Super Foods: ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உணவு முறை என்பது மிக அவசியம். உணவே மருந்து என பெரியோர்கள் கூறுவது உண்டு. ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் பல நோய்களும் ஏற்படுவதற்கு காரணமே உணவுதான். உணவையே மருந்தாக சாப்பிட்ட காலம் முடிந்து சில உணவுகள் சாப்பிட்டதால் மருந்துகள் சாப்பிட வேண்டிய காலம் வந்துவிட்டது.
ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு உணவு மிக முக்கியம். ஆரோக்கியமான நபர்களை பார்த்தால் உடனே நாம் சிந்திப்பது அவர்களிடம் பணம் உள்ளது சத்தான உணவை தேடித்தேடி வாங்கி சாப்பிடுவார்கள் என்றுதான். விஷயம் அப்படி அல்ல, ஆரோக்கியமான நபர்கள் ருசிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் சத்தான உணவுக்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சத்தான உணவுகள்
ஆரோக்கியமான உணவு உயர்விலையில் மட்டுமல்ல குறைந்த விலையிலும் நாம் எளிதாக அணுகக் கூடிய வகையிலும் கிடைக்கும். நாம் அதை கண்டு கொள்வதில்லை அவ்வளவு தான். சரி நாம் எளிதாக அணுகக் கூடிய உணவு வகைகளை இப்போது பார்க்கலாம்.
ஆரோக்கியமான உணவு வகைகள்

மஞ்சள்
இந்திய சமையலறையில் இருக்கும் மிக சத்தான பொருள்களில் ஒன்று மஞ்சள். அதேபோல் இதன் அழற்சி எதிர்ப்பு பண்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளால் அமெரிக்காவிலும் இதற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.
மஞ்சள் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். இது உங்கள் உணவில் இடம்பெற்றிருப்பதை உறுதி செய்வது மிக அவசியம்.
டார்க் சாக்லெட்
கோகோ உள்ளீடு ஒரு சாக்லேட்டில் 70 சதவீதத்திற்கு அதிகமாக இருக்கும்பட்சத்தில் அது இனிப்பு உணவு என்பதற்கு பதிலாக ஆரோக்கியமான உணவாக மாறும். கோகோ பவுடரில் ஆக்ஸிஜனேற்றம் நிரம்பியுள்ளது. இது வயதான எதிர்ப்பு பண்புகளை கொண்டிருக்கிறது.
சிறுநீரக செயல்பாட்டிற்கு தேவையான எலக்ட்ரோலைட் டார்க் சாக்லேட்டில் அதிகம் உள்ளது. டார்க் சாக்லேட் இதயத்திற்கு நல்லது என கருதப்படுகிறது. இது இரத்த நாளங்களின் செயல்திறனை மேம்படுத்தவும் இரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவும்.
தயிர்
தயிர் சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது, ஏனெனில் அதில் நல்ல பாக்டீரியாக்கள் நிறைந்துள்ளன. இந்த பாக்டீரியாக்கள் சரியான செரிமானத்திற்கு உதவும் சக்தி கொண்டது. கூடுதலாக, தயிரில் கால்சியம் மற்றும் உங்கள் எலும்புகளை வலுப்படுத்தும் பிற ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன.
நாம் அன்றாடம் சந்திக்கும் தயிரில் இவ்வளவு நன்மைகள் இருக்கிறது என்றால் நம்பமுடிகிறதா? இனி சற்றும் யோசிக்காமல் தயிரை சாப்பிடுங்கள்.
மாதுளை
மாதுளை ஒரு பிரகாசமான சிவப்பு பழமாகும், இது வெளிப்புறத்தில் எளிமையானதாக தோன்றுகிறது. ஆனால் நூற்றுக்கணக்கான சிறிய, உண்ணக்கூடிய விதைகள் இதில் உள்ளது. மாதுளையில் உள்ள பல ஆரோக்கிய நன்மைகள் காரணமாக இது ஒரு சூப்பர்ஃபுட் என்றும் அழைக்கப்படுகிறது.
மாதுளை இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது. மாதுளை சாப்பிட்டால் மருத்துவரை சந்திக்க வேண்டிய தேவையே இருக்காது.
சால்மன் மீன்
நாம் சாப்பிட வேண்டிய ஆரோக்கியமான உணவுகளில் சால்மன் மீன் ஒன்றாகும். ஒமேகா-3 கொழுப்புகள் இதில் நல்ல அளவு உள்ளது.
இது குறைந்த விலை மீன்களில் ஒன்றாகும். ஒளிரும் தோல், மூளை வளர்ச்சி, புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள் இதில் அதிகம் உள்ளது. அசைவ பிரியர்கள் தாராளமாக சால்மன் மீனை தேடி வாங்கி சாப்பிடலாம்.
கீரை வகைகள்
உங்கள் உடல் எடையை கட்டுக்குள் வைக்கவும், முழு உடலுக்கு தேவையான புரதச் சத்தை வழங்கவும் கீரைகள் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பிட்டு இந்த கீரை என்று கூற வேண்டியதில்லை. ஒவ்வொரு வகையான கீரையை தினசரி ஒன்று என்ற வீதம் தாராளமாக சாப்பிடலாம். இது ஒரு கட்டு ரூ.10 முதல் கிடைக்கும்.
தண்ணீர் பழம்
தர்பூசணியில் சுமார் 90% நீர்ச்சத்து உள்ளது. இதை கோடையில் சாப்பிடுவது மிக நல்லது. உடலை நீரேற்றமாக வைக்க தர்பூசணி பேருதவியாக இருக்கும். அதேபோல் தண்ணீர் பழத்தில் அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது உடலில் இருந்து ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்ற உதவுகிறது.
வால்நட்
வால்நட் என்றவுடன் இது விலையுயர்ந்த பொருள் என்று சிந்திக்க வேண்டாம். மொத்தமாக வாங்கும் போது விலை உயர்ந்ததாக இருந்தாலும் தினசரி 1 அல்லது 2 என்ற வீதம் சாப்பிட்டு வந்தால் இது விலை குறைவுதான்.
வால்நட் மனதை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இது உங்கள் மூளையின் சக்தியை அதிகரிக்கின்றன.
வாழைப்பழம்
தினசரி வாழைப்பழம் சாப்பிடுவது செரிமான அமைப்பை மேம்படுத்த உதவும். குடல் ஆரோக்கியம் என்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் முக்கியம். வாழைப்பழம் குடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இதன் விலையும் மிக குறைவுதான்.
நேரடியாக விலை உயர்ந்த பழத்தை தான் சாப்பிடுவேன் என்று எண்ண வேண்டியதில்லை. தினசரி ஒரு வாழைப்பழம் சாப்பிடுங்கள். இது உங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலையும் வழங்கும்.
முட்டைக்கோஸ், சிக்கன் மார்பக இறைச்சி, பூண்டு
முட்டைக்கோஸா என்று ஆச்சரியப்பட வேண்டாம். இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. முட்டைக்கோஸ் சில புற்றுநோய்களையும் தடுக்க உதவும் என கூறப்படுகிறது. இது மலிவான எளிய காய்கறியாகும்.
சிக்கன் மார்பக இறைச்சி மிக சக்தி வாய்ந்தது. சிக்கன் சாப்பிடுவது அசைவ பிரியர்களுக்கு மிக பிடிக்கும். ஆனால் நீங்கள் அதன் கால் பகுதி உள்ளிட்டவற்றை சாப்பிடுவதற்கு பதிலாக மார்பக இறைச்சியை சாப்பிடுவது நல்லது. இதில் புரதம் கொலாஜன் அதிகமாக உள்ளது.
சிறிய அளவு பூண்டில் நிறைந்த சத்துக்கள் உள்ளது. இது வயிறு, புரோஸ்டேட், பெருங்குடல் புற்றுநோய்களை தடுக்க பெரும் உதவியாக இருக்கும். இதேபோல் பல நன்மைகள் பூண்டில் உள்ளது.
Image Source: FreePik