பொதுவாக, கர்ப்ப காலம் என்றாலே பெண்கள் தங்கள் உடலில் பல்வேறு மாற்றங்களை சந்திக்கின்றனர். கர்ப்பிணி பெண்கள், தங்களது உடல் ஆரோக்கியம் மட்டுமல்லாமல், வயிற்றில் இருக்கும் குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. மேலும் அவர்கள் இந்த காலகட்டத்தில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனெனில், சிறிய தவறுகள் கூட தாய் மற்றும் சேய் இருவரின் ஆரோக்கியத்தையும் பாதிக்கக்கூடும்.
கர்ப்பிணி பெண்கள் பிரசவத்தின் போதும், தாய்ப்பால் கொடுக்கும் போதும் தங்களது எலும்புகளில் மாற்றத்தை உணரக்கூடும். பொதுவாக இந்த காலகட்டத்தில் அவர்கள் எலும்புகள் பலவீனமடையலாம். இதில் கர்ப்ப காலம் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் போது எலும்புகள் ஏன் பலவீனமடைகிறது என்பதையும், அதை சரி செய்ய உதவும் குறிப்புகள் குறித்தும் ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பத்ரா அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அது பற்றி இதில் காண்போம்.
இந்த பதிவும் உதவலாம்: PCOS இருந்தாலும் குழந்தை பெற முடியுமா? Positive Result-க்கு மருத்துவர் கூறும் முக்கிய குறிப்புகள் இங்கே..
எலும்புகள் ஏன் பலவீனமடைகிறது?
ஊட்டச்சத்து நிபுணர் பத்ராவின் கூற்றுப்படி, “கர்ப்பம் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் போது, கால்சியம் உங்கள் குழந்தைக்கு செல்கிறது, ஹார்மோன்கள் குறைகின்றன, மேலும் எலும்பு அடர்த்தி பாதிக்கப்படுகிறது” என்று கூறினார்.
இவ்வாறு தாயிடமிருந்து குழந்தைக்கு கால்சியம் பரிமாறுவதன் காரணமாக தாயின் உடலில் கால்சியம் ஊட்டச்சத்துக்களின் அளவு குறைகிறது. மேலும் ஹார்மோன்கள் குறைகிறது. இது தவிர, எலும்பு அடர்த்தி பாதிக்கப்படுகிறது. அதாவது ஒவ்வொரு நாளும் 400 மி.கி வரை கால்சியம் தாய்ப்பால் வழியாக குழந்தைகளுக்குச் செல்கிறது. இவை தாயின் எலும்புகளை பலவீனப்படுத்துகிறது.
எலும்பு பலவீனத்தைச் சரிசெய்யும் வழிகள்
ராகி, எள், பால், தயிர் போன்றவற்றை அன்றாட உணவுகளில் சேர்ப்பதன் மூலம் எலும்பு பலவீனத்தைச் சரி செய்யலாம் என நிபுணர் அறிவுறுத்துகிறார். இது பற்றி விரிவாகக் காண்போம்.
ராகி - இதில் உள்ள அதிகளவிலான கால்சியம் ஊட்டச்சத்துக்கள் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. மேலும் இதில் இரும்புச்சத்து, புரதம் மற்றும் பிற அத்தியாவசிய தாதுக்களும் நிறைந்துள்ளன.
எள் - எள் விதைகளில் கால்சியம், மக்னீசியம் மற்றும் பிற தாதுக்கள் உள்ளன. இந்த எள் விதைகளை அன்றாட உணவில் சேர்ப்பது எலும்புகளின் அடர்த்தியை மேம்படுத்தவும், எலும்பு முறிவு ஏற்படும் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
பால் - எலும்பு பலவீனத்தைக் குறைப்பதில் பால் மிகவும் முக்கியமானதாகும். இதில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
தயிர் - தயிரில் கால்சியம், புரதம் மற்றும் வைட்டமின் டி போன்ற ஊட்டச்சத்துக்கள் எலும்புகளை வலுவாக மாற்றுகிறது.
பிரசவத்திற்குப் பிறகு குறைந்த ஈஸ்ட்ரோஜன்
நிபுணரின் கூற்றுப்படி, “பிரசவத்திற்குப் பிறகு ஈஸ்ட்ரோஜன் குறைவது, விரைவான எலும்பு முறிவுக்கு வழிவகுக்கக்கூடும்” என்று கூறியுள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: கர்ப்ப காலத்தில் குழந்தையின் நினைவாற்றலை மேம்படுத்த உதவும் குறிப்புகள்.. மருத்துவர் பரிந்துரைத்தது
குறைந்த ஈஸ்ட்ரோஜனை சரி செய்ய உதவும் வழிகள்
சோயா, டோஃபு, ஆளி விதைகள், முட்டை, பருப்பு போன்ற உணவுகளின் மூலம் பிரசவத்திற்குப் பிறகு ஈஸ்ட்ரோஜன் குறைவதை சரி செய்யலாம்.
சோயா, டோஃபு - சோயா மற்றும் டோஃபுவில் உள்ள பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் உடலில் ஈஸ்ட்ரோஜன் போன்ற பண்புகளைக் கொண்டுள்ளது. இதை உணவில் சேர்ப்பதன் மூலம், ஈஸ்ட்ரோஜன் அளவை இயற்கையாக அதிகரிக்கலாம்.
ஆளி விதைகள் - ஆளி விதைகளிலும் பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் உள்ளது. இது ஈஸ்ட்ரோஜன் அளவை சமநிலைப்படுத்தி, மாதவிடாய் சுழற்சியை சீராக்கவும், இனப்பெருக்க ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
View this post on Instagram
எலும்பு மறுஉருவாக்கம்
தாய்மார்கள், குழந்தைகளுக்கு பாலூட்டும் போது கால்சியத்தை வெளியிட உடல் அதன் சொந்த எலும்பை உடைக்கிறது. இந்த உடைந்த எலும்பை மறு உருவாக்கம் செய்ய என்ன சாப்பிடலாம் என்பதைக் காணலாம்.
சாப்பிட வேண்டியவை
கீரை, கேல், மோரிங்கா, பூசணி விதைகள், பாதாம் போன்ற உணவுகள் எலும்பு மறு உருவாக்கத்திற்கு உதவுவதாக நிபுணர் கூறுகிறார்.
கீரை, கேல் - சில இலைக்கீரைகள் குறிப்பாக, எலும்பு ஒட்டி கீரை என்றழைக்கப்படும் கூரைவாள் கீரை எலும்பு மறு உருவாக்கம் செய்ய உதவுகிறது.
பூசணி விதைகள் - இதில் உள்ள தாதுக்கள் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், எலும்புகளை உறுதியாக்கவும் உதவுகிறது.
பாதாம் - பாதாமில் எலும்பு மறுஉருவாக்கம் செய்ய உதவும் கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
மோசமான கால்சியம் உறிஞ்சுதல்
வைட்டமின் டி இல்லாமல், கால்சியம் உட்கொள்ளல் கூட எலும்புகளுக்கு போதுமானதாக இருக்காது.
சரி செய்ய வழிகள்
சால்மன், மத்தி, முட்டையின் மஞ்சள் கரு, செறிவூட்டப்பட்ட பால், சூரிய ஒளி போன்றவற்றை நிபுணர் பரிந்துரைக்கிறார்.
இவை அனைத்திலும் உள்ள வைட்டமின் டி ஊட்டச்சத்துக்கள் கால்சியம் உட்கொள்ளலுக்கு வழிவகுக்கிறது. இவற்றை உணவில் சேர்ப்பதன் மூலம் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
நினைவில் கொள்ள வேண்டியவை
கர்ப்பத்திற்குப் பிறகு எலும்பு ஆரோக்கியம் என்பது கால்சியம் மாத்திரைகளைப் பற்றியது மட்டுமல்லாமல், முழு ஊட்டச்சத்து நிறைந்த உணவு முறைகளைப் பற்றியதாகும்.
இந்த பதிவும் உதவலாம்: கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புகளை மேம்படுத்த பின்பற்ற வேண்டிய ஆரோக்கியமான வாழ்க்கை முறை..
Image Source: Freepik