால் கருவுறுதலை பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் கர்ப காலத்தில் பெண்கள் சீரகம் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Image Source: Freepik