இந்தியாவில் சராசரியாக 22 சதவீத குழந்தைகள் குண்டாக உள்ளனர். ஃபாஸ்ட்புட், ஜங்க் புட் ஐட்டங்களை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதாலும் உடலுக்கு பயிற்சி அளிக்காமல் அதிக நேரம் உட்கார்ந்தே இருப்பதாலும் இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஓடியாடி விளையாடாமல் டிவி, கம்யூட்டர் என அடைந்து கிடைப்பதாலும், அதிக அளவு பாஸ்ட் ஃபுட் உணவுகளை உட்கொள்வதாலும் 20 சதவிகித குழந்தைகள் உடல்பருமன் நோய்க்கு ஆளாகிவருவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் சிறுவயதிலேயே இதயநோய், நீரிழிவு நோய்க்கு ஆளாக நேரிடும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். ஒபிஸிட்டி இன்று இந்தளவுக்கு அதிகரித்து வருவதற்குக் காரணம், மாறிவரும் வாழ்க்கை முறைதான் (Modified Lifestyle). ஒவ்வொரு வேளை, ஒவ்வொரு வகை உணவிலும் பலவித நன்மைகள் அடங்கியபடி வகுத்து வைத்த நம் முன்னோர்களின் உணவுப் பழக்கங்கள், இன்றைக்கு அடியோடு மாறிவிட்டன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் துரித உணவு என்று சொல்லப்படும் ஃபாஸ்ட் ஃபுட் உணவு வகைகளிடம் அடிமையாகிவிட்டனர். இதனால் பர்கர், கோலா பானங்கள், உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்ற ஜங்க் ஃபுட் வகைகள், உடலின் கொழுப்பை அதிகரிக்கச் செய்து, பலவிதமான நோய்களை இலவசமாகக் கொடுக்கின்றன.
நகர்ப்புறங்களில் வசிக்கும் குழந்தைகளில் 68% பேர் ஓடியாடி விளையாடுவதில்லை. வெளியே விளையாடும் வாய்ப்பு கிடைக்காமல், கம்ப்யூட்டர் கேம், வீடியோ கேம் என்று அதிக நேரம் உட்கார்ந்தே இருக்கின்றனர். பதின்பருவ சிறுவர்களில் 9 சதவீதத்தினர் தொப்பையுடன் இருக்கின்றனர். இளம் வயதில் தொப்பை விழுவது இன்சுலின் சுரப்பை நேரடியாக பாதித்து சர்க்கரை நோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. ஜங்க் ஃபுட் கலாச்சாரம் உணவு பழக்கம், உடற்பயிற்சி உள்ளிட்ட அன்றாட செயல்பாடுகளில் இருக்கும் குறைபாடுகள்தான் சர்க்கரை நோய்க்கு முக்கிய காரணம். இது பெரியவர்களை மட்டுமின்றி தற்போது சிறுவர்களையும் அதிகம் பாதிக்கிறது.
உடலுக்கு ஆரோக்கியமான பாரம்பரிய உணவுகளை விடுத்து நகர்ப்புற குழந்தைகள் கொழுப்பு சத்து. இனிப்பு அதிகம் உள்ள உணவு பொருட்கள், ஃபாஸ்ட்புட், ஜங்க் புட் நிறைய சாப்பிடுகின்றனர். இதுவே உடல்பருமனுக்கு காரணமாகிறது. குறையும் ஆயுட்காலம் இதனால் சிறுவயதிலேயே இவர்களுக்கு நீரிழிவு, அதிக ரத்த அழுத்தம், இதய நோய்கள் வரும் வாய்ப்பு அதிகம். சத்தான உணவு கொடுங்களேன் கொழு கொழுவென்று என்று இருக்கும் குழந்தைதான் ஆரோக்கியம் என்று கருதாமல் சத்தான உணவுகளை கொடுத்து குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்ப்பதோடு அவர்களுக்கு உடற்பயிற்சி செய்யவும் கற்றுக்கொடுங்களேன். இதனால் வருங்கால சமுதாயம் நோயற்ற சமுதாயமாக மாறும் என்கின்றனர் மருத்துவர்கள்.
எது உடல் பருமன்?
ஒருவருக்கு உடல் பருமன் உள்ளதா என்று தெரிவிப்பது, 'பாடி மாஸ் இன்டெக்ஸ்' ( Body Mass Index - BMI). இது 18.5-க்குக் கீழே இருந்தால், உடல் எடை குறைவு என்று பொருள். 18.5 முதல் 23.9 -க்குள் இருந்தால், சரியான உடல் எடை. 24 – 29.9 என்று இருந்தால், அதிக உடல் எடை. 30-க்கு மேல் என்றால் அது உடல் பருமனைக் குறிக்கும்
உடல் பருமனுக்கு காரணம் என்ன ?
எண்ணெயில் வறுத்த, பொரித்த கொழுப்புள்ள உணவு வகைகளை அதிகமாக உண்பது, சோம்பலான வாழ்க்கை முறை, உடலியக்கம் குறைவது, உடலுழைப்பு/உடற்பயிற்சி இல்லாதது, தைராய்டு பிரச்சினை போன்றவை உடல் பருமனைச் சீக்கிரமே அதிகரித்துவிடும். ஆண்களைவிடப் பெண்களுக்கு உடல் பருமன் பிரச்சினை அதிகம். காரணம், தற்போது பெண்களிடையே உடல் உழைப்பு பெரிதும் குறைந்துவிட்டது. உட்கார்ந்துகொண்டே வேலை செய்யும் பணிகளில் ஈடுபடும் பெண்கள்தான் அதிகம்.
உடல் பருமனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் என்ன?
உடல் பருமன் காரணமாக உடலில் ஏற்படும் பாதிப்புகள் பல. அவற்றுள் முக்கியமானவை: டைப் 2 சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, மூச்சுத் திணறல், மூட்டு வலி, முதுகு வலி, இடுப்பு வலி, குதிகால் வலி, மார்பகப் புற்றுநோய், குடல் புற்றுநோய், பித்தப்பைக் கற்கள், குடலிறக்கம், குறட்டை, ‘ஸ்லீப் ஏப்னியா’ எனும் உறக்கச் சுவாசத் தடை, மலச்சிக்கல், மலட்டுத்தன்மை, மாதவிலக்குப் பிரச்சினைகள், சினைப்பை நீர்க்கட்டி, மூலநோய், மனச்சோர்வு.
எடையைக் குறைக்க என்ன வழி?
- உடல் பருமனுக்குக் காரணம் தெரிந்து, அதற்கான வழிமுறைகளைப் பின்பற்றுவது நல்லது. மேலும் உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகிய இரண்டு விஷயங்களில் கவனம் செலுத்தினால் உடல் எடையைக் குறைப்பது எளிது. ஓர் உணவியலாளர் உதவியுடன் உங்கள் BMI-க்குத் தகுந்த கலோரிகளைக் கணக்கிட்டு, அதற்கேற்ப உணவைச் சாப்பிடுங்கள்.
- உணவைப் பொறுத்தவரைச் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், அதிக மாவுச்சத்து, கொழுப்பு, எண்ணெய் உள்ள உணவு வகைகள், பானங்களைத் தவிர்க்க வேண்டும். கொழுப்புள்ள உணவைத் தேவைக்கு மேல் சாப்பிட நேர்ந்தால், உடனுக்குடன் வேலையோ-உடற்பயிற்சியோ செய்து அதை எரித்துவிட வேண்டும்.
- உண்ணும் உணவுக்கேற்ப நடைப்பயிற்சி, உடற்பயிற்சி என ஏதாவது ஒரு பயிற்சியை மேற்கொண்டு, உடலில் கொழுப்பு சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
- நீர்ச்சத்து அதிகமுள்ள வெண்பூசணி, சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவை சாப்பிடலாம். காலையில் பல் துலக்கிய பின் வெறும் வயிற்றில் வெந்நீரில் எலுமிச்சைச் சாறு, சிறிதளவு உப்பு சேர்த்துக் குடிக்கலாம்.
- மாவுச்சத்து அதிகமுள்ள அரிசி சாதம், இட்லி, தோசை போன்றவற்றைக் குறைத்து, சப்பாத்தி மற்றும் காய்கறி உணவாக எடுத்துக் கொள்ளலாம். வெங்காயம் மற்றும் பூண்டை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொள்ளலாம்
அதிக எடையை உடனே குறைக்க கூடாது:
உடல் எடையை மாதம் ஒரு கிலோ/ இரு கிலோ என்ற அளவில் தான் குறைக்க வேண்டும் என்கிறார், மூத்த நியூட்ரிஷனிஸ்ட் சீலா பால். ஒரே மாதத்தில் 10 முதல் 20 கிலோ குறைக்கலாம் என்ற எண்ணமெல்லாம் வேண்டாம். இது உடலில் மற்ற பாதிப்புகளை உண்டாக்கும்.
Image Source: Freepik