இன்றைய டிஜிட்டல் யுகத்தில், தொலைபேசி, டாப் மற்றும் தொலைக்காட்சிகள், குழந்தைகளின் தினசரி வாழ்க்கையின் முக்கியமான பகுதியாக மாறி விட்டன. தினமும் அதிக நேரம் இந்த ஸ்கிரீன் சாதனங்களில் செலவிடும் குழந்தைகள், தூங்க வேண்டிய நேரத்தையும் தவிர்த்து விடுகிறார்கள். இது அவர்களின் உடல் வளர்ச்சி, மூளையின் செயல்பாடு மற்றும் மனநிலை ஆகியவற்றில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
தூக்கம் என்பது குழந்தைகளின் ஆரோக்கிய வளர்ச்சிக்கான அடிப்படை தேவையாகும். நல்ல உறக்கம் குழந்தையின் ஞாபக சக்தி, மனஅழுத்தத்தைக் குறைத்தல், நோயெதிர்ப்பு சக்தி மற்றும் கல்வி திறனை மேம்படுத்த உதவுகிறது. இதற்காக, பெற்றோர் சிறு வயதில் இருந்தே ஒரு திட்டமிட்ட மற்றும் எளிமையான படுக்கை நேர வழக்கத்தை அமைக்க வேண்டும்.
படுக்கும் நேரத்திற்கு முன்னர் ஸ்கிரீன் டைமைக் குறைத்து, புத்தகம் படித்தல், மெதுவான இசை கேட்பது போன்ற அமைதியான செயல்களில் ஈடுபடுத்துவது நல்லது. ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் தூங்கும் பழக்கம் வரும்போது, குழந்தையின் உடல் மணிக்கடிகாரம் ஒரே விதமாக செயல்பட்டு, நல்ல தூக்கம் கிடைக்கும். எனவே குழந்தைகளுக்கான படுக்கை நேர வழக்கத்தை எவ்வாறு உருவாக்குவது, அதை உருவாக்கும்போது நாம் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதை அறிந்து கொள்வோம்.
ஒரு நேரத்தை திட்டமிடுங்கள்
முதலில், உங்கள் குழந்தை எப்போது தூங்க வேண்டும் மற்றும் எப்போது எழுந்திருக்க வேண்டும் என்பதைத் தீர்மானியுங்கள். பின்னர், அந்த நேரத்திற்கேற்ப தினமும் ஒரே நேரத்தில் அவர்களை தூங்க வைக்க முயற்சி செய்யுங்கள். இவ்வாறு தொடர்ந்து செய்வதன் மூலம், குழந்தையின் உடல் ஒரு நிரந்தர தூக்க வழக்கத்திற்கு பழகும். அதேபோல், குழந்தையை நாள்தோறும் ஒரே நேரத்தில் எழுப்புங்கள். இது அவருக்குள் ஒரு உறுதியான நாளைத் தொடங்கும் பழக்கத்தை உருவாக்கும். முக்கியமாக, உங்கள் குழந்தையின் வயதின்படி அவர்களுக்குத் தேவையான தூக்க நேரத்தை புரிந்து கொண்டு, அந்த நேரம் முழுவதும் உறக்கத்திற்கு இடம் அளிக்க மறக்க வேண்டாம்.
வயதிற்கேற்ப தூக்க நேரம்
புதியதாகப் பிறந்த குழந்தைகள் ஒரு நாளில் சுமார் 18 முதல் 20 மணி நேரம் வரை தூங்க வேண்டும். 3 முதல் 6 மாதங்கள் குழந்தைகள் 16–18 மணி நேரம், 6 முதல் 12 மாதங்கள் குழந்தைகள் 12–16 மணி நேரம், அதேபோல், 1 முதல் 2 ஆண்டுகள் வயதுடைய குழந்தைகள் 12–14 மணி நேரம், 3 முதல் 4 வயதுடைய குழந்தைகள் 8–14 மணி நேரம் தூங்க வேண்டிய அவசியம் உள்ளது. இந்த தேவையைப் பொருத்து அவர்களுக்கான தூக்கச் சுற்றுவட்டத்தை (sleep routine) உருவாக்குவது மிகவும் அவசியம்.
படுக்கை நேர வழக்கத்தை எவ்வாறு உருவாக்குவது?
* தினமும் இரவு தூங்குவதற்கு முன் குளிப்பதை ஒரு நல்ல பழக்கமாக உருவாக்குங்கள். இது குழந்தைக்கு சுத்தம் மட்டுமல்ல, அமைதியையும் தரும்.
* இரவுக்கு ஏற்ற வசதியான மற்றும் மென்மையான ஆடைகளை அணியச் செய்வது, குழந்தை தூங்குவதற்கு இலகுவாக்கும்.
* தொட்டில் அல்லது ஊஞ்சலுக்கு பதிலாக, மென்மையான, பாதுகாப்பான படுக்கை குழந்தைக்கு ஏற்பாடு செய்யுங்கள்.
* படுக்கை நேரத்தில் ஒரு சிறிய கதை சொல்லலாம் அல்லது மென்மையான தாலாட்டு பாடல்களை பாடலாம்.
* அறையில் அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்த, விளக்குகளை மங்கலாக வைத்து சத்தங்களை குறைக்கவும்.
* தூங்குவதற்கு முன் ஒரு குட்நைட் முத்தம் அல்லது கட்டிப்பிடிப்பு உங்கள் குழந்தைக்கு நெருக்கம் மற்றும் பாதுகாப்பு உணர்வை தரும். இது அமைதியான தூக்கத்திற்கு மிக உதவியாக இருக்கும்.
* மேலும், பல் துலக்கும் பழக்கத்தை நாளுக்கு இருமுறையாவது (காலை, இரவு) கட்டாயமாக வளர்த்திடுங்கள். இது சிறு வயதில் dental hygiene-ஐ உருவாக்கும் முக்கியமான அடிக்கட்டு.
குறிப்பு
தூக்கம் என்பது குழந்தையின் முழுமையான வளர்ச்சிக்குத் தேவையான அடிப்படை கூறாகும். அதை தவிர்த்துவிட முடியாது. எனவே, இன்று முதல் உங்கள் குழந்தைக்கான ஒரு சீரான, அமைதியான படுக்கை நேர வழக்கத்தை உருவாக்க தொடங்குங்கள். ஆரோக்கியமான நாள்களுக்கு இது ஒரு சிறந்த முதற்படி.